கழகத்தின் எழுச்சி – மத்திய அரசின் சூழ்ச்சி
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை தங்கள் அரசியல் ஆதிக்கத்தை நிலை நிறுத்த தேசியக்கட்சிகள் காய் நகர்த்துவது வாடிக்கை. அத்தகைய ஆதிக்கத்தை நடத்தி வந்தவர்களுக்கு எதிராக, தமிழகத்தில் ஒரு மாநிலக்கட்சி, மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதை பொறுக்க முடியுமா?!
இந்திய வரைபடத்தில் தென்கோடியில் உள்ள ஒரு மாநிலம், சர்வவல்லமை பொருந்திய மத்திய அரசை நோக்கி உரிமைக்குரல் எழுப்புகிறதென்றால் சகித்துக்கொள்ளத்தான் முடியுமா?!
தமிழகத்தில் ஒரு மாநிலக் கட்சி பெற்ற எழுச்சி, அதனைத் தொடர்ந்து அது கண்ட வெற்றி, பிற மாநிலங்களின் அரசியலில் எதிரொலிக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே மாநில அளவிலான கட்சிகள் தோன்றி, அகில இந்தியக் கட்சிகளுக்கு அறைகூவல் விடத்தொடங்கின.
இந்த நிலையில்தான், மூலவேரை வெட்டிவிட்டால் மரம் விழுந்துவிடும் என்ற கருப்பு எண்ணம், மத்திய ஆட்சியாளர்கள் மத்தியிலே விதைக்கப்பட்டது. அதிகாரத்தில் இருந்த கட்சி, அந்தப் பணியை நடத்தி முடித்திட அவசர முடிவெடுத்தது. நேரடியாக தி.மு.க மீது எந்தத் தாக்குதலும் நடத்த முடியாத நிலை. ஏனென்றால், மக்கள் சக்தி அதனிடம் இருக்கிறது. மக்களோடு மக்களாகப் பயணிக்கும் இயக்கம் அது. குக்கிராமங்கள்வரை ஆழமாக வேர்விட்டுள்ள கட்சி. எனவே, நியாயத்துக்குப் புறம்பான எந்த முயற்சியும் மக்கள் புரட்சியை உருவாக்கிவிடும்.
கழகத்தை உடைக்க குறுக்கு வழி
கழகத்தை உடைத்து அதன் செல்வாக்கை முடக்க எண்ணிய மத்திய ஆட்சியாளர்கள், அதன் செல்வாக்கு மிக்கத் தலைவர்களைப் பிரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர். இதை, அப்போதிருந்த உளவுத்துறை அதிகாரி குறிப்பிட்டிருந்ததை ஜூனியர் விகடன் வார ஏடு (போலீஸ் (மனிதர்கள் – 13) வெளியிட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் எம்.ஜி.ஆர் குறி வைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர் சுற்றி வளைப்பு
எம்.ஜி.ஆரை எப்படி வளைக்க முடியும் என்பதற்குத் திட்டங்கள் தீட்டப்பட்டன. எம்.ஜி.ஆர் அப்போது தமது பட நிறுவனமான எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்காக வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தித் திரும்பியிருந்தார். அந்நியச் செலவாணி பெறுவதற்குப் பல கட்டுப்பாடுகள் இருந்ததால், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்கு அனுமதிக்கப்பட்ட அந்நியச் செலவாணியைவிட அதிகம் செலவிடப்பட்டுள்ளது என்ற செய்தியை எம்.ஜி.ஆரை மிரட்டிப் பணிய வைக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது.
வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகள் முடுக்கிவிடப்பட்டன. எம்.ஜி.ஆர் மட்டுமின்றி அவருடன் சென்ற நடிகர்கள், தொழிற்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் விசாரணை வளையத்துக்குள் சிக்க வைக்கப்பட்டனர். எம்.ஜி.ஆர் அதிர்ச்சிக்கு ஆளானார்.
கைப்பாவையான எம்.ஜி.ஆர்
கழகத்தை உடைக்கும் முயற்சியை எம்.ஜி.ஆர் மூலம் நிறைவேற்றிட, அன்று மத்திய அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம் மேற்கொள்ள ஆரம்பித்தார். அவருக்கு உறுதுணையாக கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் செயல்பட்டார். கழகத்தில் இருந்து விலகுவது குறித்து எம்.ஜி.ஆருக்கு அப்போது ஊசலாட்டம் இருந்தது. இதுமட்டுமல்லாமல், தமது சினிமா செல்வாக்கு சரிந்துவிடுமோ என்ற அச்சமும் இருந்தது. இந்நிலையில்தான் அந்நியச் செலவாணி மோசடி வழக்கு, தண்டனை போன்றவற்றை எடுத்துக்காட்டி, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி தங்கள் கைப்பாவையாக்கிக் கொண்டனர்.
நினைத்தது ஒன்று நடந்து ஒன்று என்பதற்கிணங்க, எம்.ஜி.ஆரை இழுத்துவிட்டால் தி.மு.க அழியும் என்று நினைத்தவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டனர். எம்.ஜி.ஆர் இன்னொரு சக்தியாக உருவாகிவிட்டார். திராவிட இயக்கத்தால் உரமேற்றப்பட்ட கெட்டியான மண் தமிழகம் என்பதால், இங்கே திராவிட இயக்கக் கொள்கைகளை விடுத்து யாரும் தலையெடுக்க முடியாது என்ற நிலையில், திராவிட இயக்கப் போர்வையிலே எம்.ஜி.ஆர் பவனி வரத் தொடங்கினார்.
