வரலாற்றுக் குறிப்புகள்

1924

03.06.1924

சுதந்திர விடியலை எதிர்நோக்கி காத்துக்கிடந்த சென்னை மாகாணத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்த திருக்குவளையில் முத்துவேலருக்கும் – அஞ்சுகம் அம்மையாரருக்கும் மகனாய் பிறந்தவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்

1938

திருவாரூர் உயர் நிலைப்பள்ளியில் பயின்றபொழுது ‘வாருங்கள் எல்லோரும் இந்திப் போருக்கு’ என அழைத்து  தமிழகததில் இந்தியை திணிக்க முயன்ற இராஜாஜி சர்க்கார் மிரளும் வண்ணம் இந்தி எதிர்ப்பு போரை துவங்கினார்.

1941

மாணவர் மன்றம் என்கிற அமைப்பை துவங்கி அதன் தலைவராக செயல்பட்டார். அந்த மன்றமே திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்கிற சிறப்பை பெற்றது.

1942

கலைஞர் அவர்கள் தன் உயிரினும் மேலாக கருதிய காஞ்சித்தலைவன் அறிஞர் அண்ணா அவர்களுடனான முதல் சந்திப்பு நடைபெற்றது.

1942

10.08.1942

கலைஞரின் மூத்த பிள்ளையாக வளர்ந்து திராவிட இயக்கத்தின் கொள்கை முரசாக விளங்கி வரும் ‘முரசொலி’  நாளிதழ் மாத இதழாக தொடங்கப்பட்டது.

1944

28.05.1944 பேபி டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட  திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் தன்னுடைய முதல் நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன் ‘  நாடகத்தை அரங்கேற்றினார்.

1945

பெரியாரின் ‘குடியரசு’ வார இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார்.

1946

முதல் திரைப்படமான  ‘இராஜகுமாரி’ க்கு கதை வசனம் எழுதினார்.

1949

17.09.1949

சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில்  திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் துவங்கினார்.. அண்ணாவின் படைத்தளபதியாக விளங்கிய கலைஞர் அவர்கள் கழகத்தின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1951

திரைப்படப் பணி , கட்சிப்பணி ஆகியவற்றிற்கு இடையேயும் பத்திரிக்கைத்துறையில் தீராக் காதல் கொண்ட கலைஞர் அவர்கள் ‘மாலைமணி’ இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.

1951

டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தி.மு.கழக முதல் மாநில மாநாட்டின்  இரண்டாம் நாள் அறிஞர் அண்ணா அவர்களே வியக்கும் வகையில் சொற்பொழிவாற்றினார்.

1953

04.01.1953 நெசவாளர்களின் துயர்துடைக்க – தேங்கிக் கிடந்த கைத்தறித் துணிகளை,  சென்னையில் தோளில் சுமந்து வீதி வீதியாக சென்று விற்றார்.

1953

15.07.1953

வட நாட்டு தொழில் அதிபரின் பெயரில் அழைக்கப்பட்டு வந்த டால்மியாபுரம் என்பதை தமிழில் கல்லக்குடி எனப் பெயர் மாற்றம் செய்யக்கோரி போராட்டம் நடத்தியதால்  கைது செய்யப்பட்ட கலைஞர் அவர்கள் , 6 மாத கால சிறைவாசத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

1957

1957 நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருச்சி மாவட்டம் குளித்தலைத் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார். 

1957

04.05.1957 சட்டமன்ற உறுப்பினராக தன்னுடைய முதல் உரையில் நங்கவரம் விவசாயிகளின் போராட்டம் பற்றி எடுத்துரைத்தார்.

1960

25.09.1960 ஆல விருட்சமாக கோலோச்சிக்கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக தலைமைக் கழக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962

1962ட்டமன்ற தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் வெற்றி பெற்ற கலைஞர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1963

1963 கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பொழுது, தமிழ் மொழியைக் காத்திட தலைமைக் கழகத்தால் இந்தி எதிர்ப்புப் போராட்டக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

1964

1964 சென்னை மாநகராட்சித் தேர்தல் பணிக்குழுத்தலைவராகப் பொறுப்பேற்று வெற்றிகண்ட கலைஞரைப் பாராட்டி நடைபெற்ற வெற்றி விழாக் கூட்டத்தில் அண்ணா அவர்கள் கணையாழி பரிசளித்தார்.

