முதலமைச்சர் கலைஞரின் தீர்மானம்
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் இராசராசன் சிலையை, அந்தக் கோயிலின் உள்ளே வைக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை.
தலைமைச் செயலகம் செயல்படும் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் முளைத்து உள்ள புல் பூண்டுகளைப் அகற்றிட கூட அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்ற நிலையில் மத்திய மாநில அரசுகளின் அதிகாரங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவை மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் பல அண்மையில் மத்திய அரசினால் ஒவ்வொன்றாகத் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன.
ஜி.எஸ்.டி.வரி விதிப்புக் கொள்கைமூலம் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருந்தது. “நீட்” என்னும் நுழைவுத் தேர்வைப் புகுத்தி அந்த அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது. அந்த ஆண்டு முதல் சித்தா ஆயுர் வேதிக் முதலான படிப்புகளுக்கும் “நீட்” தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு “நீட்” தேர்வு எழுதிய 5000க்கு மேற்பட்ட மாணவர்களுக்குப் பல்வேறு மாநிலங்களில் தேர்வுகளை மையங்களை ஒதுக்கி அவர்களை மிகப்பெரிய கொடுமைக்கு ஆளாக்கியுள்ளது. அதனால் சிலர் உயிர் இழக்கவும் நேர்ந்துள்ளது. தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன் மாணவிகளின் ஆடை, அணிகலன்கள் களையப்பட்ட அவலமும் நிகழ்ந்துள்ளது.
எம்.டி., எம்.எஸ். முதலான மருத்துவ உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொண்டது. இந்தி, சமஸ்கிருத மொழிகள் பல்வேறு வகையிலும் திணிக்கப்படுகின்றன. இத்தகைய மத்திய அரசின் செயல்களால் மாணவர் உலகம் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம், கதிராமங்கலம் மீத்தேன் எரிவாயு திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைத் திட்ட விரிவாக்கம், நியூட்ரினோ திட்டம் போன்ற திட்டங்கள் தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி, அவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
சேலம் இரும்பாலையைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சிகளும் எதேச்சாதிகாரப் போக்குடன் மேற்கொள்ளப்படுகிறது.
இப்படித் தமிழகத்திற்கு எதிரான பல செயல்களை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.
ஆந்திரா மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு-ஆந்திரா வரியாக 1 ரூபாய் மத்திய அரசுக்குத் தந்தால் மத்திய அரசு ஆந்திராவுக்கு 45 பைசா மட்டுமே தருகிறது. உத்திரபிரதேச மாநிலம் மத்திய அரசுக்கு 1 ரூபாய் வரியாகத் தந்தால் மத்திய அரசு உத்திரபிரதேசத்துக்கு 1 ரபாய் 85 காசு தருகிறது. என்கிறார்.
மேற்கு வங்க முதலமைச்சரும் கர்நாடகா, தெலுங்கானா மாநில முதலமைச்சர்களும் இவ்வாறு மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன எனக் குரல் கொடுக்கின்றனர். இவையெல்லாம் மத்தியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களால்தானே!
அண்மையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தலைவர் கலைஞர் அவர்களையும், கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் வந்து சந்தித்த போது, மு.க.ஸ்டாலின் அவர்கள் மாநில சுயாட்சிப் பற்றி அவரிடம் பேசியுள்ளார். “மாநில சுயாட்சி மாநாடு” நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநில சுயாட்சி ஏன் ? அதன் குறிக்கோள் தத்துவம் என்ன என்பவை குறித்து அனைவரும் அறிந்து கொள்வது அவசியமாகும்.