ஆப்பசைத்த குரங்கைப்போல் தவித்தவர்கள் மூளையில் அடுத்தத் திட்டம் உருவானது. அதுதான் ஊழல் குற்றச்சாட்டு.
காலிப் பெருங்காய டப்பா
1972-ம் ஆண்டு நவம்பர் மாதம், எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரமும் தி.மு.க மீது புகார்ப் பட்டியல்களைத் தயார் செய்து, அதனை ஒரு பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆளுநரிடம் அளித்தனர். அந்தப் பட்டியலை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாரு கேட்டுக்கொண்டனர். பட்டியலில் என்ன உள்ளது, யார் மீதெல்லாம் புகார் உள்ளது என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, எம்.ஜி.ஆர் பதில் கூற மறுத்துவிட்டார்.
புகார்ப் பட்டியலில் உள்ளது என்ன என்று கூறினால், அவதூறு வழக்கு பதிவு செய்யப்படும் என்ற பயத்தின் காரணமாக எம்.ஜி.ஆர் வாய் திறக்கவில்லை. மூடப்பட்ட அந்தப் பெட்டியில் என்ன இருந்தது என்பது மர்மமாகவே இருந்தது. ஆளுநரிடம் அளித்தப் புகார் மனுவை அரசுக்கு அனுப்பித்தான் பதில் பெற முடியும் என ஆளுநர் தெரிவித்த நிலையில், அந்த மனுவை எடுத்துக்கொண்டு டெல்லி சென்று குடியரசுத் தலைவரிடம் அளித்தனர். அப்போதும், மனுவில் என்ன இருந்தது என்று எம்.ஜி.ஆரோ, கல்யாணசுந்தரமோ பொதுமக்களுக்குக் கூறவில்லை. தி.மு.க மீது ஆதாரமற்ற ஊழல் புகார்களைக் கூறி அவதூறு பரப்பவேண்டும், அதை மக்கள் மனதில் அழுந்தப் பதிவு செய்யவேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம்.
எம்.ஜி.ஆர் அளித்தப் புகார்
1972-ம் ஆண்டு, எம்.ஜி.ஆரும் கல்யாணசுந்தரமும் ஆளுநரிடமும் குடியரசுத் தலைவரிடமும் அளித்த புகார்ப் பட்டியல், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. அதற்கான விரிவான விளக்கத்தைப் பதிலாக எழுதிக் கொடுத்த பின்னரும் அந்த பதிலுக்கு எதிராக மேற்கண்ட இருவரும் புதிதாக மனு ஒன்றைத் தயாரித்து அனுப்பினர்.
அண்ணா திரையரங்க அவதூறு
முதலில் அனுப்பிய புகார் மனுவில் அண்ணா சாலையின் மையத்தில் சாந்தி திரையரங்கத்துக்குப் பின்புறமாக விலை மிகுந்த சொத்து ஒன்று கலைஞரின் மருமகன்கள் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகவும், அங்கே அண்ணா திரையரங்கம் என்ற பெயரில் திரைப்பட அரங்கம் உருவாக்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என உரிய ஆவண இணைப்புகளோடு பதில் தரப்பட்டிருந்தது. அந்தச் சொத்துகளுக்கு உரிமையாளர் யூனஸ் ஜக்கேரியா சேட் என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கான ஆவணங்களும் தரப்பட்டன. இதையடுத்து, அங்கு சொத்து வாங்கும் எண்ணம் இல்லை என்று கலைஞர் மறுக்கவில்லை என்று மழுப்பத் தொடங்கினர்.
வெளிநாட்டு டிராக்டர்
கலைஞர் வெளிநாடு சென்றபோது லண்டனில் நடைபெர்ற விழா ஒன்றில், அந்த விழாவை நடத்திய டிராக்டர் நிறுவனம் கலைஞருக்கு டிராக்டர் ஒன்றை வழங்கியதாகவும், அதை அவர் காட்டூரில் உள்ள தனது சொந்த வயலுக்கு பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
லண்டன் விழாவில் கலைஞருக்கு டிராக்டர் வழங்கப்பட்டது உண்மை. ஆனால், அந்த டிராக்டரை அந்த விழாவிலேயே தமிழ்நாடு வேளாண் கல்லூரிக்கு வழகுவதாகக் கூறி அவ்வாறே வழங்கப்பட்டுவிட்டது. இன்னொரு உண்மை என்னவென்றால், காட்டூரில் டிராக்டர் வைத்து உழும் அளவுக்கு கலைஞருக்கு நிலம் இல்லை என்பதுதான்.
திருவாரூர் வீடு
திருவாரூர் தெற்கு வீதியில் 94-ம் எண் இல்லம், பல லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கலைஞரால் கட்டப்பட்டிருப்பதாக எம்.ஜி.ஆர் புகார் கூறியிருந்தார். ஆனால், அந்த வீடு அதை வாங்கியபோது இருந்ததைவிட பாழ்பட்டுக் கிடந்ததை புகைப்பட ஆதாரங்களோடு எடுத்துக் காட்டி மறுப்புத் தெரிக்கப்பட்டது.