1964

15.06.1964 கலைஞர் அவர்கள் தி.மு. கழகப் பொருளாளராக இருந்தபோதுதான் சென்னை தேனாம்பேட்டையில் கழக இளைஞரணி அலுவலகமாக விளங்கிவரும் ‘அன்பகம்’ கழகத்திற்காக வாங்கப்பட்டது.

1965

16.02.1965 மொழிப்போரின் பொழுது இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

1966

18.09.1966 கட்சிப்பணி, மொழிப்போர், சிறைவாசம் போன்ற பல இன்னல்கள் இருந்தபோதும் தன்னுடைய ‘காகிதப்பூ’ எனும் நாடகத்தை அரங்கேற்றினார். 

1967

1967 டிசம்பர் 29, 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் சென்னையில்  நடைபெற்ற தி.மு.க. 4வது மாநில மாநாட்டில் – அண்ணாவிடம் ரூ.11 இலட்சத்தை தேர்தல் நிதியாக வழங்கி பிரம்மிக்க வைத்தார்.

1967

06.03.1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதன்முறையாக அமைக்கப்பெற்ற திமு கழக ஆட்சியில் அண்ணாவின் அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவியேற்றார்.

1969

03.02.1969 திராவிட இனத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தார். அண்ணாவின் மறைவையொட்டி கலைஞர் அவர்கள் இதயத்தை இரவலாகத் தாருங்கள் அண்ணா என்று கசிந்துருகி கவிதை எழுதியிருந்தார்.

1969

09.02.1969 அண்ணாவின் மறைவை தொடர்ந்து சட்டமன்றக் கட்சித் தலைவராக திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு கலைஞர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு 10.02.1969  அன்று முதலமைச்சராக பதவியேற்றார்.

1969

27.07.1969 தி.மு கழகத்தின் 4-வது பொதுக்குழுவில் கலைஞர்  அவர்கள் முதன்முறையாக கழகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

1971

15.03.1971 சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கலைஞர் அவர்கள் தமிழக முதல்வராக இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்றார்.

1973

24.12.1973 திராவிட இயக்கத்தின் தூணாக விளங்கிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த பொழுது, சட்டத்தில் இடமில்லை என்ற போதும் அரசின் அறிவிக்கையாக வெளியிட்டு தனது ஆசான் பெரியாரின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஆணை பிறப்பித்தார்.

1974

1974 சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று கோட்டைக் கொத்தளத்தில் மாநில முதல் அமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை மத்திய அரசிடம் போராடிப் பெற்றுத் தந்தார்.

1977

1977 சட்டமன்ற தேர்தலில் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.

1979

1979 தமிழை மத்திய ஆட்சி மொழியில் இணைக்கக்கோரி கறுப்புக் கொடி ஊர்வலமும், கழகத் தோழர்கள் இல்லங்களில் கறுப்புக் கொடி ஏற்றிடவும் செய்தார்

1981

15.09.1981 ஈழத் தமிழர் நலனுக்காக போராடியதற்கு பரிசாய் மாநில அரசு கலைஞர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது.

1983

1983 இலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து  தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துச்சமென எண்ணி தூக்கியெறிந்தார். இன்று வரையில் ஈழத்தமிழருக்காக பதவியை துறந்த ஒரே தலைவர் கலைஞர் மட்டுமே என்றால் அது மிகையல்ல. 

1986

1986 இந்தி மொழி திணிப்பை எதிர்த்துப் போராடி அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவை எரித்ததால் கைது செய்யப்பட்டு சிறைதண்டனை பெற்றார்.

1987

15.09.1987 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமாக விளங்கிவரும் அண்ணா அறிவாலயத்தை  திறந்து வைத்து கழகத்திற்கு அர்பணித்தார்.

1989

27.01.1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று   3-வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

1989

28.03.1989 சமூக நீதிக் காவலராக விளங்கிய கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த பொழுது மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். 

1989

06.05.1989 ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் அனைத்து விதங்களிலும் சம உரிமைகள் வழங்கி, பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து புரட்சி ஏற்படுத்திய கலைஞர் அவரக்ள் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை தரும் சட்டத்தை நிறைவேற்றி பலரின் பாராட்டுக்களைப் பெற்றார்.

1990

25.05.1990 தென்பாண்டிச் சிங்கம் நூலுக்காகத் தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தின் ‘மாமன்னன் இராஜராஜன் விருது குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்களால் வழங்கப்பட்டது. மேலும் அவர் தங்கப் பேனா ஒன்றைப் பரிசாக அளித்து, முத்தமிழறிஞர் எனப்  பட்டம் வழங்கினார்.

