கலைஞர் எழுதிய நூல்கள்
‘புதையல்’, ‘வான்கோழி’. ‘சுருளிமலை’, ‘ஒரு மரம் பூத்தது’, ‘ஒரே ரத்தம்’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பாயும்புலி பண்டாரக வன்னியன்’, ‘பொன்னர் சங்கர்’ ஆகிய நாவல்களை எழுதியிருக்கிறார் கலைஞர். இவற்றுள், ‘தென்பாண்டிச் சிங்கம்’ நாவல், 1989-ம் ஆண்டுக்கான தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகத்தின் ‘ராஜராஜன்’ விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
‘நளாயினி’, ‘பழக்கூடை’, ‘பதினாறு கதையினிலே’ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் கலைஞர்.
‘குறளோவியம்’
அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.
178 நூல்கள்
‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.
‘நெஞ்சுக்கு நீதி’
உடன்பிறப்புகளுக்கு கலைஞர் எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 12 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில், தனது வாழ்க்கை நிகழ்வுகளை மூன்று தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.
92-வது வயது வசனகர்த்தா
கலைஞர் கடைசியாக வசனம் எழுதிய தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘ஸ்ரீ ராமானுஜர்’ ஆகும். ‘ஸ்ரீ ராமானுஜர்’ தொலைக்காட்சித் தொடருக்காக, தனது 92-வது வயதில் வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.