மேகலா பிக்சர்ஸ்
கலைஞர் மீது எம்.ஜி.ஆர் அளித்தப் புகார்களில் ஒன்று, மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தை முதலமைச்சரான பிறகும் நிர்வகித்து வருகிறார் என்பது. இது, அப்பட்டமான பொய் என்பது அவருக்கே தெரியும். மேகலா பிக்சர்ஸை முன்னின்று தொடங்கியதே எம்.ஜி.ஆர்தான். கலைஞர், பி.எஸ்.வீரப்பா, இயக்குநர் காசிலிங்கம், எம்.ஜி.சக்ரபாணி போன்றோர் பங்குதாரர்களாக இருந்து தொடங்கப்பட்ட நிறுவனம் அது. மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் இறுதியாகத் தயாரித்த படம் ‘எங்கள் தங்கம்’. இதன் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.
கலைஞர் முதலமைச்சராவதற்கு முன்பு அல்ல, அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பதிப்பகம் போன்று அவர் பங்கு வகித்த நிறுவனங்களில் இருந்து விலகிவிட்டார். ‘நாம்’ திரைப்படம் அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முதல் படமாகும். எம்.ஜி.ஆர் அதில் கதாநாயகன். வி.என்.ஜானகி கதாநாயகி. அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றதும் எம்.ஜி.ஆரும் அவரது சகோதரரும் அவரைச் சார்ந்தவர்களும் அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட்டனர், பின்னர் நீண்ட காலம் கலைஞர், பி.எஸ்.வீரப்பா, இயக்குநர் காசிலிங்கம் போன்றோர் பங்குதாரர்களாக இருந்து படத் தயாரிப்புத் தொழிலை நடத்தி வந்தனர். சிறிது காலத்துக்குக் கலைஞரும் காசிலிங்கமும் இணைந்து படம் தயாரித்து வந்தனர்.
எம்.ஜி.ஆர் விலகிய பின்னரும் அந்தப் பட நிறுவனம் அவரை வைத்துக் ‘காஞ்சித் தலைவன்’, ‘எங்கள் தங்கம்’ போன்ற படங்களைத் தயாரித்துள்ளது. அதேபோல், அன்றைய உச்ச நட்சத்திரங்களான சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோரை வைத்து ‘ரங்கோன் ராதா’, ‘குறவஞ்சி’, போன்ற படங்களை உருவாக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் காசிலிங்கமும் விலகிக்கொள்ள, நிறுவனத்தின் பங்குதாரராக முரசொலி மாறன் இணைந்தார். கலைஞரும் மாறனும் பங்குதாரர்களாக இருந்தபோதுதான் ‘பூம்புகார்’, ‘பூமாலை’, ‘மறக்க முடியுமா?’ போன்ற வெற்றிப் படங்களை மேகலா பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்டது. பின்னர் கலைஞர் அமைச்சராகும் முன்பு, 28.02.1967-ல் அந்த நிறுவனத்திலிருந்து விலகிக்கொண்டார்.
இந்த வரலாறு எல்லாவற்றையும் முழுவதுமாக அறிந்திருந்தும், மேகலா பிக்சர்ஸ் தயாரித்த கடைசிப் படமான எங்கள் தங்கத்தில் கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தும், உண்மைக்குப் புறமாக பொய்ப் புகார் கொடுத்திருந்தார்.
அஞ்சுகம் பிக்சர்ஸ்
அஞ்சுகம் பிக்சர்ஸ் தயாரித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் விநியோக உரிமைகள் ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் துணை நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தக் கம்பெனியிடம் அண்ணாசலையில் உள்ள ஜெமினி மேம்பாலம் கட்டும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
அஞ்சுகம் பிக்சர்ஸ் நிறுவனம் 1971-ல் தொடங்கப்பட்டது. ஆனால், ஜெமினி மேம்பாலம் கட்டுவதற்கு 1969-ம் ஆண்டே நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு 1970 ஜனவரியில் ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, நவம்பரிலேயே முடிவு செய்யப்பட்டுவிட்ட நிலையில், மேம்பாலம் கட்டியதற்கும் அஞ்சுகம் பிக்சர்சுக்கும் முடிச்சுப் போட்டுள்ளது எத்தனை பெரிய அற்பத்தனமான குற்றச்சாட்டு என்பதை அறியலாம்.
வீராணம் குற்றச்சாட்டு
ஒப்பந்தப் புள்ளிகள் கோராமலேயே வீராணம் ஒப்பந்தம் போடப்பட்டது என்பது இன்னொரு குற்றச்சாட்டு.
தலைவர் கலைஞர் அடிக்கடி கூறுவதைப்போல, இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். வீராணம் திட்டத்துக்குத் தலைமைப் பொறியாளரால் ஒப்பந்தப் புள்ளிகள் கேட்கப்பட்டு, அதில் 8 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, நிறுவனங்களின் பெயர்களையும் அவைக் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தப் புள்ளித் தொகையும் கலைஞர் அளித்த பதிலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுகள் வெத்துவேட்டு என்பதை மத்திய ஆட்சியாளர்கள் அறிந்த காரணத்தால்தான், அவற்றை கிடப்பில் போட்டுவிட்டனர். இந்நிலையில், அவசர நிலைக்கு கலைஞர் ஆதரவு அளிக்காத ஆத்திரத்தில், அவரைப் பழி வாங்கும் நோக்குடன் ஆட்சியைக் கலைத்து சர்காரியா கமிஷன் அமைத்தனர்.
