காவிரி உரிமையில் கலைஞர்
“வான் பொய்த்தாலும் தான் பொய்யா
மலைத்தனைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்”
என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘பட்டினப் பாலை’ எனும் பத்துப்பாட்டு இலக்கியத்தில் போற்றப்பட்டுள்ளது காவிரி.
காவிரி ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில், குடகு மலையில் தலைக்காவிரி என்னும் இடத்தில் தோன்றி, அங்கிருந்து கர்நாடகம், தமிழ்நாடு வழியாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.
பயன்பெறும் நிலங்கள்
தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதியிலும் மொத்தம் 13 லட்சத்து 8 ஆயிரத்து 905 ஏக்கர் நிலங்கள் காவிரிப் பாசனத்தின் மூலம் பயன் பெறுகின்றன.
காவிரிப் பாசன நிலப்பரப்பு 4 லட்சத்து 93 ஆயிரத்து 626 ஏக்கர். வெண்ணாறு பாசன நிலப்பரப்பரப்பு 4 லட்சத்து 65 ஆயிரத்து 98 ஏக்கர். கல்லணைக் கால்வாய்ப் பாசன நிலப்பரப்பு 2 லட்சத்து 27 ஆயிரத்து 472 ஏக்கர். கொள்ளிடம் – கீழணைக் கால்வாய்ப் பாசன நிலப்பரப்பு 1 லட்சத்து 22 ஆயிரத்து 709 ஏக்கர். ஆக மொத்தம் 13 லட்சத்து 8 ஆயிரத்து 905 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, கரிகாலன் கல்லணை கட்டியதும் காவிரியின் கரையைப் பலப்படுத்தியதும், வேறுபல வரலாற்றுக் குறிப்புகளும் தமிழ்நாட்டுக்குக் காவிரியின் மேல் இருந்த உரிமைக்குச் (Prescription right) சான்றுகளாகத் திகழ்கின்றன.
கர்நாடகம் தொடங்கிய பிரச்சனை
1924-ம் ஆண்டுக்குப் பிறகு, 50 ஆண்டு காலமும் பெரும்பகுதி பிரச்சனைகள் எதுவுமின்றி இருந்த நிலைமைக்கு மாறாக, அந்த ஒப்பந்தம் 1974-ம் ஆண்டோடு முடிந்துவிட்டதாக வாதிடத் தொடங்கியது கர்நாடக அரசு. முன்னதாக, 1924 ஒப்பந்தத்தை மீறும் வகையில், காமராசர் ஆட்சிக் காலத்திலேயே ஹேமாவதி, ஹேரங்கி முதலிய அணைகளைக் கட்டத் தொடங்கினர்.
1947-ல் இந்தியா விடுதலை அடைந்த பிறகு, 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அதன்படி அமைந்துள்ள கர்நாடக அரசுக்கும் தமிழக அரசுக்குக்கும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் செல்லாது, அதை ஏற்க முடியாது என 1968-ம் ஆண்டு கர்நாடக அரசு அறிவித்தது.
இது, பிரச்சனை தீர்வு காணக்கூடிய ஒன்றாக இருக்காது என தமிழக அரசு கண்டிப்புடன் தெரிவித்தது. 1967-ல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் அமைந்த தி.மு.க அரசு, தனது எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், இரு மாநிலப் பிரச்சனை என்பதால் நடுவன் அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தியது.
