பெண்களுக்குச் சொத்துரிமை – நலத்திட்டங்கள்
1929-ம் ஆண்டுச் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை வழங்கும் தனிச் சட்டத்தை, 1989-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள், நாட்டுக்கே முன்னோடி மாநிலமாகத் தமிழகச் சட்டமன்றத்தில் தி.மு.க அரசு நிறைவேற்றியது.
ஏழை, எளிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பெண்களின் திருமணத்துக்காக, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத்
திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வே.ரா – நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டம், ஈ.வே.ரா – மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள் திருமண உதவித் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையார் இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு
நிதியுதவித் திட்டம், சத்தியா அம்மையார் குழந்தைகள் காப்பகங்கள் திட்டம், சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பங்காரு அம்மையார் மகளிர் குழுக்கள் திட்டம் ஆகியற்றின் மூலம், மகளிர் பயன்பெறுவதற்காகத் தி.மு.க அரசு பல கோடி ரூபாய்களை ஒதுக்கி அவர்களின் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தியது.
மாற்றுத் திறனாளிகளை மனந்துகொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊக்க நிதி, விதவைகளின் குழந்தைகளுக்கு இலவசப் பாடநூல்களும், குறிப்பேடுகளும் வழங்கும் திட்டத்தைத் திமு.க அரசு தொடங்கி வைத்தது. மகளிர் தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது, தொழில் மனை ஒதுக்கீட்டில் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களுக்கு மோட்டார் பொருத்திய இலவச வாகனங்கள் வழங்கப்பட்டு, மீனவ மகளிர் மீன் விற்பனைக்கு உதவி செய்யப்பட்டது. இந்தியாவிலேயே முதலாவதாக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி வகிக்க ஆவனச் செய்யப்பட்டதும் தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான்.
1998-ம் ஆண்டு மகளிர் நடத்தும் நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டன. 1999 ஜனவரி முதல் நாள் அன்று, மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம் தொடங்கப்பட்டது.