கலைஞர் பிரதமருக்கு எழுதிய கடிதம்
என் மீது அவர்கள் எழுப்பியுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டின் முடிவிலும், அவர்கள் பாடியுள்ள ஒரே பல்லவி “விசாரணைக் குழு நியமிக்கப்பட்டால் இந்தக் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்க இயலும்” என்பதுதான். நான் தந்துள்ள பதிலுக்குப் பதிலாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் அவர்கள் அளித்துள்ள எதிர் உரைகள் அலட்சியப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட வேண்டியவை. எனினும், அவர்கள் குட்டையைக் குழப்ப முயன்ற இடங்களிலெல்லாம் நான் உரிய விளக்கங்களைத் தந்துள்ளேன். அதற்கு வலுவூட்டும் வகையில் அரசுத் துறையினர் அளித்த ஆதாரக் குறிப்புகளையும் தந்துள்ளேன்.
ஆனால், பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி அதனை உண்மை என நம்ப வைக்க முடியும் எனும் கோயபல்சின் கோட்பாடுகளை எம்.ஜி.ஆரும் கல்யாணசுந்தரமும் கடைப்பிடிக்கின்றனர்.
1969-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரின் வருமான வரிக் கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 1961-ம் ஆண்டு முதல் அவரது வருமானத்தை வருமான வரித் துறையினர் மறு ஆய்வு செய்து, ஏறத்தாழ 29 லட்ச ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டும் என அறிவித்துவிட்டனர். 30.12.1971-ம் ஆண்டுவரை அவர் 17 லட்சத்து 96 ஆயிரத்து 407 ரூபாய் வரி செலுத்தினார். எஞ்சிய தொகையை வசூலிக்க வருமான வரித் துறை அவர் மீது கிடுக்கிப்பிடி போட்டது. வருமான வரித்துறை நடவடிக்கைகளுக்கு தடை ஆணை பிறப்பிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 486/1972 எண் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த ரிட் மனுவை திடீரென 07.09.1972-ல் திரும்பப் பெற்றுக்கொண்டார். அண்மையில் அவர் வெளிநாடுகளுக்குச் சென்றபோது அந்நியச் செலவாணி விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டதாக இந்திய அரசு குற்றம்சாட்டியுள்ளதும் அது விசாரணையில் உள்ளது என்பதும் அனைவரும் அறிந்ததே”
கடிதத்தின் பிற்பகுதி
“ஜனநாயகத்தில் எள் அளவும் நம்பிக்கையற்றோர், நமது தலைசிறந்த ஜனநாயக நிறுவனங்களைக் கவிழ்த்து அழிக்க முற்படுவோர். இவர்கள் எத்தகைய குற்றச்சாட்டுகளையும் எவர் மீதும் சுமத்துகின்றனர். இவர்களை யாரும் ஏதும் செய்வதற்கில்லை. இதனால் நம் பொதுவாழ்வு ஏளனத்திற்குரிய இழிநிலைக்குத் தாழ்த்தப்படுகிறது. இதுவே அரசியல் சூதாட்டத்தில் அவலமுற்று அலைவோரின் ஆர்வமிக்க பொழுதுபோக்காக உள்ளது.
ஒரு மாநில அமைச்சரவை மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவற்றை மத்திய அரசுக்கு அனுப்பி விசாரணைக் குழு அமைக்குமாறு கோருவதால் தோன்றும் இக்கட்டான அரசியல் விளைவுகளை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசு அத்தகைய விசாரணைக் குழு அமைத்தால் மாநில அரசைக் கவிழ்க்க மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியாகவே அதனைப் பொதுமக்கள் கருதக்கூடும்.”
ஜனநாயக மரபுகள் நிலைபெற…
“ஜனநாயக மரபுகள் நிலைபெற வேண்டுமாயின், அரசியலில் இக்கட்டான இத்தகைய நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும். இதன் பொருட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அமைச்சரவைக்கு எதிராகச் சுமத்தப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கென்று பாரபட்சமற்ற நீதித்துறையைச் சேர்ந்த தனிப்பட்ட ஓர் அமைப்பு இருத்தல் வேண்டும்.
பொது நிர்வாகத்தில் அப்பழுக்கற்ற தன்மையைப் பேணிக் காப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில் ஒரு மாசில்லாத நிர்வாகத்தின் மீது ஆதாரம் ஏதுமின்றி வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் களங்கம் கற்பித்தலுக்கு இடமளித்தல் கூடாது.” என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு வருமான வரித் துறை மூலம் எம்.ஜி.ஆருக்கு நெருக்கடி கொடுத்து, மிரட்டிப் பணிய வைத்து தி.மு.க.வை உடைக்க நடத்திடும் நாடகம் என்பதை நானறிவேன் என்பதை சுட்டிக்காட்டும் கலைஞரின் கடிதம், ஜனநாயக நெறிமுறைகளைத் தகர்க்கும் இதுபோன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறுகிறது.
குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதையும் வழங்காமல், விசாரணைக் கமிஷன் அமைக்க வற்புறுத்துவதற்குக் காரணம், அதைப் பின்னின்று இயக்கியவர்கள்தான் என்பதையும், இது மாநில அரசை மத்திய அரசு கவிழ்க்க மேற்கொள்ளும் முயற்சியாகவே மக்கள் கருதுவர் என்பதையும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
மேலும், ஊழல் செய்வோர் தப்பக்கூடாது, பொது நிர்வாகத்தில் அப்பழுக்கற்ற தன்மை வேண்டும், அதே நேரத்தில் நேர்மையான நிர்வாகத்தின் மீது ஆதாரம் ஏதுமின்றி குற்றம் கூறுவோருக்கு இடமளிக்கக் கூடாது என்பதையெல்லாம் எடுத்துக் கூறியுள்ள கலைஞர், இவற்றை நெறிப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கென்று பாரபட்சமற்ற நீதித்துறையைச் சேர்ந்த தனி அமைப்பு இருத்தல் வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவசரநிலை அறிவிப்பு
இத்தகையை சூழ்நிலையில், அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக தனது பதவியைத் துறக்கும் நிலை, அன்றைய பிரதமருக்கு ஏற்பட்டது. பிரதமர் பதவி விலகினால் தங்களது பதவியும் பறிபோகும் என்ற அச்சத்தில், சில பதவி வெறியர்கள் அவருக்குத் தவறான ஆலோசனைகளை வழங்கினர். அதன் விளைவாக, இந்தியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அரசுக்கு எதிரான கருத்துகளுக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டது. இந்தியாவின் மதிப்புமிக்கத் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஏடுகளுக்கு தணிக்கை. அரசு இயந்திரங்களான வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி ஆகியவை அரசுக்கு ஊதுகுழலாகப் பயன்படுத்தப்பட்டன. அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்தவர்கள் மிசா (Maintenance of Internal Security Act) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அப்போது கலைஞர் ஆட்சி. தி.மு.க.வை அழிக்க எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மத்திய அரசு, கலைஞரின் உதவியை நாடியது. அவசர நிலையை ஆதரித்தால், மேலும் ஓராண்டு காலம் ஆட்சி நீட்டிப்புச் செய்யப்படும் என உறுதியளித்தது. ஆனால், பதவியைப் பற்றிக் கவலைப்படாத கலைஞர், ஒடுக்குமுறையை எதிர்ப்பதில் உறுதியாக நின்றார்.
அவசரநிலை என்பது மக்களாட்சிக்கு வைக்கப்படும் வேட்டு எனக்கூறிய தி.மு.க., அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. இதனால் ஆத்திரமுற்ற மத்திய அரசு, தி.மு.க தனது ஆட்சியை இழக்க நேரிடும் என அச்சுறுத்தியது.
பதவியைவிட நாட்டின் விடுதலையே பெரிது
பதவி எங்களுக்குப் பெரிதல்ல, நாட்டின் விடுதலையே முதன்மையானது என்று சூளுரைத்தார் கலைஞர். விளைவு, ஆட்சி கலைக்கப்பட்டது. இரவோடு இரவாக பல்லாயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய முரசொலி மாறன், தளபதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் ஒடுக்குமுறைக்கு கலைஞர் அடிபணியாததால், அவரை மிரட்டி அடக்கும் நோக்கோடு, எம்.ஜி.ஆரும் கல்யாணசுந்தரமும் அளித்தப் புகார் மனுவை தூசு தட்டி எடுத்து, அதற்காக உருவாக்கப்பட்டதுதான் சர்க்காரியா கமிஷன்.
செத்த பிணத்துக்கு உயிர்
1972-ம் ஆண்டு ஊளையிட்டு, பின்னர் கோமா நிலையில் அடங்கிப் போயிருந்த புகார் மனுவுக்கு, நான்காண்டுகள் கழித்து 1976-ம் ஆண்டு உயிரூட்டப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்களைக் கொண்டு, 1976-ம் ஆண்டு ஃபிப்ரவரி 3-ம் நாள் விசாரணைக் கமிஷன் ஒன்றை மத்திய அரசு நியமித்தது. அப்போது, நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சராக இருந்த ஓம் மேத்தா எழுந்து, “1972 நவம்பர் மாதம் எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரமும் தி.மு.க அமைச்சரவை மீதான புகார்கள் அடங்கியப் பட்டியலை மத்திய அரசிடம் வழங்கினார்கள். அந்தப் புகார்கள் குறித்து நீதிபதி சர்க்காரியா விசாரணை நடத்துவார் என அறிவித்தார்.
அந்த ஓம் மேதா யார் தெரியுமா?
அவசர நிலையை ஆதரிக்குமாறும், அப்படி ஆதரித்தால் தி.மு.க கழக ஆட்சிக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்புத் தரப்படும் எனவும் ஆசை காட்டிட, அன்றைய மத்திய அரசால் கலைஞரிடம் அனுப்பப்பட்ட தூதர்தான் அவர்.
விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட அடுத்த நொடி, இன்னொரு கூத்தும் அரங்கேறியது. கலைஞரும் அவரது உறவினர்களும் 30 கோடி ரூபாய் சொத்து சேர்த்துவிட்டதாக ஒரு துண்டு நோட்டீஸ் தயாரிக்கப்பட்டு, அவை காவல்துறை வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு ஊர் ஊராக விநியோகிக்கப்பட்டது.
இதற்கும் கலைஞர் உடனடியாகப் பதிலளித்தார். “என்னுடைய சொத்துக்களையும் உறவினர் சொத்துக்களையும், அதற்கான கடன்களையும் ஏற்றுக்கொண்டு ரூபாய் 30 கோடி அல்ல, 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளத் தயாரா?” எனக் கேட்டார். ஆனால், யாருமே அதற்கு முன்வரவில்லை.
