பெரியாரின் சிம்மாசனத்தில் கலைஞர்!
கலைஞர் சிலை திறப்பு விழா – ஈரோடு 30.1.2019
தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலை ஈரோட்டில் அமைந்திருக்கக்கூடிய வீதி யின் பெயர் திரு.வி.க வீதி. என்று பெயர் பெற்று இருக்கின்றது. எனவே, பொருத்தமாக மிகவும் சிறப்பானதொரு நிலையில் அமைந்திருக்கின்றது. ‘சுயமரியாதை இயக்கத்தினுடைய தந்தை – நம்முடைய தந்தை பெரியார் அவர்கள். அந்த இயக்கத்துக்குத் தாய் நான்தான்’ என்று திரு.வி.க அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள். 1948 ஆம் ஆண்டு இதே ஈரோட்டில் திராவிடர் கழகத்தினுடைய மாநாடு நடைபெற்றிருக்கின்றது. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட திரு.வி.க அவர்கள், ‘திராவிட நாடு’ போன்ற அமைப்புக் கொண்ட அந்தப் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றியிருக்கின்றார்கள்.
அதே மாநாட்டில்தான், தலைவர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற, ‘தூக்கு மேடை’ நாடகம் நடந்திருக்கின்றது. அத்தகைய ஈரோட்டில் 70 ஆண்டு காலத்திற்குப் பிறகு தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. தலைவர் கலைஞர் அவர்களுடைய குருகுலமான ஈரோட்டில் இந்தத் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்திருக்கின்றது.
கலைஞரின் மகனாக நான் இந்தச் சிலையைத் திறந்து வைக்கிறேன். கழகத்தின் பொதுக்குழுவில் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த நேரத்தில் அப்பொழுது நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன்.
‘நீங்கள் எல்லோரும் தலைவரை மட்டும் இழந்திருக்கின்றீர்கள். நானோ தலைவரை மட்டும் இழந்துவிடவில்லை என்னுடைய தந்தையையும் சேர்த்து நான் இழந்திருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுச் சொன்னேன். அந்தத் தந்தையினுடைய சிலையை இன்னொரு தலைவரோ, தொண்டரோ திறப்பதில் வியப்படைய வேண்டிய அவசியமில்லை. அது புதியதுமில்லை. ஆனால், தந்தையின் சிலையை மகன் திறந்து வைக்கிறார் என்று சொன்னால் உண்மையில் வரலாற்றில் பதிவாகியிருக்கக் கூடிய ஒரு செய்தியாக அமைந்திருக்கின்றது. இந்தத் தகுதியை எனக்கு உருவாக்கித் தந்தவரே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான். அவர் என்னைப் பெற்றெடுத்தவர் மட்டுமல்ல.
என்னையும் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவராக உயிர்ப்பித்தவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான். இந்த இடத்தில் நான் நிற்கின்ற நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையைத் திறந்து வைக்கின்ற நேரத்தில் அந்தச் சிலைக்கு மலர்கள் தூவப் படுகின்ற நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் எல்லாம் என்னுடைய சிந்தனைகள் எல்லாம் எங்கோ பறந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு உணர்ச்சி மயமாக நான் எப்போதும் இருந்தது இல்லை. அவ்வளவு உணர்ச்சியோடுநான் நின்று கொண்டிருக்கின்றேன்.
இந்தச் சிலையைப் பார்க்கின்ற நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களே உயிர் பெற்று மீண்டும் வந்து விட்டாரோ என்று நினைக்கத்தான் நமக்கெல்லாம் தோன்றுகிறது.
’பாராட்டிப் போற்றிவந்த பழமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்’
– என்று தந்தை பெரியார் அவர்களைப் பற்றி நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கவிதை பாடியிருக்கின்றார்கள். அத்தகைய தந்தை பெரியார் பிறந்த ஊர்மட்டுமல்ல, கலைஞர் என்ற சமூகப் போராளி உருவான ஊரும் இந்த ஈரோடுதான். ‘என்னுடைய பெற்றோர்கள் படி படி என்று பள்ளிக் கூடங்களைக் காட்டி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், நான் ஈரோட்டில் தந்தை பெரியார் பள்ளியில் படித்தவன்’ என்று தர்மபுரியில் தந்தை பெரியாரின் சிலையைத் திறந்து வைத்துவிட்டு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
தந்தை பெரியார் அவர்கள், கலைஞர் மீது அதிகளவு பாசம் கொண்டவர். அதே அளவிற்கு நம்பிக்கை கொண்டிருந்தவர். தந்தை பெரியார் அவர்களைப் பொருத்தவரையில் தம்னுடைய உணர்ச்சிகளை எப்பொழுதும் யாரிடத்திலும் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். ஆனால், தலைவர் கலைஞரிடத்தில் அந்த உணர்வை, அந்தப் பாசத்தைப் பல நேரங்களில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றார். அதற்குப் பலசான்றுகள் உண்டு.
