பேரறிஞர் பெருந்தகையும் முத்தமிழறிஞர் கலைஞரும்…
கலைஞர் சிலை திறப்பு விழா-காஞ்சிபுரம் 14-2-2019
இன்று அண்ணன் பிறந்த காஞ்சியில் அண்ணன் அவர்களால் நமக்காக உருவாக்கித் தரப்பட்ட, அறிஞர் அண்ணா அவர்களுடைய அன்புத் தம்பியாக உண்மைத் தம்பியாக விளங்கி மறைந்தும், மறையாமலும் நம்முடைய உள்ளத்தில் இன்றைக்கும் குடிகொண்டிருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலை திறப்பு விழா.
கலைஞருடைய சிலை திறப்பு விழா மட்டுமல்ல. ஏற்கனவே, மார்பளவுச் சிலையாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களுக்கும் முழு உருவச்சிலை என்ற நிலையில் மாற்றப்பட்டு, அறிஞர் அண்ணாவினுடைய முழு உருவச்சிலையையும் திறந்து வைத்ருக்கின்றோம்.
அறிஞர் அண்ணா அவர்களுடைய சிலையும், தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையும் அமைந்திருக்கக்கூடிய இடம் திருக்கச்சி நம்பித் தெரு என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அந்தத் திருக்கச்சி நம்பித் தெருவில் உள்ள இந்தக் கட்டடத்தில் இருந்து தான், அறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய ‘திராவிட நாடு’ இதழ் வெளிவந்திருக்கின்றது. 1998-ல் தலைவர் கலைஞர் பவளவிழா மாளிகை என்ற நிலையில் இந்தக் கட்டடத்தின் முகப்பில் அறிஞர் அண்ணா அவர்களின் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பெருமை சேர்த்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அப்படி நடைபெற்ற அந்த விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய முதல்வராக வந்து பங்கேற்றார். நான் அன்றைக்குச் சென்னை மாநகரத்தின் மேயர் என்ற அந்த நிலையில் தலைவரோடு வருகை தந்து அதில் பங்கேற்றேன்.
வாழ்வு மூன்று எழுத்து, வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றெழுத்து, பண்பிலே பிறக்கும் அன்புக்கு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளை விக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரர் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, அந்த வெற்றிக்கு – நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்றெழுத்து, என்று பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி; தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதலாவது மாநாட்டில் வரவேற்றுப் பேசுகின்ற நேரத்தில் குறிப்பிட்டுச் சொன்னார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய அண்ணா பிறந்த இந்த மண்ணில் இன்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்குச் சிலை எழுப்பப்பட்டிருக்கின்றது.
என்னுடைய அரசியல் பயணத்திற்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம். ஆனால், அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல் இருந்த உந்து சக்தி எது என்று கேட்டால், இந்தக் காஞ்சி நகரம்தான். முதன்முதலாக 12 அல்லது 13 வயதில் என்னைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்ட நேரத்தில் கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலமாக நான் பல நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தேன்.
அதையொட்டி 1971 ம் ஆண்டு அறிஞர் அண்ணா துயில் கொண்டிருக்கக்கூடிய அவருடைய கல்லறையில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து, வணங்கி அங்கிருந்து கையில் ஒரு தீப்பந்தத்தை அண்ணா ஜோதியை கையில் ஏந்தி, தொடர் ஓட்டமாக நான் புறப்பட்டு நேராக அண்ணா சாலையில் இருக்கக்கூடிய அண்ணா சிலைக்குச் சென்று மாலை அணிவித்து, அதைத் தொடர்ந்து சென்னையிலிருந்து தொடர் ஓட்டமாக இந்தக் காஞ்சி நகரத்துக்கு வந்து அன்று காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கரத்தில் தொடர் ஓட்டமாகக் கொண்டு வந்த அண்ணா ஜோதியை நான் ஒப்படைத்தேன்.
அதை ஒப்படைத்த நேரத்தில், கலைஞருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் யார் யார் என்று கேட்டால்; அன்றைக்குப் பொதுச்செயலாளராக இருந்த நாவலர் அவர்கள், பொருளாளராக இருந்த மரியாதைக்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள்.
அறிஞர் அண்ணா அவர்களுடைய தீபத்தைப் பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்குச் சிலையாக நிற்கின்றார். அண்ணாவின் தீபத்தை ஒப்படைத்த நான் இன்றைக்கு இந்த மேடையில் இயக்கத்தினுடைய தலைவராக நின்று கொண்டிருக்கின்றேன். இதுதான் திராவிட இயக்கம். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட இயக்கத்தினுடைய பயணம் என்பது, முடிகின்ற ஓட்டம் அல்ல, அது தொடர்கின்ற ஓட்டம். தொடர்ந்து கொண்டே இருக்கக் கூடிய ஓட்டம். அந்தக் கொள்கை என்பது ஒரு அணையா தீபமாகும்.
