அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
சாதிபேதமற்ற சமுதாயம், மூடநம்பிக்கை ஒழிந்த சமுதாயம், மூடநம்பிக்கை ஒழிந்த சமுதாயம் காண வேண்டும் என்று தந்தை பெரியார் ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்றும் வண்ணம் 2.10.70-ல் சட்டப்பேரவையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அர்ச்சகர் சட்டம் ஒன்றை முதல்வர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
1972 மார்ச் 14-ம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பது வகுப்பு வேறுபாடற்ற நடவடிக்கை. அந்த நடவடிக்கைகளிலோ விவகாரங்களிலோ தலையிடவில்லை. எனவே தமிழ்நாடு அரசுகொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் செல்லுபடியானதே” என்று அந்த தீர்ப்பிலே கூறப்பட்டிருந்த போதிலும் நடைமுறையில் இனிமேல் செய்யக்கூடிய காரியம் என்ற வகையில் அந்த சட்டத்தின்படி காரியங்களை நடைமுறைக்கு வராத அளவுக்கு முடக்கப்பட்டது.
அந்த சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்றால் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. அதற்கு எத்தனையோ முறை கழக அரசியல் மத்திய அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டும் கூட மத்திய அமைச்சர்களிடத்தில் விவாதித்தும் கூட அந்த அரசியல் சட்டதிருத்த பணி நடைபெறவேயில்லை.
அதனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகிவிட வேண்டும். என்ற தமது அந்த ஆசை ஒன்று மட்டும் நிறைவேறாத நிலையிலேயே தந்தை பெரியார் அவர்கள் மறைந்து விட்டார்கள்.
தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்திருந்த அந்த முள்ளை அகற்றிடும் வகையில் திமுக கழகம் 2006-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 23.5.2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும் திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி பாகுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழிவகை செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் 2006-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன் சபை ஆகியவற்றின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 2006-ம் ஆண்டில் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.
பயிற்சி முடிந்த நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டதால் உருவாக்கிட இயலாமல் போய்விட்டது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
தமிழக அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வக்கீல்கள் பி.பி.ராவ் கோலின்,கொன்சால்விஸ் மற்றும் யோகேஷ் ஆகியோர், அனைத்து துறைகளிலும் சமூக நீதியை கருத்தில் கொண்டு இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது. இப்படி நியமனம் செய்வதற்கு அரசியல் சாசனத்தில் எந்த சடையுமில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்காமல், அனைத்து தரப்பினரும் எவ்வித வேறுபாடும் இன்றி ஆலயங்களில் பூஜைகளை செய்ய வழிவகுத்து அந்த மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. இதை ஆகம விதிகளை காட்டி எதிர்ப்பது தவறானது” என்று கூறினார்கள்.
207 பேரை அர்ச்சகர்களாக நியமிக்கும் வகையில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நியமனங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் அவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.” என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
12.ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச்சங்கம், தென்னிந்திய திருக்கோயில் அர்ச்சக்ர்கள் பரிபாலன் சபை ஆகியவற்றின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.பராசரன் மற்றும் ஜி.உமாபதி ஆகியோர் வாதிடுகையில்,
“தமிழக அரசின் இந்த அரசாணை ஆகம விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், நடைமுறை சிக்கல்கள் நிரம்பியது என்றும், மேலும் 1972-ம் ஆண்டில் சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் அரசியல் சாசனம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரானது” என்றும் கூறினார்கள்.
“ஆகம சாஸ்திரப்படி யாரைவேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது. என்று வாதிட்ட அவர்கள் மேலும் இந்து ஆலயங்களில் பல பிரிவினரும் பூஜைகள் செய்து வருவதாகவும் இந்த அரசாணை அப்படி ஏற்கனவே பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனவர்களின் அடிப்படை உரிமைகளை முறிக்கும் செயலாகும்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
23.4.2015-ம் தேதி இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு 16.12.2015-ல் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது,
“இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சியும் தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம். என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனை புறக்கணிக்க முடியாது”
“அதே நேரத்தில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிப்பதை தடுக்கவும் முடியாது. மத நம்பிக்கைக்கு வழங்கப்படும் சுதந்திரம் போன்று மத நடைமுறைகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். நீண்ட காலமாக இருந்துவரும் நடைமுறைகளுக்கு எதிரான நம்பிக்கை மத சுதந்திரத்தை மீறும் செயலாகும். ஒவ்வொரு கோயிலின் நடைமுறைகளை கருத்தில் கொண்டே இந்த அரசாணையை பார்க்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு கோயிலிலும் எழக்கூடிய பிரச்சனைகளை நீதிமன்றம் புரிந்து கொண்டுள்ளது. அதனை தவிர்க்க முடியாது. அர்ச்சகர்கள் நியமன பிரச்சனை ஏற்படும்போது ஒவ்வொரு தனிப்பட்ட கோயிலிலும் நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக் கொள்ளவேண்டும்.
“அர்ச்சகர்களை ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும், இதை அரசியல் சட்டத்தின் 14வது பிரிவை மீறும் செயலாக கருத முடியாது. அதே நேரத்தில் அரசியல் சட்டம் வகுத்துள்ள அடிப்படை உரிமைகளையும் கருத்தில் கொண்டு இந்த நியமனங்கள் அமைய வேண்டும்” இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த தற்காலிக தடை நீங்கி விட்டது. இந்த அரசாணையை தக்க வைப்பதற்கு 1970லிருந்து 45ஆண்டு காலம் போராட வேண்டி இருந்தது. “அர்ச்சகர்கள் நியமன பிரச்சனை ஏற்படும்போது ஒவ்வொரு தனிப்பட்ட கோயிலிலும் நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக் கொள்ள வேண்டும்” என உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பினை வெளியிட்டுள்ளதால், இனி இந்த அரசாணையை அமுலாக்குவதில் எந்த குழப்பமும் இல்லை.