1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு வெள்ளிச் சிம்மாசனம் வழங்கும் விழா நடைபெறுகின்றது. அந்த விழாவில் தந்தை பெரியார் அவர்கள், அந்த மேடையில் முதல்வராக உட்கார்ந்திருக்கக் கூடிய தலைவர் கலைஞர் அவர்களை, இங்கே வா இங்கே வா, என்று கையைப் பிடித்து தாம் உட்கார வேண்டிய அந்த வெள்ளிச் சிம்மாசனத்தில் தலைவர் கலைஞர் அவர்களை உட்காரவைத்து அழகு பார்த்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிடுகின்றபோது, ‘என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பொன்னாள் இந்நாள்’ என்று பெருமையோடு சொல்லியிருக்கின்றார்.
‘சாந்தா அல்லது பழனியப்பன்’ என்ற நாடகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ‘சிவகுரு வேடம்’ ஏற்று நடிக்கின்றார். அந்த நாடகத்தின் அரங்கேற்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் நடக்கின்றது. அந்த விழாவிற்குத் தந்தை பெரியார் வந்திருக்கின்றார். அறிஞர் அண்ணா வந்திருக்கின்றார். பட்டுக்கோட்டை அழகிரிசாமி வந்திருக்கின்றார். அந்த நாடக அரங்கேற்ற விழா பாதியில் நிறுத்தப்படுகின்றது.
காரணம் ஒரு கலகக்காரக் கும்பல் உள்ளே நுழைந்து ஒரு மிகப் பெரிய கலவரத்தை ஏற்படுத்துகின்றார்கள். தந்தை பெரியாரை, பேரறிஞர் அண்ணாவை, பட்டுக்கோட்டை அழகிரி சாமி ஆகியோரைப் பாதுகாத்து, ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து விட்டார்கள். அதன்பிறகு தலைவர் கலைஞர் அவர்களும், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்களும் புதுவை நகர வீதி யில் நடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.
நடந்துசென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கலகக்காரர்கள் அந்த மூன்று பேரையும் கண் மூடித்தனமாகத் தாக்குகிறார்கள். அப்படிப் பட்ட நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களைப் பலமாகத் தாக்கி விட்டு, அவரைத் தூக்கி, அப்படியே சாக்கடையில் வீசிவிட்டுப் போகின்றார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் எல்லோரும் தலைவர் கலைஞர் அவர்கள் இறந்து விட்டாரோ என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு அந்தக் காட்சி அமைந்திருந்தது.
மறுநாள் காலையில் தந்தை பெரியார் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, வேக வேகமாக ஓடிவந்து பார்க்கிறார். படுக்கையில் படுத்து இருக்கக் கூடிய தலைவர் கலைஞர் அவர்களைத் தம் மடிமீது படுக்க வைத்து, அவர் பட்டிருக்கக் கூடிய காயங்களுக்கு எல்லாம் மருந்துபோட்டு, அதற்குப் பிறகு ‘நீ இங்கு இருக்க வேண்டாம்; நீ நான் இருக்கக் கூடிய ஈரோட்டிற்கு வா’ என்று உடனடியாகத் தலைவர் கலைஞர் அவர்களை ஈரோட்டிற்கு அழைத்து வந்து தம்முடைய ‘குடியரசு’ வார இதழில் துணை ஆசிரியராக இருந்து பணியாற்று என்று உத்தரவிட்டார்.
அதற்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் அந்த வார இதழில் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றியிருக்கின்றார். அந்தச் சமயத்தில்தான் திராவிடர் கழகம் உருவாகிறது. அப்படி உருவாகக் கூடிய திராவிடர் கழகத்திற்குத் கொடியை அமைத்தாக வேண்டும்; ஆலோசனை நடக்கின்றது. அந்த ஆலோசனையில் என்ன முடிவு செய்யப்படுகின்றது என்று சொன்னால் கருப்பு நிறத்தில், அதற்கு நடுவில் சிவப்பு. எனவே முழுமையாகக் கருப்பு இருக்க வேண்டும். இடையில் சிவப்பு நிறம் வட்ட வடிவத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அப்பொழுது உடனடியாகக் கருப்பு நிறத்தை ஓர் அட்டையில் தயார் செய்கின்றார்கள். சிவப்பு நிறத்திற்கு எந்த வர்ணமும் கிடைக்கவில்லை. கருப்பு மை இருந்தது, அதைச் சுலபமாகச் செய்துவிட்டார்கள். அப்பொழுது, சிவப்பு மை கிடைக்கவில்லை, உடனே தலைவர் கலைஞர் அவர்கள் என்ன செய்தார் என்று தெரியுமா?
அங்கு மேஜை மீது இருக்கக்கூடிய குண்டூசியை எடுத்து, தம்முடைய விரல் நுனியில் குத்தினார். அதிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை எடுத்து அந்தக் கருப்பு நிறத்திற்கு நடுவில் வட்ட வடிவமாகப் பூசினார். அதுதான் திராவிடர் கழகத்தினுடைய கொடியாக இன்றைக்கு அமைந்திருக்கின்றது.
அன்று திராவிடர் கழகத்தினுடைய கொடிக்காக ரத்தம் சிந்திய தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலை இன்றைக்கு ஈரோட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது மிக மிகப் பொருத்தமானது.