நட்பிற்கு இலக்கணமான கலைஞர்!
தீரர்களின் கோட்டமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய இந்தத் திருச்சி மாவட்டக் கழகத்தின் சார்பில் அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்களுக்குச் சிலை, கலைஞர் அவர்களை நமக்கு உருவாக்கித் தந்திருக்கக் கூடிய பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுக்குச் சிலை, இரண்டு தலைவர்களுக்கும் தளகர்த்தராக விளங்கிய அன்பிலார் அவர்களுக்குச் சிலை ஆகிய மூன்று சிலைகளைத் திறந்து வைத்திருக்கின்றோம். வெறும் சிலை திறப்பு விழாக்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தலைவர் கலைஞர் அவர்களின் 96வது பிறந்த நாளையும் இணைத்து அத்தோடு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கூடிய நிகழ்ச்சியையும் இணைத்து, ஒரு மாபெரும் பொதுக்கூட்டமாக நம்முடைய நேரு அவர்கள் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
தி.மு.கழகத்தின் தீரர்கள் கோட்டம் திருச்சி. அதனால்தான் அண்ணா அவர்கள் அடிக்கடிச் சொல்வார்கள்; திருச்சி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாடி வீடு என்று. கலைஞர் அவர்கள் சொல்லுவார் திருச்சி என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் கோட்டை என்று. எல்லோரும் சொல்லுவார்கள் இது தீரர்கள் கோட்டை என்று, தீரர்கள் கோட்டை மட்டுமல்ல அத்தோடு இன்னொரு வார்த்தையையும் சேர்த்துச் சொல்லுகின்றேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் கோட்டம் இந்தத் திருச்சி என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன்.
நடந்து முடிந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது இதே தென்னூரில் பிரச்சாரத்திற்கு நான் வந்திருந்தேன். கொளுத்துகின்ற வெயில், அந்த வெயிலைக் கூடப் பொருட்படுத்தாமல் இங்கு மக்கள் திரண்டிருந்த காட்சி, அந்தக் கூட்டத்தில் நான் பேசுகின்றபொழுது குறிப்பிட்டுச் சொன்னேன். அதிலும் குறிப்பாக வேட்பாளராக நிற்கக்கூடிய மதிப்பிற்குரிய திருநாவுக்கரசர் அவர்களிடத்தில் தெளிவாகச் சொன்னேன். எப்பொழுது நீங்கள் இந்தத் திருச்சிக்கு நாடாளுமன்றத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுவிட்டீர்களோ அப்பொழுதே, நீங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விட்டீர்கள் என்று நான் அப்பொழுதே எடுத்துச் சொன்னேன். 3 இலட்சத்திற்கு மேல் அதிக வாக்குகளைப் பெற்று, இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்று சொன்னால் அது நிரூபிக்கப்பட்டிருக்கின்றதா இல்லையா?
இதே திருச்சியை, தி.மு.க.வின் மலைக் கோட்டையாக மாற்றிக் காட்டிய பெருமை அன்பிலார் அவர்களுக்கு உண்டு. அன்பிலார் அவர்கள் கலைஞர் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய ஒருவராக வாழ்ந்து காட்டினார். கலைஞர் அவர்களின் அன்பைப் பெற்றிருந்தார். அறிஞர் அண்ணாவின் பாசத்தைப் பெற்றிருந்தார்.கலைஞருக்கும் அன்பிலாருக்கும் இடையே ஆழ்ந்த நட்பு! தலைவர் கலைஞர் அவர்கள் அதிகமான அளவிற்கு அன்பிலார் அவர்களிடத்தில் பாசம் கொண்டிருந்த காரணத்தினால், தலைவர் கலைஞர் அவர்களுக்கும், அன்பிலார் அவர்களுக்கும் உரிமையோடு சிறுசிறு சண்டைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.
கலைஞர் அவர்களுக்கும்அன்பிலார் அவர்களுக்கும் இடையிலான நட்பைப் பார்த்து பேராசிரியர்அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக்காட்டுவார், கணவன் – மனைவி நட்பைப் போன்றது கலைஞர் – அன்பிலார் ஆகியோரின் நட்பு என்று. அதில் யாரும் தலையிட முடியாது. கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வந்தால் யாராவது தலையிடமுடியுமா? தலையிடவும் கூடாது. அதை அவர்களாகவே சரி செய்துகொள்வார்கள். அந்தப் பொருள்பட நம்முடைய பேராசிரியர் அவர்கள் பலநேரங்களில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள். மிக இளம் வயதில் அன்பிலார்அவர்கள் அண்ணாவின் அன்பைப் பெற்றிருந்தார்கள்.