1990

22.06.1990 மலைவாழ் மக்களுக்கு கலைஞர் அவர்கள் வழங்கிய 1 சதவீத இடஒதுக்கீட்டினால் தமிழகத்தில் மொத்த இடஒதுக்கீடு 69 சதவீதமாயிற்று.

1990

07.08.1990 கலைஞர்  அவர்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி மண்டல் கமிஷன்அறிக்கை ஏற்கப்பட்டு மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.

1991

30.01.1991 ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் அறிக்கை அளிக்க மறுத்தும் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனைப் பயன்படுத்தி, சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு தவறான குற்றச்சாட்டை சுமத்தி கலைஞர் அரசைக் கலைத்தது.

1996

1996 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வென்று திமு கழகம் அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்ற கலைஞர் அவர்கள்   4-வது முறை தமிழக முதலமைச்சர் ஆனார்.

1996

1996 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரசியல் சாணக்கியராக விளங்கிய கலைஞர் அவர்களின்  உதவியுடன் மத்தியில் தி.மு.க. உள்ளிட்ட 13 கட்சிகள் உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி ஆட்சி அமைந்தது

1997

27.7 1997 கழக அமைப்புகளுக்கு 10-வது தேர்தல் கலைஞர் ஏழாவது முறையாகத் தலைவர் ஆனார்.

1997

1997– எதிர்காலத்தை முன்கூட்டியே அறிவின் உதவியால் ஊகித்து செயல்படுபவனே உண்மையான தலைவன் அவ்வகையில் இந்தியாவில் முதல் “தகவல் தொழில்நுட்ப கொள்கை” வழங்கினார் தொலைநோக்காளர் கலைஞர்.

1997

1997– ஊரும் சேரியும் பிரிந்து கிடப்பதை ஒழிக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவை நினைவாக்கும் வகையில் ” சமத்துவபுரம்” உருவாக்கினார், ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்க “அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்”,  நமக்கு நாமே திட்டம் தொடங்கப்பட்டது.

1999

7,8.2.1999. பல்லாயிரம் ஆண்டு வரலாறு கொண்ட தமிழ் மொழியின் எதிர்காலம் இனி இணையத்தில் உள்ளது என்ற தொலைநோக்கு பார்வையுடன் ‘தமிழ்நெட் 99’ மாநாடு. தமிழ் இணைய மாநாடு நடத்தினார்.

2000

1.1.2000. முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் சாதி, மத, இன, வேறுபாடு அற்ற உலகப் பொதுமறையாம் திருக்குறள் கொடுத்த ‘அய்யன் திருவள்ளுவர் சிலை’ நிறுவி, தமிழர் தத்துவத்தை உலகுக்கு பறைசாற்றினார் கலைஞர்.

2000

8.4.2000 கழகத்தின் 11-வது பொதுக்குழு – கலைஞர் 8-வது முறை கழகத் தலைவராகத் தேர்வு.

2000

4.7.2000 தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் இன்றைய தலை சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்த கலைஞர் அதில் ஒரு பகுதியாக தரமணியில் “டைடல் பார்க்” திறந்தார் கலைஞர்.

2001

30.7.2001 செல்வி ஜெயலலிதா ஆட்சியில் நள்ளிரவில் மனிதாபிமானமற்ற முறையில் தலைவர் கலைஞர் கைது! தளராத போராட்டக்காரர் கலைஞர் சிறைக்கு வெளியே போராட்டத்தில் இறங்கினர். அன்றே விடுதலை பெற்றார்.

2001

13.12.2001 எந்த முன்னறிவிப்புமின்றி கடற்கரை காமராசர் சாலையில் வெறும் காழ்ப்புணர்ச்சி காரணமாக கண்ணகி சிலை அகற்றம்; கலைஞர், ‘கண்ணகி சிலையை அதே இடத்தில் வைக்கும்வரை தமிழர்களின் போராட்டம் ஓயாது’ என்றார்.

2003

2.4.2003 12-வது கழக அமைப்புகளுக்கான தேர்தல். 9-வது முறை தலைவராக கலைஞர் தேர்வு.

2003

30.9.2003 அண்ணா அறிவாலயத்தில், உடன்பிறப்புகளும், பொதுமக்களும் திராவிட இயக்க வரலாற்று சாதனையை அறிந்துகொள்ளும் வண்ணம் ‘கலைஞர் கருவூலம்’ காட்சி அரங்கினை உருவாக்கி, அதனை முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்களைக் கொண்டு திறக்கச் செய்தார்.

