திரைப்படம், நாடகம், கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், வரலாறு என அத்துனையையும் தன் எழுத்துக்களால் அணிகலன்களாக்கி இலக்கியத் தமிழுக்கு அணிவித்து அகமகிழ்ந்தவர் கலைஞர். பார்போற்றும் படைப்பாளியாக இன்றும் தன படைப்புகளால் உயிர்ப்புடன் மிளிர்கின்றார்.
பழனியப்பன், தூக்குமேடை, உதயசூரியன், சேரன் செங்குட்டுவன் உள்ளிட்ட 21 நாடகங்களையும், ராஜகுமாரி முதல் பராசக்தி, மந்திரகுமாரி, மலைக்கள்ளன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை வசனமும், பல பாடல்களும், புதையல், வான்கோழி, தென்பாண்டிச்சிங்கம், பாயும் புலி பண்டாரக வன்னியன் உள்ளிட்ட நாவல்களையும், குறளோவியம், தொல்காப்பிய உரை, நெஞ்சுக்கு நீதி, போன்ற நூல்களையும் படைத்து படைப்புலகின் முடிசூடா மன்னராக 64 ஆண்டுகள் வலம் வந்தவர்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதுமே கலைஞரின் எழுத்து எவ்வகையிலும் தொய்வடையவில்லை. 12 வயதில் நாடகங்களை எழுதத் தொடங்கியவர் தன் 92வது வயதிலும் இராமானுஜர் எனும் தொலைகாட்சி தொடருக்காக கதை வசனம் எழுதிக்கொண்டு இருந்தார்.
திரையுலகிலும் இலக்கிய உலகிலும் தன் படைப்புகளின் மூலம் பல மாறுதல்களை கொண்டு வந்ததோடு சமுதாயத்திலும் அதன் எதிரொலி இருக்கும் வண்ணம் செய்தார்.