புதினங்கள்
கலை என்பது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான கருவியாக இருக்க வேண்டுமே ஒழிய வாழ்க்கைக்கு பயன்படாத சொற்குவியல்களாக, பொழுதுபோக்காக மட்டுமே அமைந்துவிடக் கூடாது என்று கருதுபவர் கலைஞர். அதன் அடிப்படையிலேயே அவர் தமிழ் உலகிற்கு வழங்கிய 16 புதினங்களும் பகுத்தறிவையும் வளர்ப்பதாக, சாதி மத பேதங்களின் ஒழிப்பை வலியுறுத்துவதாக, போலித்தனமான வாழ்க்கையை சாடுவதாக, தமிழரின் பழம் பெருமைகளை போற்றுவதாக, மண வாழ்க்கையில் ஆண் பெண் சமத்துவத்தை குறிப்பதாக அமைந்திருக்கும்.
அவரது முதல் நாவலான “புதையல்”- மூடத்தனத்தில் முக்கிய மனிதர்கள் புதையலை அடைவதற்காக செய்யும் மிருகத்தனமான உயிர் பலிகள், போலிச்சாமியார்களின் கயமை போன்றவற்றை எடுத்துக்காட்டி பகுத்தறிவது வெளிச்சத்தை பாய்ச்சுவதாக அமைந்திருக்கும்.
ஒரே ரத்தம் என்ற புதினத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் துன்பங்களையும், அந்த மக்கள் தங்கள் தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபட வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார். மிக முக்கியமாக கலப்புமணம் பெருகவேண்டும் என்ற கருத்தையும் இந்த புதினத்தில் வலியுறுத்தியிருப்பார்.
கலைஞருக்கு தமிழ்ப் பல்கலைகழகத்தின் படைப்பிலக்கியம் பரிசை பெற்றுக் கொடுத்த புதினம் தென்பாண்டிச் சிங்கம். அழகு நடையில் எழுதப்பட்ட இந்த நாவல் வரலாற்று நிகழ்வுகளை புள்ளிவிவபரங்களோடு எடுத்துரைப்பதோடு நில்லாமல், தற்கால சூழலுடன் அவற்றைப் பொருத்தி சமூகத்தை விழிப்படைய செய்வதாக அமைந்திருக்கும்.
தனது “ஒரு மரம் பூத்தது” என்னும் நாவலின் மூலம் விதவை மறுமணத்தை பற்றி சமுதாயத்திற்கு பக்குவமாக புரிய வைத்திருப்பார் கலைஞர்