ஒரு செய்தியைச்சொல்ல வேண்டும் என்று சொன்னால்; தந்தை பெரியார் அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் பிரிந்தார்கள். அப்படிப் பிரிந்த நேரத்தில் அன்பிலார் அவர்கள் யார் பக்கம் போவார்? யாரிடத்தில் சென்று அடைக்கலமாவார், என்ற ஒரு கேள்விக்குறி இருந்தது. ஆனால், அன்பிலார் அவர்கள் தைரியமாக – துணிச்சலாக தந்தை பெரியாரிடத்தில் சென்று, நான் உங்களிடத்தில் இருக்கமாட்டேன்; அண்ணாவிடத்தில்தான் இருப்பேன் என்று வெளிப்படையாகச் சொல்லிவிட்டு. அண்ணாவிடத்தில் வந்து சேர்ந்தவர் நம்முடைய அன்பிலார் அவர்கள்.
1962ஆம் ஆண்டு சட்டமன்றச் பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. அப்பொழுது லால்குடியில் வேட்பாளராக நம்முடைய அன்பிலார் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள். அவரை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகின்றது. அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் நம்மை எதிர்த்துத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றார். நம்முடைய அன்பில் அவர்கள் நிற்கின்ற லால்குடி தொகுதிக்குப் பெரியார் வருகின்றார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மேடையில் வந்து உட்கார்ந்து இருக்கின்றார்.அப்படி உட்கார்ந்திருக்கின்ற பொழுது, திடீரென்று அன்பிலார் அவர்கள் மேடையேறி வருகின்றார்.
அது, காங்கிரஸ் கட்சிக்காக நடக்கின்ற பிரச்சார மேடை. தந்தை பெரியாரைப் பார்க்க வேகமாக வருகின்றார். ஒருசால்வையைக் கொண்டுவந்து பெரியாருக்குப் போர்த்திவிட்டு அவருடைய வாழ்த்தைப் பெற்றுவிட்டுப் போய் விடுகின்றார். பெரியார் அதிர்ச்சியடைந்தது மட்டுமல்ல, அவர் அந்தப் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகின்றபொழுது சொல்லுகின்றார். இப்பொழுது என்னிடம் வந்து வாழ்த்துப் பெற்றவர் யாரென்று கேட்டால், என்னுடைய செல்லப்பிள்ளை அன்பில் என்கிறார். சொல்லிவிட்டு அத்தோடு இன்னொன்றையும் சொல்லுகின்றார். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடியவன் அவன்தான். பணியாற்ற வேண்டும், தொண்டாற்ற வேண்டும் என்ற உணர்வோடு இருக்கக்கூடியவன் அவன்தான் சிறந்த செயல்வீரன். காங்கிரஸ் வேட்பாளர் செல்வச் சீமான்! காமராஜருக்கு மிகமிக வேண்டியவர்! யார் உங்களுக்கு உழைப்பார்களோ, யார் உங்களுக்குப் பாடுபடுவார்களோ அவர்களைச் சிந்தித்து, நீங்கள் தேர்ந்தெடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார், தந்தை பெரியார். அந்த அளவிற்கு அன்பிலார் அவர்கள் மீது தந்தை பெரியார் அவர்கள் பாசத்தை வைத்திருந்தார்கள்.
அதேபோல்தான் அறிஞர் அண்ணா அவர்கள். அண்ணா அவர்கள் அன்பில், அன்பில் என்று கூட அழைக்கமாட்டார். அம்பில், அம்பில் என்றுதான் செல்லமாக அழைப்பார். அந்த அளவிற்கு அண்ணாவிடத்திலும் அன்பைப் பெற்று இருந்தார்கள். 1957ல் முதன் முதலில், சட்டமன்றத் தேர்தல் களத்திற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் வருகின்றது. களத்தில் போட்டியிடலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய திருச்சியில் மிகப்பெரிய மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் முடிவெடுத்து அறிவித்தோம். அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் அன்பிலார் அவர்கள்.
அப்பொழுதுதான் அண்ணா கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திற்கு என்ன தலைப்பு என்று தெரியுமா, ‘‘அன்பில் அழைக்கிறார்’’ என்று அண்ணாவின் கடிதம். அந்தக் கடிதம் இன்றைக்கும் பேசப்படுகின்றது. வரலாற்றுச் சிறப்பிற்குரிய இடத்தில் அந்தக் கடிதம் இடம் பெற்றிருக்கின்றது.