2004

4.5.2004 பாராளுமன்றத் தேர்தலில் கலைஞர் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் 40-க்கு 40 என மகத்தான வெற்றி பெற்றது.

2004

22.5.2004 இந்தியாவின் கூட்டணி யுகத்தின் அசைக்க முடியாத ஆளுமையாக கலைஞரின் ஆதரவுடன் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு – டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவை பதவியேற்பு.

2005

2.7.2005 தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்ல மற்றுமொரு முயற்சியாக,  பாரதியார் காலம் தொட்டு தமிழ் மக்களின் பெரும் கனவாக இருந்து வந்த “சேது சமுத்திரத் திட்டம்” தொடக்கம்.

2006

13.5. 2006 சட்டமன்றத் தேர்தல் கழகம் மாபெரும் வெற்றி – கலைஞர் தனது சொந்த மண்ணான திருவாரூரில் அமோகமாக வென்று 5-வது முறையாக முதலமைச்சர் ஆனார்.

தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றும் வண்ணம்

இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம் ,

7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகள் கூட்டுறவுக் கடன் ரத்து ,

கிலோ அரிசி 2 ரூபாய் திட்டம்,

என மூன்று திட்டங்களுக்கும் பதவியேற்பு விழா மேடையிலேயே கையொப்பமிட்டு ஆணை பிறப்பித்து புதிய வரலாற்றை உருவாக்கினார் செயல்வீரர் கலைஞர்.

2006

16.5.2006 பெரியார் நெஞ்சில் நீங்காமல் தைத்திருந்த முள்ளை அகற்றும் விதமாக “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!” தீர்மானத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றினார் பெரியார் வழிவந்த கலைஞர்.

2006

3.6.2006 ஜெயலலிதா அகற்றிய கண்ணகி சிலையை கலைஞர் மீண்டும் அதே இடத்தில் நிறுவினார்.

2006

15.7.2006– எதிர்க்கட்சியாக இருந்தாலும் காமராசரை பெருந்தலைவர் ஆகவே உள்ளார மதித்த தலைவர் கலைஞர் “காமராசர் பிறந்தநாள்! கல்வி வளர்ச்சி நாள்!” என அறிவித்தார்,  அத்துடன் ஏழை எளிய பிள்ளைகள் ஊட்டச்சத்துடன் கல்வி கற்க “சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை” திட்டம் தொடங்கினார்!

2006

21.7.2006 தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பர், முத்தமிழ் அறிஞரின் அனல் தெறிக்கும் வசனங்களுக்கு திரையில் உயிர்கொடுத்த தமிழ் கலையுலகின் ஈடில்லா பொக்கிஷம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை திறப்பு.

2006

17.9.2006 ஆண்டான் அடிமை முறை வேரோடு ஒழிக்க, பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்க, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டம்! அறிவித்தார் தலைவர்.

2006

1.11.2006 இந்திய உபகண்டத்தில் தமிழினத்திற்கான தனி நிலமாக “தமிழ்நாடு மாநிலம்” அமைந்த 50 ஆம் ஆண்டு பொன்விழா! சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது.

2006

5.12.2006  கலைஞரின் 29.11.2006 கோரிக்கையை ஏற்று, சென்னையில் செம்மொழித் தமிழ் ஆய்வு மையம் அமைக்க ஒப்புதல் தெரிவித்துமத்திய அமைச்சர் அர்ஜுன்சிங் கடிதம்.

2007

10.1.2007  சிறந்த வாசகரான கலைஞர்  புத்தகக் கண்காட்சி அமைப்பு நிறுவனத்திற்கு, சிறந்த படைப்பாளிகளை ஊக்குவிக்க சொந்த நிதியில் ரூபாய் ஒரு கோடி நன்கொடை வழங்கினார்!.

2007

5.2.2007 தமிழ் நாட்டின் உயிர்நாடி பிரச்சனையான காவிரி நதிநீர் பங்கீடு குறித்து அயராது கலைஞரும், கழகமும் போராடியதன் விளைவாக பெற்ற “காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு”.

2007

11,12.5.2007 அரை நூற்றாண்டுக்காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக அயராது உழைத்த சாதனையாளருக்கு “சட்டமன்றப் பணியில் கலைஞர் பொன்விழா!”

2007

18.8.2007  நமது  மொழியை புதிய நோக்குடன் ஆய்வுகள் மூலம் மேலும் செழுமைபடுத்த ,சென்னையில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடக்கவிழா.