இந்திரா காலத்தில் பேச்சுவார்த்தை
அண்ணா அவர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தலைமையிலான நடுவண் அரசு ஏற்பாட்டின்படி 19.08.1968 மற்றும் 20.08.1968 ஆகிய நாட்களில் காவிரி தொடர்புடைய மாநில அரசுப் பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையை, மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலை வகித்து நடத்தினார். கர்நாடக முதலமைச்சர் வீரேந்திர பாட்டீல் அவர்கள், பொதுப்பணித் துறைக்கும் அமைச்சர் என்ற முறையில் கலந்துகொண்டார். தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், அப்போதைய சட்ட அமைச்சர் மாதவனுடன் சென்று பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். 1892 மற்றும் 1924-ம் ஆண்டு ஒப்பந்தங்கள் மீறப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் – கலைஞர் அவர்களின் வாதமாக எடுத்து வைக்கப்பட்டது. ஆயினும், முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
அண்ணா மறைவுக்குப் பின்
1969-ம் ஆண்டு, அண்ணா அவர்கள் மறைவுக்குப் பிறகு, தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். 1970 ஃபிப்ரவரி 9-ம் நாள், கே.எல்.ராவ் அவர்கள் முன்னிலையில் டெல்லியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிலும், மகிழ்ச்சியடையத்தக்க முடிவு எட்டப்படவில்லை. காவிரியை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்களால், அந்தப் பிரச்சனை அப்போது முதல் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையாக ஒலிக்கத் தொடங்கியது. தேசிய உணர்வு, ஒருமைப்பாடு, ஒரே நாடு என்ற அடிப்படையில் மட்டுமல்லாமல், ‘பழைய ஆயக்கட்டுகளின் உரிமை’ என்ற சட்ட விதிமுறைகளின்படியும் காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தின் குரல் அழுத்தம் திருத்தமாக, நியாயத்தின் அடிப்படையில் எழுந்ததாகும்.
கலைஞர் எழுப்பிய குரல்
காவிரிப் பிரச்சனையில் தீர்வு கண்டிட முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தியதால், 1970 ஏப்ரல் 17, மே 16, அக்டோபர் 12 மற்றும் அக்டோபர் 27 ஆகிய நாட்களில் மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்தப் பேச்சுவார்த்தைகளும் பலனளிக்கவில்லை. ஆதலால், இனிப் பேச்சுவார்த்தைகளால் பயனில்லை என்றும் நடுவர் மன்றம் அமைப்பது ஒன்றே தீர்வு என்றும் முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார்.
நடுவர் மன்றம் அமைக்கத் தீர்மானம்
1971-ம் ஆண்டு ஜூலை 8-ம் நாள், காவிரிப் பிரச்சனைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய கலைஞர் அரசு, அதை மத்திய அரசுக்கு அளித்தது.
“தமிழ்நாடு – மைசூர் அரசுகளுக்கிடையே 1892 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்த விதிகள் அனைத்தையும் மீறி, மைசூரில் ஹேமாவதி, ஹேரங்கி, சொர்ணவதி ஆகிய அணைத் திட்டங்களையும், வேறும் சில அணைத் திட்டங்களையும், அவற்றுக்கான திட்ட விவரங்களைப் பற்றி தமிழ்நாடு அரசுக்கு முன்னதாக அறிவித்து, தமிழ்நாடு அரசின் முன் ஒப்புதல் பெறாமலும், இந்திய அரசின் முன் அனுமதியை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளாமலும், இதனால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேரிடுவதைப் பற்றிப் பொருட்படுத்தாமலும் மைசூர் அரசு தன்போக்கில் நிறைவேற்றி வருவது குறித்து, இப்பேரவை தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
காவிரி ஆற்றின் கீழ்ப் பகுதிகளில் உள்ள உழவர் பெருமக்களின் பாசன உரிமைகளுக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தைக் கருதி, 1956-ம் ஆண்டு மாநிலங்களுக்கிடையிலான நீர்த் தகராறுகள் சட்டத்தின் கீழ் முறையாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் ஒன்றுக்குக் காவிரி நீர்த் தகராறைத் தீர்ப்புக்கு விடுமாறு தமிழ்நாடு அரசு 1970 ஃபிப்ரவரித் திங்களிலேயே இந்திய அரசைக் கேட்டுக் கொண்டிருந்தும்கூட, தமிழ்நாடுக்குத் தொண்டுதொட்டு ஏற்பட்டு வந்துள்ள பரம்பரைப் பாசன உரிமைகள் பாதிக்கப்படும் வகையில், இந்திய அரசு தமிழ்நாட்டின் வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாத இப்பிரச்சனை குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அளவு கடந்து கால தாமதம் செய்து வருவதைக் கண்டு, இம்மன்றம் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய அரசு மேலும் காலம் தாழ்த்தினால், மைசூர் அரசு தனது திட்டங்களை விரைவுபடுத்தி அவற்றைக் கட்டி முடிக்கும் விரும்பத் தகாத விபரீத நிலை உருவாவதற்கே வழிகோலுமென்றும், இதனால் பன்னெடுங்காலமாகத் தமிழ்நாடு அனுபவித்து வரும் பாசனை உரிமைகள் பறிபோய்விடும் என்றும் இப்பேரவை பெரிதும் அஞ்சுகிறது.