விசாரணைக் கமிஷன் அறிவிப்பைத் தொடர்ந்து, கலைஞருக்கும் கழகத்துக்கும் எதிராக அகில இந்திய வானொலி மற்றும் அரசின் செய்தித்துறை, தொலைக்காட்சி நிறுவனங்கள் முடுக்கிவிடப்பட்டன. கண் வழி, செவி வழி என எங்கும் எதிலும் தி.மு.க எதிர்ப்பு காட்டப்பட்டது. இதனிடையே, தன் மீதான புகார்கள் எத்தனை அற்பத்தனமானவை, ஆதாரமற்றவை என்பதை விளக்கி, அதனைப் புத்தகமாகவே வெளியிட்டு சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பரவவிட்டிருந்தார் கலைஞர்.
ஏவல் துறைகள்
தலைவர் கலைஞரின் கோபாலபுரம் இல்லம், அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு முன்பே வாங்கப்பட்டிருந்தது.எம்.ஜி.ஆருக்கு இது நன்கு தெரியும். ஆனாலும், புகார் மனுவில் அது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற அளவில், அத்தனை புகார்களும் பொய்யாகவே இருந்தன. இருந்தும், அது சர்க்காரியா கமிஷன் விசாரணை எல்லைக்குள் கொண்டுவரப்பட்டது. அபத்தமான அப்பட்டமான பொய்ப் புகார்கள் எனத் தெரிந்திருந்தும், கலைஞர் மீதும் கழகத்தின் மீதும் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற கபட எண்ணத்தில் அவற்றை விசாரணைக்கு உட்படுத்தினர்.
பொய்யான புகார்கள் மீது அவசர ஆத்திரத்தில், விசாரணை என்று கூறி கமிஷன் அமைக்கப்பட்டது. ஆனால், புகார்களை நிரூபித்தாக வேண்டுமே என யோசித்த அரசு, தனது கட்டுப்பாட்டில் இருந்த வருமான வரித் துறை, சி.பி.ஐ போன்றவற்றை ஏழி குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கொண்டுவருமாறு பணித்தது.
பேச்சுரிமை, எழுத்துரிமை மறுப்பு
அந்தக் காலகட்டத்தில் கலைஞரும் அவரது குடும்பத்தினரும் சந்தித்த உச்சகட்டக் கொடுமைகள்போல் இந்திய அளவில் எந்தத் தலைவரும் சந்தித்திருக்க இயலாது.
கலைஞரின் சுற்றத்தார் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. கலைஞருக்கு எதிராக வானொலி, தொலைக்காட்சி மூலம் பரப்புரை செய்யப்பட்டது. மறுப்போ, விளக்கமோ கூற இயலாத நிலையில், எழுத்து மற்று பேச்சுரிமைகள் பறிக்கப்பட்டன. நீதிமன்றத்தில் முறையிட்டு நீதி பெற இயலாத நெருக்கடிநிலை.
அரசியல் பழிவாங்கும் நோக்கம்
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அன்றைய அகில இந்தியத் தலைவர்கள் கருத்துகளை வெளியிட்டனர். சாட்சியங்களை உருவாக்க சி.பி.ஐ எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது, பொய் சாட்சிக் கூறுமாறு யாரெல்லாம் மிரட்டப்பட்டனர் என்பதைப் பார்த்தால், அது திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த திரைப்படத்தைவிட பயங்கரமாக இருக்கும்.
ஏவப்பட்ட வருமான வரித் துறை
சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்ட நேரத்தில், தமிழ்நாட்டில் தி.மு.க அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. மத்திய அரசுத் துறைகள் மட்டுமல்லாது மாநில அரசின் காவல் துறை, புலனாய்வுத் துறை போன்ற துறைகளும் பல்வேறு பக்கங்களிலிருந்து தலைவர் கலைஞரை தாக்கத் தொடங்கின.
வருமான வரித் துறையினர் நடத்திய சோதனை குறித்து தலைவர் கலைஞர், “ஒருநாள் கோபாலபுரம் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது, வருமான வரித் துறையினர் கூட்டமாக வந்தனர். ‘முதலமைச்சரானபோது வாங்கிய வீடுதானே இது? இதனை மதிப்பீடு செய்யவேண்டும்’ என்றனர். ‘1956-ல் வாங்கிய வீடய்யா இது. என் மீது புகார் கொடுத்த எம்.ஜி.ஆருக்கு இதுகூடவா தெரியாது?’ என்று கேலியாகக் கேட்டேன். ‘வீட்டை அளந்து மதிப்பீடு செய்யவேண்டும்’ என்றனர். ‘தாராளமாகச் செய்துகொள்ளுங்கள்’ எனக் கூறிவிட்டு, உள்ளே இருந்த என் மனைவி தயாளுவை கூப்பிட்டு, ‘இவர்கள் வீட்டை அளந்து மதிப்பீடு செய்ய வேண்டுமாம். நீயும் பிள்ளைகளும் உடனிருந்து பார்த்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறிவிட்டு முரசொலி அலுவலகம் சென்றுவிட்டேன்.” என தமது ‘நெஞ்சுக்கு நீதி’ வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதிர்ந்துபோன வரித் துறையினர்
வீடு, வெளித் தோற்றத்தில் பழையதாகக் காணப்பட்டாலும் கலைஞர் முதலமைச்சரான பிறகு வீட்டின் உல்ளே பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டு பளபளப்பு கூட்டப்பட்டிருக்கும், விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்த அதிகாரிகள், அது எளிமையான வீடாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
1956-ல் வாங்கப்பட்ட வீடு, சில சிறிய மாற்றங்களோடு அன்றிருந்த நிலையில்தான் இன்றும் இருப்பதைக் கழகத் தோழர்கள் மட்டுமின்றி அனைவரும் அறிவர்.
