திரைப்படங்கள்
திராவிட இயக்கம் வலுப்பெறத் தொடங்கிய பிறகு மக்களை சென்றடையக் கூடிய அனைத்து கருவிகளையும் மிக சாதுரியமாகக் கையாண்டது. அப்படி ஒரு வலுவான கருவிதான் திரைப்படம். அத்தகைய திரைத்துறையில் கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் சிறந்து விளங்கியவர் கலைஞர் கருணாநிதி.
குறிப்பாக அதுவரை மக்களால் திரைப் படத்தில் யார் நடிக்கிறார்கள்? யார் இயக்குகிறார்கள்? என்றெல்லாம் பேசப்பட்ட காலம் போய், யார் வசனம் எழுதியிருக்கிறார்கள்? என்று கேட்க வைத்து திரைப்பட வசனத்திற்கு ஒரு மாபெரும் இலக்கிய மரியாதையையும் பெற்றுத் தந்தவர் கலைஞர்.
திரைத்துறையில் கலைஞர் தனக்கென ஒரு இலக்கியம் கலந்த தனி நடையை உருவாக்கினார்.
கலைஞர் கதை வசனம் எழுதிய திரைப்படங்களை
பகுத்தறிவு பேசுபவை – (பராசக்தி, ராஜகுமாரி, மலைக்கள்ளன்)
அரசியல் பேசுபவை – (புதுமைப்பித்தன், குறவஞ்சி, அரசிளங்குமரி வண்டிக்காரன் மகன்)
சமூக முன்னேற்றம் பற்றி பேசுபவை – (மருதநாட்டு இளவரசி, பணம்,நாம், திரும்பிப் பார்)
பெண்ணுரிமை பற்றி – (மணமகள், ராஜா ராணி, இருவர் உள்ளம், பாசப்பறவைகள்)
இலக்கியம் பற்றிப் பேசுபவை – (அபிமன்யு பூம்புகார், உளியின் ஓசை)
என வகைப்படுத்தலாம்.
கதை வசனம் மட்டும் அல்லாது கலைஞர் பல திரையிசைப் பாடல்களையும் எழுதியுள்ளார் அவற்றில் தமிழுணர்ச்சி, சமுதாயக் கண்ணோட்டம், திராவிட இயக்கத்தின் லட்சியங்கள் போன்றவை மிளிர்வதைக் காணலாம்.
1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ திரைப்படம்தான், கலைஞர் முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம். எம்.ஜி.ஆர் நாயகன் வேடம் ஏற்று நடித்த முதல் திரைப்படமும் ‘ராஜகுமாரி’தான்.
1950-ம் ஆண்டு, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் 500 ரூபாய் ஊதியத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்த கலைஞர், அங்கு சில திரைப்படங்களில் பணியாற்றினார்.
1952-ல், கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தமிழகத்தின் புகழ்பெற்ற நடிகராக சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தியதும் இந்தப் படம்தான்.‘பராசக்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற சமூக நோக்கில் அமைந்த கூர்மையான வசனங்கள், திரைப்படத் துறையை புதிய பாதைக்கு அழைத்துச் சென்றது.
1950-களிலில் இருந்து 1970-கள்வரை, தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவரும் தலைவர் கலைஞர்தான். சிவாஜிக்கு ‘பராசக்தி, மனோகரா’வும், எம்.ஜி.ஆருக்கு ‘மந்திரி குமாரி’, ‘மலைக்கள்ளன்’ ஆகியவையும் திருப்புமுனையாக அமைந்தன.
கலைஞர் கதை – வசனத்தில், மொத்தம் 9 திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். நடித்துள்ளார். ஆரம்பகாலங்களில், கலைஞரை ‘ஆண்டவரே’ என்று அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர்.