மூத்த பிள்ளை “முரசொலி’ தொகுத்தளிக்கும் மலர் – முரசொலி செல்வம்
நிறைந்து வாழும் கலைஞர் – இது தனது தந்தைக்கு மூத்த பிள்ளை “முரசொலி” தொகுத்தளிக்கும் மலர்! தலைவர் கலைஞரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், “முரசொலி”யின் இந்த முயற்சி, இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துவதைப் போன்றதுதான்! காலம் பலரது பயணத்தை ஏனோ முடிக்கிறது! அப்படித்தான் ஓராண்டுக்கு முன் கலைஞரின் நெடிய பயணத்தை முடித்ததாகக் கருதி இருந்தது!
காலம் நினைத்தது ஒன்று, நடந்ததோ வேறு! கடந்து சென்ற ஓராண்டு காலமும் தமிழகம் கலைஞரோடுதான் பயணித்துள்ளது! ஆம்; அதனைப் பயணிக்க வைத்தவர் நமது தளபதி! “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” – என எண்ணிப் பெருமிதம் கொள்ளும் வகையில், தனது, “அப்பா”வாக மட்டுமின்றி, தான், “தலைவர்” ஆகவும் ஏற்றுக்கொண்ட, தன் தந்தையின் புகழ், மங்காது காத்திட சிலைத் திறப்பு நிகழ்ச்சிகள், புகழஞ்சலிக் கூட்டங்கள் என நடத்தி வருகிறார் தளபதி. அந்த நிகழ்ச்சிகளில் இன்றைய சமுதாயம் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருக்கும் பலரை நெஞ்சு நெகிழப் பேச வைத்தார். அவர்களோ, அவர்கள் பார்த்துப் பிரமித்த ஒரு மாமனிதர் குறித்து உயர்வு நவிற்சியின்றி எடுத்துரைத்த உண்மைகளின் தொகுப்பை உள்ளடக்கி வருவதுதான் “நிறைந்து வாழும் கலைஞர்” மலர்.
தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்கள் பலவற்றின் தாளாக, அதில் பதிந்த எழுத்தாக, அதற்கான காரணமாக, காரணியாக, உந்துதலாக விளங்கிய மனிதாபிமானம் மாண்புடைத் தலைவனுக்கு, “முரசொலி” எடுத்திடும் இந்த மலர், காலக் கருவூலமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த நினைவு மலர் சிறப்பாக அமைய அட்டைப் படத்திலிருந்து பக்கத்துப் பக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்குத் தனது ஓயாத பணிகளுக்கிடையே நேரம் ஒதுக்கி, மலர்க் குழுவினரோடு அன்றாடம் அமர்ந்து தக்க ஆலோசனைகளைத் தந்தார் தளபதி. “அவாள் மலருக்கு சவால்” – என “முரசொலி” வெளியிட்ட முதல் பொங்கல் மலரிலிருந்து, மாநாட்டு மலர்கள், அண்ணா பிறந்த நாள் மலர்கள் என வெளிவந்த பல மலர்கள் கலைஞரின் மேற்பார்வையில் அவரது ஆலோசனைகளை ஏற்று வெளி வந்துள்ளன.
ஒவ்வொரு நாளும், தன் ஓய்வற்ற பணிகளுக்கிடையே சில மணிகளை ஒதுக்கி மலர் வேலைகளைக் கண்காணிப்பார் கலைஞர். இன்று மலர்ப் பணிகளில் தளபதி காட்டிடும் முனைப்புகளை, ஆர்வத்தைக் காணும்போது, அங்கேயும் “கலைஞர்” தான் தென்படுகிறார்! “காக்கைச் சிறகினிலே நந்த லாலா – நின்றன் கரியநிறந் தோன்றுதையே, நந்த லாலா!” – என்பது போல, “தளபதி” யின் கடின உழைப்பிலே தலைவர் “கலைஞர்” தெரிகிறார். அட்டைப் படம் எப்படி அமைய வேண்டும், பக்கங்களின் வடிவமைப்பு எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதையெல்லாம் மலர்க் குழுவினருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கிறார்!
கழகத் தலைவர் தளபதியின் மேற்பார்வையில் மலர் சிறந்து விளங்க இரவு பகல் பாராது உழைத்திட்ட மலர்க் குழுவைச் சேர்ந்த முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், கலைஞர் செய்திகள் ஆசிரியர் ப.திருமாவேலன், புலவர் முத்து.வாவாசி ஆகியோருக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு மற்றும் தலைவர் கலைஞரின் செயலாளர்களாகச் செயல்பட்ட முனைவர் கே.ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்., கே.சண்முகநாதன் முதலியோருக்கும், உடனிருந்து ஒத்துழைப்பு நல்கிய முரசொலி ஆசிரியர் குழுவினருக்கும், அலுவலர்களுக்கும், குறிப்பாகவும் சிறப்பாகவும் மலர் அழகுற அமைய அருந்துணையாக இருந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ, அவர்களுக்கும், அரசு ஆர்ட்ஸ் நிறுவனத்தினருக்கும் “முரசொலி” சார்பில் இதய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
முரசொலி செல்வம்
ஆசிரியர் – முரசொலி நாளிதழ்