இன்று தேதி பிப்ரவரி-14. உலகமே இன்று காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. காதல் என்றால் அன்பு என்று பொருள். அன்பினுடைய இலக்கணமாக இருந்தவர்கள்தான் அறிஞர் அண்ணாவும் – தலைவர் கலைஞர் அவர்களும். அண்ணா என்ற காதலனை கலைஞர் என்ற காதலி எப்போது பார்த்தாரோ அன்றிலிருந்து அவர்களுக்குள்ளே அந்தக் காதல் வந்துவிட்டது. அன்பு வந்துவிட்டது. இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால் அண்ணாவின் மரணம் வரையில் அது மாறாமல் இருந்தது. ஏன் அவருடைய மரணத்திற்குப் பிறகும் தொடர்ந்தது.
‘இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ இருக்குமிடம் தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தை தந்திடு அண்ணா – நான் வரும்போது மறவாமல் கையோடு கொணர்ந்து உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா’ என்று 1969ல் அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த நேரத்தில் கண்ணீர் மல்கக் கவிதை அஞ்சலி செலுத்தினாரே தலைவர் கலைஞர் அவர்கள். நான் அதை எண்ணிப் பார்க்கின்றேன்.
50 ஆண்டுகள் கழித்து, கலைஞர் இறந்த போது அவருடைய அரை நூற்றாண்டு காலக் கனவை அண்ணாவின் மீது அவர் வைத்திருந்த அழியாக் காதலை நிறவேற்றுவதற்கு நாம் நடத்திய போராட்டம் சாதாரண போராட்டம் அல்ல, ஒரு மிகப் பெரிய சட்டப்போராட்டம் நடத்தினோம். இது நமக்குக் கிடைத்த பெருமைகளில் ஒன்று. இது எனக்குத் தனிப்பட்ட பெருமை அல்ல. ஒட்டுமொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக் கூடிய ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கக் கூடிய பெருமை.
திருவாரூர் என்பது தலைவர் கலைஞர் பிறந்த ஊர். காஞ்சிபுரம் என்பது அவர் புகுந்த ஊர். அறிஞர் அண்ணா அவர்கள் கலைஞரைத் தவிர வேறு யார் மீதும் இவ்வளவு பாசம் வைத்திருக்கமாட்டார். அதேபோல், கலைஞர் அவர்களும் அண்ணாவைத் தவிர வேறு யார் மீதும் இவ்வளவு மரியாதை வைத்திருக்க மாட்டார். இந்த இரண்டு தலைவர்களைப் பற்றி அறியும் போதும், அவர்களைப் பற்றிப் படிக்கின்ற நேரத்தில் ஒரு காவிய நட்பு – காவிய பாசம் கொண்டவர்களாக இருவரும் இருந்திருக்கின்றார்கள் என்பது புரியும். தலைவர் கலைஞர் அவர்களுடைய எழுத்து முதன்முதலாக எந்த ஏட்டில் வந்ததென்று சொன்னால், அறிஞர் அண்ணா அவர்களால் நடத்தப்பட்ட திராவிட நாடு இதழில் தான்.
1963ம் ஆண்டு கைது செய்யப்பட்டு தலைவர் கலைஞர் அவர்கள் நீண்ட காலம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். அப்போது அறிஞர் அண்ணா அவர்கள் வேலூரில் இருக்கக்கூடிய மத்திய சிறையில் அடைபட்டிருக்கின்றார். தலைவர் கலைஞர் அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிஞர் அண்ணா விடுதலை செய்யப்படுகின்றார். அறிஞர் அண்ணா. திருச்சியில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு விடுதலையாகக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களை வரவேற்க திருச்சிக்கே செல்லுகின்றார்.
அதற்குப் பிறகு விடுதலையான தலைவர் கலைஞர் அவர்கள் நேராக சென்னைக்கு வரவில்லை. தாம் பிறந்த திருவாரூக்குச் செல்லுகின்றார். காரணம், அங்கே வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அங்கிருந்து சென்னை செல்லலாம் என்று தலைவர் கலைஞர் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான், அண்ணா அவர்கள் கலைஞர் அவர்களுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘நீ நேராக காஞ்சிபுரத்திற்கு வா. நீ வந்ததற்குப் பிறகு நாம் இருவரும் சேர்ந்து சென்னைக்குச் செல்லலாம்’ என்று நம்முடைய தலைவர் கலைஞருக்கு அண்ணா உத்தர விடுகின்றார்.
