கவிதைகள்
கலைஞரின் கவிதைகளைப் பற்றி மு.மேத்தா கூறுகையில் அவரது கவிதைகள் மரபும் அல்ல புதியதும் அல்ல “புதுமரபுக் கவிதைகள்” என்கிறார். ஏனெனில் அவரது கவிதைகளில் யாப்பு, எதுகை, மோனை என மரபுக் கவிதைகள் போன்று அனைத்து இலக்கண நயமும் பொருந்தி இருக்கும். அதேசமயம் புதுமைகளைப் புகுத்த மரபை தனக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளவும் அவர் தயங்கியதில்லை.
1938 ஆம் ஆண்டு தனது 14 வயதில் “ஓடி வந்த இந்திப் பெண்ணே நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” எனத் தொடங்கும் பாடல் வரிகளுடன் தனது கவிதைப் பயணத்தைத் தொடங்கி தனது இறுதிக்காலம் வரை தமிழ் உலகிற்கு எண்ணற்ற கவிதைகளை வழங்கியுள்ளார்.
கலைஞர் பற்றி வைரமுத்து கூறும் பொழுது “தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முன்னுதாரணம் இல்லாத முதல் உதாரணம் முத்தமிழறிஞர் கலைஞர்” என்பார்.
கவிஞர் இளையபாரதி ” உயிரோடு இருப்பது வேறு , உயிர்ப்போடு இருப்பது வேறு. தன் ஒவ்வொரு கணத்தையும் உயிர்ப்போடு வைத்திருப்பவர் கலைஞர் அதற்கான ரகசியம் அவரது கவித்துவம்” என்று கலைஞரின் கவி மனத்தைப்பற்றி சிலாகிப்பார்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பின் பெயரே “கவிதையல்ல” என்பதுதான் இதுவே அவரது கவித்துவத்திற்கு ஒரு சான்று.
கலைஞரின் கவிதை மழை என்னும் கவிதைத் தொகுப்பு நூல் 1707 பக்கங்களைக் கொண்டது. 1988 முதல் 2004 வரை 68 ஆண்டுகள் கலைஞர் எழுதிய கவிதைகளை 210 தலைப்புகளில் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது.
அண்ணாவிடம் இதயத்தை இரவலாக கேட்ட அவலச் சுவைமிகுந்த இரங்கல் கவிதைகள்,
விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய கவிதைகள்,
இந்திரசித், வாலி போன்ற மாற்று கதாநாயகர்களைப் பற்றிய புதிய பரிணாமத்தை வழங்கும் கவிதைகள்,
கவியரங்கில் பல்வேறு தலைப்புகளில் பாடிய கவிதைகள்,
பகுத்தறிவை, மொழி உணர்வை ஊட்டும் புரட்சிகர கவிதைகள்
என கலைஞரின் கவி வாழ்வு பல்வேறு சுவைகளையும், உணர்வுகளையும் தமிழ்ச் சமூகத்திற்கு ஊட்டியுள்ளது.