சுற்றி வந்த சி.ஐ.டி போலீஸ்
வீட்டை அளந்து பார்த்து, கணக்கில் காட்டப்பட்டிருந்ததைவிடக் கூட்டிக் காட்ட எவ்வளவோ முயன்றும் எதையும் அவர்களால் செய்ய இயலாது போயினர். தலைவர் வீடு மட்டுமல்லாமல், கோபலபுரத்தில் இருந்த முரசொலி மாறனும் முரசொலி செல்வமும் தங்கியிருந்த வீடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. காலையில் வருமான வரித் துறையினர் என்றால், மாலையில் மாநகராட்சியிலிருந்து சிலர் வருவர். அனுமதிக்கப்பட்ட வரைபடத்துக்கு மேலே கட்டப்பட்டுள்ளதா என, வீட்டு வரைபடத்தை வைத்துக்கொண்டு அளந்து பார்ப்பர். ஆலிவர் ரோடு இல்லம், முரசொலி அலுவலகமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால், எங்கும் எதுவும் கிடைக்கவில்லை.
மத்திய அரசின் வருமான வரிச் சோதனை மிரட்டல் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் மாநில அரசின் தாக்குதல். தலைவர் கலைஞர் வீட்டைச் சுற்றி சி.ஐ.டி காவலர்கள். பொதுவாக, சி.ஐ.டி காவல் துறையினர் ஒளிவு மறைவாக இயங்குவார்கள். ஆனால், சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டிருந்த நேரத்தில் கலைஞர் வீட்டைச் சுற்றி வெளிப்படையாக சுற்றித் திரிந்தனர், வீட்டுக்கு அருகே காரில் அமர்ந்துகொண்டு வருவோர் போவோரைக் கண்காணிக்கத் தொடங்கினர். யாராவது உறவினர்கள் வந்தால்கூட அவர்களை வழிமறித்து, கேள்விக் கனைகளால் துளைத்தெடுத்து எரிச்சல்படுத்தினர்.
வீட்டுக்கு வருவோரின் வாகன எண்கள் குறிப்பெடுக்கப்பட்டு, அதன் உரிமையாளர் யார் எனக் கண்டறியப்பட்டு, அவர்களை அழைத்தும் சில நேரங்களில் அவர்களது வீட்டுக்குச் சென்றும் விசாரித்தனர்.
பொய் சாட்சிகளைத் திரட்ட மிரட்டல்கள்
எந்தவித ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், கடைசியாக பொய் சாட்சிகளைத் திரட்டத் தாயாரானார்கள். அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிகாரிகள் மிரட்டப்பட்டனர். குறிப்பாக, முதலமைச்சர் கலைஞரிடம் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் சில அரசு அதிகாரிகள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு, சர்க்காரியா கமிஷனில் பொய் சாட்சி கூறுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
மிரட்டல் படலம்
இன்னொரு பக்கம் கலைஞரின் அலுவலக ஊழியர்கள், உறவினர்கள் மிரட்டப்பட்டனர். மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய கணக்காளர்கள், தயாரிப்பு நிர்வாகிகளின் இல்லங்களில் சோதனை நடைபெற்றது. நீண்ட நாட்களாக முரசொலி மற்றும் தலைவர் கலைஞர் குடும்பக் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் அழகுமாணிக்கத்தை சி.பி.ஐ கைது செய்து, விசாரணை என்ற பெயரில் மிரட்டி தாங்கள் கற்ற எல்லா வித்தைகளையும் கையாண்டனர்.
இந்நிலையில், விசாரணைக் கமிஷன் தலைவரான நீதிபதி சர்க்காரியாவிடம் வழக்கறிஞர் சாந்திபூஷன் மனு ஒன்றைக் கொடுத்தார். கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், அன்பில் தர்மலிங்கம், மாதவன் மற்றுமுள்ள அமைச்சர்கள், கழகத் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுப் புகார்களைக் கொடுத்துள்ள எம்.ஜி.ஆரையும், கமிஷனில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டவர்களையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என மனுவில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், நீதிபதி சர்க்காரியா இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காவிட்டால் விசாரணையில் பங்கேற்பதே பயனற்றது எனக்கூறி, விசாரணையைப் புறக்கணித்து சாந்திபூஷன் வெளியேறிவிட்டார்.
எம்.ஜி.ஆரை குறுக்கு விசாரணை செய்யவேண்டும் என்று சாந்திபூஷன் கேட்டபோது, சர்காரியா கமிஷனிடம் எம்.ஜி.ஆர் எழுத்து மூலம் ஒரு வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
அதில், “புகார்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. சேலம் கண்ணன் என்ற வழக்கறிஞர் கூறியதைத்தான் நான் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தேன்” என்று எழுதப்பட்டிருந்தது.
எந்தப் புகார் மனுவைப் பெரும் விளம்பர வெளிச்சத்தோடு ஏடுகள் எல்லாம் கொட்டை எழுத்தில் தி.மு.க மீது எம்.ஜி.ஆர் ஊழல் புகார் எனத் தலைப்புச் செய்திகள் வெளியிட்டனவோ, அந்தப் புகார் மனு குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என்று அந்தர் பல்டி அடித்துவிட்டார் எம்.ஜி.ஆர். யாரோ எழுதிய கற்பனை நாடகத்தில், வேடம் கட்டி ஆடியது அம்பலமாகிவிட்டது.