தலைவர் கலைஞர் அவர்கள் காஞ்சிபுரம் வருகின்றார், அதற்குப்பிறகு அண்ணாவும், தலைவர் கலைஞர் அவர்களும் சேர்ந்து சென்னை வருகிறார்கள். மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்படுகின்றது. அதற்குப் பிறகு அண்ணாவும், தலைவரும் கோபாலபுரம் இல்லத்திற்குச் செல்கின்றார்கள். வாசலில் வழி மேல் விழிவைத்துக் கலைஞரை ஈன்றெடுத்த அவருடைய தாயார் அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்போது அண்ணா அவர்களைப் பார்த்து, அன்னை அஞ்சுகம் அம்மையார் அவர்கள் ஒரு வார்த்தை சொன்னார்கள். அது என்ன வென்று கேட்டால், ‘உங்களை உங்கள் அம்மா ஒரே ஒரு நாள் பிரசவ வேதனையில் பெற்றிருப்பார்கள். அதனால்தான் நீங்கள் வேலூர் சிறையிலிருந்து நேராகக் காஞ்சிபுரம் சென்றீர்கள். ஆனால், என் பிள்ளையைப் பல நாள் இடுப்பு வலி பிரசவ வேதனைக்குப் பிறகு நான் பெற்றெடுத்தேன். அதனால் தான் திருச்சியில் விடுதலையாகி திருவாரூருக்குச் சென்று மூன்று நாள் கழித்து என்னைப் பார்க்க என் பிள்ளை வந்திருக்கின்றது’ என்று அண்ணா அவர்களிடத்தில் உரிமையோடு அஞ்சுகம் அம்மையார் சொல்லுகின்றார்.
அப்போது அண்ணா அவர்கள், அன்னை அஞ்சுகம் அம்மையாரைப் பார்த்து, ’ஏன் நீங்கள் திருச்சிக்கே வந்திருக்கலாமே?’ என்று சொல்லுகிறபோது, ‘நான் போனால் என்ன? நீங்கள் போனால் என்ன? இரண்டு பேரும் ஒன்றுதானே’ என்றார் அஞ்சுகம் அம்மையார் அவர்கள்.
அதாவது, அண்ணா வேறு அஞ்சுகம் வேறு அல்ல. கலைஞரைப் பொருத்த வரையில் இரண்டு பேரும் ஒன்றுதான் என்று தலைவர் கலைஞர் அவர்கள் தம்முடைய பொதுவாழ்வில் இருந்திருக்கின்றார். தம்முடைய உயிரினும் மேலானவர்களுக்கு, தம்முடைய உயிரினும் மேலான உடன் பிறப்புகளாக இருக்கக் கூடிய உங்களைத்தான் நினைத்தார். அதேபோல், தலைவர் கலைஞர் அவர்கள் தம்முடைய தாயினும் மேலாக – தாயாக அண்ணாவைத்தான் நினைத்தார். அதனால்தான் இன்றைக்கு அண்ணா பிறந்த இந்த மண்ணில் தலைவர் கலைஞருக்குச் சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.
தமக்குப் பின்னால் கலைஞர்தான் என்பதை மிக இளமைக் காலத்திலேயே அறிஞர் அண்ணா அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
திருச்சி தி.மு.க. வில் தோழர்களிடத்தில் சில பிரச்சினை, அப்பொழுது திருச்சிக்கு நான் போகமாட்டேன் என்று அண்ணா திட்ட வட்டமாகச் சொல்லுகின்றார். திருச்சியைச் சேர்ந்த கழகத் தோழர்கள் அழைத்தார்கள். முடியாது -வரமுடியாது என்றார் அண்ணா. திருச்சியைச் சேர்ந்த மொத்த கழகத் தோழர்களும் வருகின்றார்கள் அண்ணாவை அழைக்க. ’இல்லை, இல்லை’ என்றார். வந்துதான் தீரவேண்டும் என்று சொல்லுகின்றபோது ‘‘நான் முதலில் வரமாட்டேன், வேண்டுமானால் என் தம்பி கருணாநிதியை முதலில் அனுப்பி வைக்கின்றேன். அனுப்பி வைக்கின்ற நேரத்தில் தி.மு.க. என்பது அங்கு உயிரோடிருந்தால் நான் வருகின்றேன் என்று அவர்களை அனுப்பிவைத்தார். அந்தளவுக்கு தமக்குப் பதிலாக, கலைஞரைத்தான் நினைத்தார் அண்ணா அவர்கள்.
