தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டிர்கள்?
அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை அன்னை சோனியா காந்தி அவர்கள் திறந்து வைத்தபோது, எனது நினைவிற்குச் சில நிகழ்ச்சிகள் வந்தன.
1961ல் சென்னை மாநகராட்சியை , தி.மு.க. வென்ற நேரத்தில் தி.மு.க. சார்பில் சென்னை ஜிம்கானா கிளப் முன்பு பெருந் தலைவர் காமராசர் சிலையை, பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் திறந்து வைத்தார்கள்.
2018ல் இன்று, அதே நேரு குடும்பத்தைச் சார்ந்த அன்னை சோனியா அவர்கள், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைத்திருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு ஆகும்.
நான் இன்று மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், தமிழர்களின் வாழ்விலும், வளர்ச்சியிலும் இது ஒரு முக்கியமான நாள். எனது வாழ்விலும் மறக்க முடியாத நாள்.
நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம், தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணாவினுடைய பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய தினம், நம்முடைய தலைவர் கலைஞர் பிறந்தநாள்,அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட நாள் ஆகியவை நாம் மறக்க முடியாத நாட்கள். அந்தப் புகழ்மிக்க வரிசையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்ட இந்த நாளும் இணைந்திருப்பதை எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்
இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான நாள் மட்டுமல்ல, எனது வாழ்விலும் முக்கியமான நாள் என்று நான் ஏன் சொல்கிறேன் என்றால், தந்தை பெரியாரின் கனவை நாம் நிறைவேற்றி இருக்கிறோம்!
1968 ஆம் ஆண்டு தலைவர் கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்தான். சிலையைத் திறந்து வைக்க அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒப்புக்கொண்டார். ஆனால் தமக்குச் சிலை அமைக்க வேண்டாம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
அதற்குப்பிறகு கலைஞருக்குச் சிலை வைத்தே ஆகவேண்டும் என்று ‘விடுதலை’ நாளிதழில் 1968-ஆம் ஆண்டு பெரியார் அவர்களே தலையங்கம் எழுதினார். ‘சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன்’ என்றும் பெரியார் அவர்கள் சொன்னார்கள். அண்ணா அவர்களின் உடல்நலக்குறைவு, மறைவு ஆகியவற்றால் அந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
1971ஆம் ஆண்டு, பெரியார் அவர்கள் தலைவர் கலைஞருக்கான சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினார்கள். சிலை அமைக்கும் குழுவின் புரவலராகப் பெரியார் இருந்தார். தலைவராகத் தவத்திரு குன்றக்குடி அடிகளார் இருந்தார். துணைத் தலைவராக இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருந்தார்கள்.
பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் முயற்சியால் கலைஞருக்கு எல்.ஐ.சி. அருகில் சிலை திறந்து வைக்கப்பட்டதும் – அதன் பிறகு நடந்த நிகழ்வுகளும் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். அந்தப் பிரச்னைக்குள் நான் அதிகம் செல்ல விரும்பவில்லை. அது தேவையும் இல்லை.
இன்றைய தினம் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் அருகில் ஓய்வெடுத்துவரும் தலைவருக்கு, நாளெல்லாம் அண்ணா அண்ணா என்று உள்ளம் உருகிய தலைவருக்கு, அண்ணா சாலையில் – அண்ணா அறிவாலயத்தில் – அண்ணா சிலைக்கு அருகில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
‘‘வீடுவரை உறவு,
வீதிவரை மனைவி,
காடுவரை பிள்ளை,
கடைசிவரை யாரோ!’’
– என்று எழுதினார் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
ஆனால், அண்ணாவுக்குக் கடைசிவரை கலைஞர்தான்! கலைஞர்தான்! கலைஞர் தான்!
தலைவர் கலைஞர் அவர்களை இழந்து இன்றுடன் 128 நாட்கள் ஆகின்றன. காலையிலே கோபாலபுரம் செல்லும்போதும், அங்கிருந்து முரசொலி அலுவலகம் செல்லும்போதும், அதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயம் வரும்போதும், மீண்டும் மாலையில் அறிவாலயம் வரும்போதும் கலைஞர் நம்மோடு இருக்கிறார், இன்றைக்கும் நம்மை இயக்குகிறார், அவர் மறைய வில்லை, மறையவே இல்லை என்ற உணர்வு தான் என் உயிரில் ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்கோ மறைந்து நின்று இன்றைக்கும் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம்தான் எனக்கு எப்போதும் இருக்கிறது.
‘எனக்கு அக்காள்கள்தான் உண்டு, அண்ணன் இல்லை, ஆனால் அண்ணனாக நான் கருதுவது பேராசிரியரைத்தான்’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை பேராசிரியர், பேராசிரியர் என்று அழைப்பீர்களே, தலைவர் அவர்களே! உங்கள் பேராசிரியர் அவர்கள் முன்னிலையில்தான் அண்ணா அறிவாலயத்தில் விழா நடைபெற்றது; நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்?
உங்களால் சொக்கத்தங்கம் என்று வர்ணிக்கப்பட்ட சோனியா காந்தி அம்மையார் அவர்கள் டெல்லியிலிருந்து இங்கே வந்து அமர்ந்து இருக்கிறார். தலைவர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?
என்னுடைய தந்தையைப் போன்றவர் தலைவர் கலைஞர் என்று உங்களைப் பாராட்டிச் சொன்ன சோனியா அவர்கள் இங்கே இருக்கிறார்; தலைவர் கலைஞர் அவர்களே எங்கே போய்விட்டீர்கள்?
‘போராட்டக் குணம் படைத்தவர் தலைவர் கலைஞர்’ என்று உங்களுக்குப் புகழாரம் சூட்டியிருக்கிறாரே இந்தியாவின் இளந்தலைவர் ராகுல் காந்தி தலைவர் கலைஞர் அவர்களே, எங்கே போய்விட்டீர்கள்?
1999ம் ஆண்டுகளில் டெல்லியில் கூட்டணி ஆட்சி நடந்தபோது பல்வேறு சிக்கலான நேரங்களில் எல்லாம் நல்லெண்ணத்துடன் உங்களுடன் இருந்து செயல்பட்ட ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இங்கே இருக்கிறார்; தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?
உங்களின் சமூகநீதிக் கனவுகளைக் கேரள மாநிலத்தில் அமல்படுத்திவரும் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் இங்கே இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?
டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்து உங்களது ஆலோசனைகளை பெற்றுச் செயல்பட்ட புதுவை மாநில இன்றைய முதல்வர் நாராயணசாமி இங்கே இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்களே, நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்?
நீங்கள் எங்கும் போகவில்லை. போகவும் மாட்டீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் உள்ளத்தில் சிம்மாசனம் போட்டு இங்குதான் இருக்கிறீர்கள்.