திரும்பப் பெறப்பட்ட வழக்குகள் – கலைஞருக்கு மட்டும் விதிவிலக்கு
நெருக்கடி நிலை காலத்தின்போது போடப்பட்ட வழக்குகளை எல்லாம் திரும்பப் பெறுவது என மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு முடிவெடுத்தது. இந்திரா அரசு, ஜார்ஜ் ஃபெர்னாடஸ் மீது தொடுத்திருந்த பரோடா வெடிகுண்டு சதி வழக்கு திரும்பப் பெறப்பட்டது. மத்திய அமைச்சராகிவிட்ட பிரகாஷ் சிங் பாதல் மீதான கிரிமினல் வழக்குத் திரும்பப் பெறப்பட்டது. சுப்பிரமணியம் சுவாமி மீது அந்நியச் செலாவணி குற்றத் தடுப்பு இயக்குநரகம் தொடுத்திருந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
ஆனால், பொய்ப் புகார் மீது அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் என்று மொரார்ஜி, சந்திரசேகர், சாந்திபூஷன் போன்றோரால் விவரிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் விசாரணை மட்டும் தொடர்ந்து நடைபெற்றது.
சர்க்காரியா கமிஷன் தீர்ப்பு
ஒருவழியாக விசாரணை முடிந்து சர்க்காரியா கமிஷன் தனது முடிவுகளை அறிவித்தது.
“மேகலா பிக்சர்சில் ஆதாயம் பெறும் பங்குதாரராக முதலமைச்சர் கலைஞர் இருந்தார் என்ற குற்றச்சாட்டு ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.
இரண்டாவது குற்றச்சாட்டான அஞ்சுகம் பிக்சர்ஸ் குறித்துக் கூறப்பட்ட புகார்கள் எதுவும் கருணாநிதிக்கு எதிராக மெய்ப்பிக்கப்படவில்லை.
கோபாலபுரம் வீட்டைக் கருணாநிதி புதுப்பித்தார் என்ற குற்றச்சாட்டும் ஐயத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை.
முரசொலி விற்பனைக்கூடல், திருவாரூர் வீடு போன்றவற்றின் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை” என்று கூறியது.
வீராணம் ஏரியில் இருந்து நீர் கொண்டு வருவதற்கான திட்டத்தில்கூட, வீராணம் திட்டத்தைச் சத்தியநாராயணா பிரதர்சுக்கு ஒப்படைக்க எடுத்த முடிவு நிர்வாகத் தவறு என்று சர்க்காரியா குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, கலைஞர் லஞ்சம் வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
சமயநல்லூர் அனல் மின் நிலையம் விற்பனை குறித்த ஒப்பந்தங்கள் பற்றி எழுப்பிய குற்றச்சாட்டையும் நீதிபதி சர்க்காரியா ஏற்கவில்லை.
கொடைக்கானல் பழனி சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் பற்றிய குற்றச்சாட்டிலும் குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்று எழுதியிருக்கிறார்.
குற்றச்சாட்டு 21-ல் அறக்கட்டளை பற்றியெல்லாம் கூறப்பட்டிருந்தது. மேலும், சிறுசிறு குற்றச்சாட்டுகள் பற்றி நீதிபதி சர்க்காரியா குறிப்பிடுகையில், அரசின் நலன்களைக் காப்பதற்குப் போதுமான நடவடிக்கை எடுக்காமலேயே நிறுவனத்துக்குக் கடன்கள் வழங்கியதில் அல்லது ஏனைய வகையில் நிதி உதவிகள் அளித்ததில் தணிக்கை நோக்கில் பார்த்தால் நிதி முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்பது மட்டுமே இந்தக் குற்றச்சாட்டு குறித்து நடைபெற்ற விசாரணையில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த முறைகேடுகள் யாவும் தி.மு.க அரசின் முதலமைச்சரால் அல்லது ஏனைய அமைச்சர்களால் அல்லது அரசுத் துறை அதிகாரிகளால் நேர்மையற்ற வழியிலோ, தனிப்பட்ட பயன் கருதித் தூண்டுதலால் நடைபெற்றதாகவோ மெய்ப்பிக்கப்படவில்லை என்றும் சர்க்காரியா எழுதியுள்ளார்.
விஞ்ஞானபூர்வமான ஊழல் எனும் கட்டுக்கதை
இந்து நாளிதழ் ஆசிரியர் திரு.என்.ராம் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், “சர்க்காரியா கமிஷன் விசாரணை தோல்வியில் முடிவுற்றது. சர்க்காரியா தம்முடைய விசாரணை அறிக்கையில் நேரடியாக எந்த இடத்திலும் விஞ்ஞானபூர்வமான ஊழல் என்று எழுத்துப்பூர்வமாகக் குறிப்பிடவில்லை. “Sarkaria had reportedly labeled” என்றுதான் உட்பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பொய்யை, மீண்டும் மீண்டும் சொல்லி கழகத்தின் எதிரிகள் அதை உண்மையாக்க முயற்சித்து வருகிறார்கள். முடிந்தால், சர்காரியா அறிக்கையில் எந்த இடத்தில், எந்தப் பக்கத்தில் ‘விஞ்ஞானபூர்வமான ஊழல்’ என்று குறிப்பிட்டிருகிறார்கள் என்பதை அவர்கள் எடுத்துக்காட்ட வேண்டும்.