கல்லக்குடி போராட்டமா? கலைஞரைத் தான் தலைமை தாங்க உத்தரவிட்டார். சென்னை மாநகராட்சியைக் கைப்பற்றிய காரணத்தால் அறிஞர் அண்ணா அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை உச்சி முகர்ந்து பாராட்டி, கைவிரலில் கணையாழி அணிவித்தாரே, அந்தக் கணையாழியைக் கூட அவரே கடைக்குச் சென்று அவரே போய் வாங்கி அந்தக் கணையாழியைத் தலைவர் கலைஞருக்கு அணிவிக்கின்ற நேரத்தில் சொன்னாரே, ‘என்னுடைய மனைவிக்குக் கூட நகை வாங்கக் கடைக்குச் சென்று நகை வாங்கியது கிடையாது. உனக்காக நான் வாங்கியிருக்கின்றேன்’ என்று சொல்லி அதை அணிவித்து மகிழ்ந்தாரே பேரறிஞர் அண்ணா அவர்கள்.
’இந்தக் கழகத்தில் பலதரப்பட்ட உணர்வுள்ளவர்கள், பல எண்ணங்கள் கொண்டவர்கள் யாராக இருந்தாலும், சிறப்பாகப் பணியாற்றக் கூடியவர்கள் உண்டு. எதையும் நிதானமாகப் பணியாற்றக் கூடியவர்கள் உண்டு. அவர்களை எல்லாம் இன்னும் சிறப்பாக – திறம்படச் செயல்பட வைக்க திறமைசாலிகள் வேண்டும். அத்தகைய சிறப்புகளைப் பெற்றவர் என் தம்பி கருணாநிதிதான்’ என்று பலமுறை தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி, அண்ணா அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.
’ஒரு நாளைக்கு கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதை அவருக்குத் தெரியாமல் அதைக் கண்காணித்தால்தான் கண்டுபிடிக்க முடியும். இல்லை என்றால் கண்டுபிடிக்க முடியாது’ என்று அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டவர். ’என் தம்பிகள் நான் சொல்வதைச் செய்து முடிப்பார்கள். ஆனால், தம்பி கருணாநிதி மட்டும்தான் நான் சொல்லாமலேயே செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருப்பவர்’ என்று அறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பட்டவர் கலைஞர் அவர்கள். அதனால்தான் தலைவர் கலைஞர் அவர்களும் தம்முடைய இறுதி மூச்சு நிற்கின்ற வரையில், கடைசி மூச்சு நிற்கின்ற வரையில் அண்ணா – அண்ணா – அண்ணா என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்.
நான் இன்னமும் சொல்லுகின்றேன், வயது மூப்பின் காரணமாக, பேசமுடியாத நிலையில் தொண்டையில் டியூப் போடப்பட்டு சைகை மூலமாக எங்களிடத்தில், வரக்கூடிய முன்னோடிகளிடத்தில் தம்முடைய உணர்வை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் மருத்துவர்கள் அவரைப் பேச வைப்பதற்காக, சில முயற்சிகள் சில பயிற்சிகள் நடந்தன.
அவர் கையில் ஒரு பேனாவைத் தந்து கையில் ஒரு வெள்ளைக் காகிதத்தைக் கொடுத்து ‘எழுதுங்கள்’ என்று சொன்னால் அவர், எழுதிய முதல் எழுத்து எப்பொழுதும் அண்ணா – அண்ணா – அண்ணா என்று தான் தொடங்குவார். அதேபோல் பேச்சுப் பயிற்சி நடைபெறுகின்ற போது கூட நாங்கள் எல்லோரும் ‘ஏதாவது பேசுங்கள்’ என்று கேட்கின்ற போது அண்ணா – அண்ணா – அண்ணா என்றுதான் சொல்லுவார். கலைஞருக்கு எல்லாமே அண்ணாதான் – அண்ணாதான் – அண்ணாதான் என்ற நிலையிலே அவர் கடைசி நிமிடம் வரையில் வாழ்ந்திருக்கின்றார்.
அதனால்தான், அறிஞர் அண்ணா அடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற அந்த நினைவிடத்தின் பக்கத்திலேயே அவருக்கு இடம் கிடைத்திருக்கின்றது. அண்ணா அறிவாலயத்தில் கம்பீரமாக நிற்கக்கூடிய அறிஞர் அண்ணாவினுடைய திருவுருவச் சிலைக்கு அருகில்தான் கலைஞருடைய சிலை அமைந்திருக்கின்றது.. இதே, காஞ்சிபுரத்தில் இப்போது திறந்து வைத்திருக்கின்றோமே, இங்கேயும் இந்தச் சிலைக்கு அருகில்தானே அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. இது ஒன்றே போதும், அவர்களது காதலைச் சொல்ல. காதலில் தெய்வீகக் காதல் என்பார்கள். அண்ணாவுக்கும் கலைஞருக்கும் இருந்த காதல் தெய்வீகக் காதல் அல்ல, கொள்கைக் காதல்.