கலைஞர் கைது – தீக்குளிப்பு மரணங்கள்
1981-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள், இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்னையில் தலைவர் கலைஞர் அவர்கள் அன்றியிருந்த அ.தி.மு.க அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். கலைஞர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செப்டம்பர் 16-ம் நாள் கோவிலடி பிருந்தாவன், செப்டம்பர் 20-ம் நாள் திருச்சி மனோகரன், 22-ம் நாள் திருவாரூர் கிட்டு, பெருந்துறை முத்துப்பாண்டியன், 26-ம் நாள் கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகநாதன், சென்னையில் மேரி உள்ளிட்ட பலர் தீயிட்டுக்கொண்டு உயிர் இழந்தனர். மேலும் பலர் கடுமையான தீக்காயங்களோடு உயிர் மீண்டனர்.
1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் நாள், வெளிக்கடைச் சிறைச்சாலைக்குள் நுழைந்த சிங்களவர், சிறையில் இருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழர்களை படுகொலை செய்தனர். அப்போது, தலைநகர் சென்னையில் 7 மணி நேரத்துக்குள் 8 லட்சம் பேரைத் திரட்டி தி.மு.க நடத்திய பேரணி, உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிக் பார்க்கச் செய்தது.
ஈழத்துக்காக பதவி விலகல்
1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் நாள், மத்திய – மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி, தலைவர் கலைஞர் அவர்களும் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களும் தங்களது சட்டப் பேரவை உறுப்பினர் பொறுப்புகளை விட்டு விலகினர்.
டெசோ
1985-ம் ஆண்டு மே மாதம் 13-ம் நாள், இலங்கையில் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தமிழகத்தில் ‘தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்க வேண்டுமென்று முடிவெடுத்து, அந்த அமைப்பு உருவாகி அதன் தலைவராக கலைஞர் அவர்களும், உறுப்பினர்களாக பேராசியர், தமிழர் தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோர் இடம்பெற்றனர்.
தீக்குளிப்பு மரணங்கள்
1985 மே 16-ம் நாள், காஞ்சியில் நடைபெற்ற மறியல் போரில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு கைதாகி, சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தீர்ப்பைக் கேட்டுப் பொறுக்க முடியாத கழகக் காளை வேணு, பாலசுப்பிரமணியன் என்கிற பிராமண இளைஞர், தருமபுரி அப்புலு, வலங்கைமான் ரங்கன் போன்றோர் தீக்குளித்து உயிர் துறந்தனர்.
நாடு கடத்தல் ஆணை
1985 ஆகஸ்ட் 23-ம் நாள், சந்திரகாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த அன்றைய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னையில் பேரணி நடத்தி, நாடு கடத்தும் செயல் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடருமென்று தி.மு.கழகம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக நாடு கடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.