ஜூன் 3 தமிழ்ச் செம்மொழி நாள்
வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என முழங்கிய தலைவர் கலைஞர் அவர்கள், தமது 14வது வயதில் புலி, வில், கயல் சின்னங்கள் பொறித்த தமிழ்க் கொடி ஏந்தி, இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் தொடங்கி, தம் வாழ்வின் இறுதி வரை தமிழ் மொழியின் நலன் காக்க அரும்பாடுபட்டவர். மொழிப்போரில் தனிமைச் சிறை கண்டவர்; தமது ஆட்சிக் காலம் முழுவதும் தமிழ் மொழியை மேன்மை கண்டிடச் செய்தவர்;
இளமை முதல் முதுமை வரை உறுதியாகப் போராடி தமிழ் மொழிக்கு; தம் படைப்புகளாலும் தமது ஆட்சிக் காலத் திட்டங்களாலும் சிறப்புச் சேர்த்த ‘தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ம் நாளை, இனி, ஆண்டுதோறும் தமிழ்ச் செம்மொழி நாள் என்று கடைப்பிடிப்போம். அதையொட்டி நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் ஓர் அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது.
தலைவர் கலைஞர் அவர்களின் பெயரால், அவர் காலத்தில் அவரது சொந்த நிதியில் உருவாக்கப்பட்ட ‘‘கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை’’யின் சார்பில் மாதந்தோறும் மருத்துவ உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்களுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த ‘முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை’ எனும் புதிய அறக்கட்டளை தொடங்கப்படவிருக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் ஏழை நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற ஆண்டுதோறும் உதவி செய்யப்படும். பள்ளி மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இளைய தமிழ்ச் சமுதாயம் ஏற்றம் பெறும் வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில், குடிமைப்பணித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் – ‘ஐ.ஏ.எஸ். அகாடமி’ ஒன்று தொடங்கப்படும். இதன்வாயிலாக மத்திய – மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகள் உள்நாட்டு, பன்னாட்டுப் பொது நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள்; இவற்றில் இளைய சமுதாயம் வெற்றிகரமாகப் பணியிடம் பெற முழுமையான பயிற்சி அளிக்கப்படும்.
பல்வேறு துறைகளில் ஆண், பெண் இரு பாலின இளைஞர்களின் திறன்மிக சாதனைகளைப் பாராட்டும் வகையில், ஆண்டு தோறும் ‘‘இளம் சாதனையாளர் விருது’’ வழங்கப்படும்.
பத்திரிகை, நாடகம் – திரைப்படம், புதினம், சிறுகதை, கவிதை, தொலைக்காட்சித் தொடர் என அனைத்துத் துறைகளிலுமே, தம் எழுத்தாற்றலை வெளிப்படுத்திய தலைவர் கலைஞர் அவர்கள், அத்தனையிலும் திராவிட இயக்கக் கொள்கைகளையே முழங்கியிருக் கிறார். இந்த முழக்கம் தொடர்ந்திடும் வகையில், ஆண்டுதோறும் திராவிட இயக்க மூத்த படைப்பாளிகளுக்கும், இளைய படைப்பாளிகளுக்கும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் ‘திராவிடப் படைப்பாளி விருது’ வழங்கப்படும்.
இயக்கமே தம் இதயம், இதயம் இயங்குவதே, இயக்கத்திற்காகத்தான் என, 94 வயது நிறைவடையும் வரை கழகம் வளர்த்த தலைவர் கலைஞர் அவர்களின் வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கத்தைக் கட்டிக் காக்கின்ற பணியில் மிகச் சிறப்பாகச் செயல்படுகின்ற ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சிச் செயலாளர்களுக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அறக்கட்டளையின் சார்பில் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும்.
கழகத்தில் எந்தப் பதவியும் எதிர்பாராமல் சமூகப் பணிகளை மேற்கொண்டு அதன் வாயிலாகக் கழகத்திற்கு மக்களிடம் பெருமை சேர்க்கக்கூடிய உடன்பிறப்புகளுக்கு, அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு விருது வழங்கப்படும் என்பதைத் தலைமைக் கழகத்தின் சார்பில் மிகுந்த மகிழ்ச்சியோடு நான் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.