2007

13.9.2007 சிறுபான்மையினர் நலன் மீது என்றும் மாறாத அக்கறை கொண்ட தலைவர் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு அவசர சட்டம் இயற்றினார்

2007

7.11.2007– ரூ9757 கோடியில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்தது, கலைஞரின் அறிவுரைப்படி 10.6.2009 அன்று துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.

2008

29.1.2008 ஆரிய மாயையிலிருந்து விடுபட, உலகத்தமிழரின் ஒப்பற்ற திருநாளாம் தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு நாள் என சட்டம் நிறைவேற்றம்.

2008

26.2.2008 தர்மபுரி மாவட்ட மக்களின் நெடுநாள் கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் கலைஞர்.

2008

 24.6.2008 நீர் வளத்தை மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் சமமாக பெறும் வகையில் மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு கலைஞர் அடிக்கல் நாட்டினார்.

2008

30.6.2008 மத்திய செம்மொழித் தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தில் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை நிறுவ, சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் அளித்தார்.

2008

31.7.2008 சமூகத்தின் அத்தனை பிரிவுகளில் உள்ள மக்களின் முன்னேற்றத்தின் மீதும் , பாதுகாப்பின் மீதும் அக்கறையுள்ள  சமூக நீதியின் காவலனாக கலைஞரால், திருமணமாகாத 50 வயது கடந்த பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடக்கம்.

2008

15.9.2008 அண்ணா நூற்றாண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக, ஏழை எளிய மக்களின் பசிப்பிணி நீக்க, உணவுக்காக எவரும் எவரிடமும் கையேந்தா வண்ணம் 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

2008

20.9.2008 அண்ணா நூற்றாண்டு விழாவில் “பெரியார் விருது” அவரது கொள்கைகளை சட்டமாக்கி நிறைவேற்றி வரும் சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

2008

27.12.2008 கழகத்தின் 13-வது பொதுக்குழு – பத்தாவது முறையாக கலைஞர் கழகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

2009

11.2.2009 தலைவர் கலைஞருக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது.

2009

26.2.2009 தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளேயே மிக அதிகமான ஒடுக்குமுறைகளை சந்தித்து வரும் அருந்ததி இன மக்களுக்கு கல்வியில், வேலை வாய்ப்பில் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றினார் பெரியாரின் பிள்ளை கலைஞர்.

2009

27.4.2009 இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, அவர்கள் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதலை தடுக்க கோரி, தனது உடல்நிலையை துச்சமாக மதித்து அண்ணா நினைவிடத்தில் கலைஞர் உண்ணாவிரதம்.

2009

23.7.2009 மருத்துவ உயர் சிகிச்சைக்கு பணம் என்று எந்தத் தமிழனும் தவிக்கக் கூடாது என்று மகத்தான நோக்கத்துடன் கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடக்கம். இத்திட்டத்தினால் மறுஉயிர் பெற்றவர்கள் பல்லாயிரம் பேர்.

2009

9.8.2009 இரு மாநிலங்களுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் பெங்களூருவில் உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா.

2009

13.8.2009 தமிழக மற்றும் கர்நாடக மக்களிடையே நட்புறவை, சகோதரத்துவத்தை உயர்த்தும் வகையில் சென்னையில் கன்னட மகாகவி சர்வக்ஞர் சிலை திறப்பு விழா நடத்தினார் கலைஞர்.

2009

26.9.2009 காஞ்சி – அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா அன்று அவரது இதயத்தை இரவலாக பற்ற கலைஞர் அவர்களுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.

2010

2010 – 2011 சமத்துவத்தை நோக்கிய பயணமே திராவிட இயக்கத்தின் உயிர்நாடி, அவ்வியக்கத்தின் வழிவந்த தலைவர் சாதி, மதம், ஏழை, பணக்காரன் பாகுபாடின்றி குழந்தைகள் அனைவருக்கும் சமமான “சமச்சீர் கல்வி” அறிமுகம் செய்தார்.

2010

13.3.2010 நவீன சமூகத்தின் சிற்பியான தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம் திருமதி சோனியா காந்தி அவர்களின் இந்நிலையில், பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களால் திறக்கப்பட்டது.

2010

18.3.2010 புதிய தலைமைச் செயலகத்தில் முதல் சட்டப் பேரவைக் கூட்டம்.