அதுமட்டுமல்ல, 18 ஆண்டு காலம் தந்தை பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும் பிரிந்திருந்த நேரம்; 1967இல் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது. மிகப்பெரிய வெற்றியைப் பெறுகின்றோம். ஆட்சிப் பொறுப்பை ஏற்கின்றோம். அண்ணா அவர் கள் முதல்அமைச்சராகப் பொறுப்பு ஏற்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா அவர்களின் உள்ளத்தில் ஓர் ஆசை ஏற்பட்டு, பக்கத்தில் இருந்த அன்பிலாரிடத்திலும், தலைவர் கலைஞரிடத்திலும் சொல்லுகின்றார். என்னவென்று தெரியுமா? தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டது. நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளேன், எப்படியாவது தந்தை பெரியார் அவர்களைப் பார்க்க வேண்டும். 18 வருடமாக நாம் அவரோடு எந்தத் தொடர்பும் வைத்திருக்க வில்லை. எப்படியாவது சென்று ஒரு வாழ்த்தைப் பெறவேண்டும் என்று ஒரு வார்த்தை சொல்லுகின்றார்.
சொன்ன அடுத்த வினாடி அன்பிலார் அவர்கள் திருச்சியில்தான் தந்தை பெரியார் அவர்கள் இருக்கின்றார். நான் உடனே ஏற்பாடு செய்கின்றேன், என்று சொல்லி, சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு தந்தை பெரியார் அவர்களைப் பார்க்க அண்ணா அவர்களையும், தலைவர் கலைஞர் அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து தந்தை பெரியார் அவர்களைப் பார்க்கவைத்து ஒரு பெரிய திருப்பத்தை, திராவிட இயக்கத்திற்கு மட்டுமல்ல; தி.மு.கழகத் திற்குமட்டுமல்ல; இந்தத் தமிழ் உலகத்திற்கே ஒரு மிகப்பெரிய திருப்புமுனை வரலாற்றை உருவாக்கித் தந்த மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவர்; அதைச் செய்து முடித்துத் தந்தவர் அன்பிலார் அவர்கள்!.
எப்பொழுதும் தேர்தல் பிரச்சாரத்தில் தலைவர் கலைஞர் அவர்களோடு உடன் செல்லக்கூடியவர்களில், முக்கியமாக அன்பிலார் அவர்கள் இருப்பார். தேர்தல் பிரச்சாரம் மட்டுமல்ல, திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற எந்த மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றாலும் கலைஞர் அவர்கள் காரில்தான் பயணம் செய்வது வழக்கம். அப்பொழுது உடன் வரக்கூடியவர்களில் அன்பிலார் அவர்கள் நிச்சயம் இருப்பார்.
ஒரு முறை 1967ல் தேர்தல் நடந்த நேரத்தில் தலைவர் கலைஞரைக் கொலை செய்திட வேண்டும் என்று திட்டமிட்டு, சைதாப்பேட்டை தொகுதியில் சில ரௌடிகள், கொலைகாரக் கும்பல் ஒன்று சேர்ந்து அவரைக் கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட; ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அவரைக் காப்பாற்றி, விடிந்ததற்குப் பிறகுதான் அவரைக் கொண்டு வந்து விட்டார்கள்.
அப்பொழுது அண்ணா அவர்கள் அன்பிலார் அவர்களை அழைத்துக் கண்டித்திருக் கிறார். எப்பொழுதும் அவரோடு நீதானே செல்வாய்; நீ ஏன் போகவில்லை என்று சத்தம் போட்டிருக்கிறார். அந்த அளவிற்கு ஒரு காவிய நட்போடு தலைவர் கலைஞர் அவர்களும், அன்பிலார் அவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கின்றபொழுது உள்ளபடியே நாமெல்லாம் பெருமைப்படுகின்றோம். அப்படிப்பட்ட அன்பிலார் அவர்கள் சிலை – கலைஞர் அவர்கள் சிலை – அண்ணா அவர்கள் சிலை, அனைத்தையும் ஒரே நாளில் அதுவும் திருச்சியில் இன்றைக்குத் திறந்து வைத்திருக்கின்றோம் என்று சொன்னால், நான் அதைத் தான் எண்ணிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
1971ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் மறைவிற்குப் பிறகு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில்தான் தலைவர் கலைஞர் அவர்கள் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு உருவாக்கித் தந்தார்கள். ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம். ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். மாநில சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்ற ஐம்பெரும் முழக்கங்கள்.
தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாமல் கொண்டாடக்கூடிய முதல் பிறந்தநாள், இந்த 96 ஆம் பிறந்த நாள். தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகின்ற பொழுது நான் குறிப்பிட்டுச் சொன்னேன்; அவர் மறையவில்லை, நம்முடைய மனதோடு இருக்கின்றார். அவர் மரணமடையவில்லை நம்முடைய ஊனோடு கலந்திருக்கின்றார். நம்முடைய உணர்வில் இருக்கின்றார். இன்றைக்கும் நம்மை அவர்தான் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்.அவர் தந்திருக்கக்கூடிய அந்த ஊக்கத்தின் – உற்சாகத்தின் – பயிற்சியின் காரணமாகத்தான் இன்றைக்கு இந்த மாபெரும் வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோம்; மறந்து விடக்கூடாது.