கடித இலக்கியங்கள்
கதைகளிலும் இதழ்களிலும் நூல்களிலும் கடித வடிவத்தை ஒரு உத்தியாக கொண்டு கட்டுரை வரைவதை புனைவுக்கடிதம் எனலாம். தமிழில் இந்த முயற்சியை முதலில் தொடங்கியவர் “மு.வ” அவரைத் தொடர்ந்து அண்ணா எனது “தம்பிக்குக் கடிதம்” மூலம் இதனை மிக அழகாக கையாண்டார். அண்ணாவை தொடர்ந்து எழுதத் தொடங்கிய கலைஞர் கடிதம் இலக்கியத்தை ஒரு சொல்லின் மூலம் மரபு மாறாமல் இறுதிவரை எழுதினர்.
பொதுவாக கட்சித் தொண்டர்களுக்கு உடன்பிறப்பே என்ற விளிப்புடன் கடிதத்தை துவங்குவார். அதுபோக பழைய நண்பனே, மாஜி நண்பா என்ற விளிப்புடனும் சில கடிதங்கள் குறிப்பிட்ட நபர்களுக்கு எழுதியிருப்பார்.
கலைஞரின் கடிதங்கள் அரசியல் செய்திகளோடு நாட்டு நிகழ்வுகளையும் பொருளாதார, கலாச்சார, சமுதாய துறைகளில் போக்குகளையும் ஆய்வு செய்வதாக அமைந்திருக்கும். அவரது கடிதங்களில் முக்கிய கூறுகளாக சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழி உணர்வு ஆகியவையுடன் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியத்தின் செல்வாக்கும் மிகுந்திருக்கும்.
படிப்பவரின் உள்ளத்தில் எளிமையாக தான் கூற நினைக்கும் கருத்துக்கள் சென்று சேரும் வகையில் “குட்டிக்கதைகள், உருவகக்கதைகள், உவமை உருவகம், பண்பாட்டுத் தலைவர்கள் வரலாற்று நாயகர்கள், இலக்கியவாதிகள், போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகள்” போன்றவற்றை தம் கருத்துக்களை விளக்குவதற்கு உத்தியாக கையாண்டார்.
கடிதங்களில் அவரது மொழி நடை அலாதியானது அவை தன் தொண்டர்களை போராட அழைக்கும் பொழுது “வீரத்தின் திருவுருவே! மான மரபின் குலவிளக்கே! என உணர்வுபூர்வமாகவும்”, அதே சமயம் கட்டளையிடும் பொழுது உள்ளம் கொள்ளத் தக்கதாகவும், சில சமயங்களில் அணுக்கமான உரையாடல் வடிவிலும் அமைந்திருக்கும்.