2010

15.5.2010 இன்றைய இளைஞர்களை கவரும் வண்ணம் நவீனமான இசை மற்றும் காட்சி அமைப்போடு, கலைஞரின் அழகுத் தமிழில் செம்மொழியான தமிழ் மொழியே பாடல் வெளியீடு.

2010

23.6.2010 – 27.6.2010 உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, மொத்த உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக கோவையில் நடத்தி தாய் மொழிக்கு பெருமை சேர்த்தார் தலைவர்.

2010

15.9.2010  தமிழர் என்றென்றும் பெருமைகொள்ளதக்க, அவர்களின் அறிவின் தேடலை பறைசாற்றும்  தெற்காசியாவின் மாபெரும் நூலகமான “அண்ணா நூற்றாண்டு நூலகம்” திறப்பு விழா.

2010

22.9.2010 – 26.9.2010 தான் நாத்திகனக இருந்தாலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், தமிழரின் பெருமைமிகு அடையாளத்தை கொண்டாடும் நோக்கில் மாமன்னன் இராசராச சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரமாண்டு விழா நடத்தினார் கலைஞர்.

2010

24.11.2010  நம் தமிழ் மொழி கலைஞரின் இடைவிடாத போராட்டங்களால் இந்திய அரசினால் செம்மொழியாக அன்கீகரிகபட்டதை நினைவுகூரும் விதமாக சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்கா அமைத்தார் கலைஞர்.

2011

22.1.2011 அடையாறு பகுதியில் பசுமையான சுற்றுசூழலை உருவாக்க தொல்காப்பியப் பூங்கா அமைக்கப்பட்டது.

2011

13.5.2011 திருவாரூர் தொகுதியில் மண்ணின் மைந்தர் கலைஞர் அமோக வெற்றி.

2012

27.2.2012 ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தை உடைக்க தமிழர்களுக்கு சுயமரியாதை உணர்வூட்டி, கல்வி வழங்கி உயர்த்திய  திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா நடத்தினார்.

2013

8.8.2013  தனது 90 வயதிலும் டெசோ அமைப்பின் சார்பில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் உலக தமிழரின் ஒப்பற்ற போராளி கலைஞர்.

2013

14.12.2013 உலக நடப்புகள்  முதல் உள்ளூர் அரசியல் வரையான அறிய  செய்திகளை கொண்ட அறிவு களஞ்சியம் நெஞ்சுக்கு நீதி 6-ஆம் பாகம் வெளியீட்டு விழா.

2016

19.5.2016  திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று கலைஞர் 13வது முறையாக சாதனை வெற்றி! போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும்வெற்றி பெற்ற மாபெரும் மக்கள் தலைவர்.

2016

10.8.2016 என் முதல் பிள்ளை முரசொலிக்கு இது பவள விழா ஆண்டு என பெருமிதம் பொங்க கடிதம் வரைந்தார் பத்திரிக்கையாளர் கலைஞர்.

2016

2.10.2016 தமிழகத்தின் நதி நீர் உரிமையை என்றும் விட்டுக்கொடுக்காத தலைவர் காவிரிப் பிரச்சினை குறித்து  கடிதம்.

2016

1.12.2016  உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

2016

23.12.2016 பீனிக்ஸ் பறவை போல உடல் நலம் தேறி இல்லம் திரும்புதல்.

2017

5.6.2017 காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோபாலபுரம் இல்லம் வந்து கலைஞரைக் கண்டு உடல் நலம் விசாரித்தார்.

2017

19.10.2017 கலைஞர் வாழ்நாளெல்லாம் தனது முதல் பிள்ளையாக கருதிய  முரசொலி வளாகத்தில் முரசொலி பவள விழா காட்சி அரங்கை நேரில் உணர்வுகள் பொங்க கண்டு களித்தார்.

2017

6.11.2017 பிரதமர் நரேந்திரமோடி, கோபாலபுரம் இல்லம் வந்து கலைஞரைச் சந்தித்து, உடல்நலம் விசாரித்தார்.

2018

29.7.2018 தலைவரின்  உடல் நலன் பின்னடைவு – மருத்துவமனை அறிக்கை.

2018

7.8.2018 மாலை 6.10 மணி அளவில் ஓய்வின்றி உழைத்த அந்த உதயசூரியன்  நம்மை விட்டு மறைந்து, கோடானகோடி உடன்பிறப்புகளின் உள்ளங்களில் திராவிட  இனத்தின் காவலனாக , முத்தமிழ் காத்த தலைமகனாக நிறைந்து வாழ்கிறார்.