வேதனைமிக்க இத்தகைய சூழ்நிலையில், இந்த அரசு 1960-ம் ஆண்டு மாநிலங்களுக்கிடையேயான நீர்த் தகராறுகள் சட்டத்தின் கீழ் நடுவர் மன்றம் ஒன்றை அமைத்து, அனைவரது நலன்களையும்கருதித் தமிழக அரசு ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளபடி, காவிரி நீர்த் தகராறை அம்மன்றத்தின் தீர்ப்புக்கு விட்டு நியாயம் வழங்குமாறும், நடுவர் மன்றம் இத்தகராறு குறித்து ஆராய்ந்து முடிவு செய்து தனது தீர்ப்பை அளிக்கும்வரையில், மைசூர் அரசு தன்போக்கில் மேற்கொண்டுள்ள திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றக் கூடாதென அதற்குக் கட்டளையிடுமாறும், இந்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.”
இதுதான், முதல்முதல் நடுவர் மன்றம் தேவை எனக் கோரிய தமிழக அரசின் தீர்மானம் ஆகும். ஆனால், இக்கோரிக்கை மீது நடுவண் அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தியதால், உச்சநீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்றம் கோரி வழக்குத் தொடுப்பது எனத் தமிழக அரசு முடிவு செய்தது.
அனைத்துக் கட்சி முடிவு
அரசு சார்பில் எடுக்கப்படும் முதன்மைப் பிரச்னைகள் மீதான முடிவுகள் அனைத்தையும் தனிப்பட்ட முறையில் எடுக்காமல் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்து முடிவுகள் மேற்கொள்வதையே வழக்கமாகக் கொள்பவர் தலைவர் கலைஞர்.
காவிரிப் பிரச்சனையிலும் அவ்வாறே பலமுறை அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கூட்டிப் பேசி முடிவுகளை மேற்கொண்டுள்ளார். இது குறித்து தலைவர் கலைஞர் அவர்கள்,
“1968-ம் ஆண்டு மைசூர் முதலமைச்சர் திரு.வீரேந்திர பட்டீல் அவர்கள் ஹேமாவதி அணைக்கு அடிக்கல் நாட்டுவிழா என்றைக்கு நாட்டினாரோ, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசாங்கம் அதை எதிர்த்து வந்திருக்கிறது. அப்படி எதிர்த்து வந்த நேரத்திலெல்லாம் தமிழ்நாடு அரசு கட்சி சார்பற்ற முறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி வைத்து, நிலைமைகளை விளக்கி, அவர்களுடைய அரிய கருத்துகளையெல்லாம் பெற்று, ஒவ்வொரு முறையும் மைசூர் முதலமைச்சருடனோ, கேரள முதலமைச்சரருடனோ அல்லது கே.எல்.ராவ் அவர்களுடன் பேசுகிற நேரத்திலோ, அப்போதெலொலாம் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டி முடிவுகள் எடுக்கப்பட்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், இந்த அரசுக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் அன்பான ஒத்துழைப்பைத் தமிழ்நாட்டு மக்களின் நலனை உத்தேசித்துத் தந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான பாராட்டுதலை இந்த அரசின் சார்பாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மைசூர் அரசு ஒப்புக்கொண்ட தமிழக உரிமை
முதலமைச்சர் கலைஞர் அவர்கள், 08.07.1971 அன்று சட்டப் பேரவையில் உரையாற்றும்போது, காவிரி மீது தமிழகத்துக்கான உரிமையைக் கர்நாடக அரசே ஒப்புக்கொண்டு கூறியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
“1924-ம் ஆண்டு, மைசூர் அரசு தயாரித்த ஹேமாவதி பற்றிய அறிக்கையில், நமக்குச் சாதகமான பல செய்திகள் இருக்கின்றன.
அந்த அறிக்கையில், ‘Eventhough such an amount of water is available, it is not possible to utilize the entire as the Hemavathi river is a scheduled river governed by the Cauveru Agreement of 1924 between Mysore and Madras’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மாத்திரமல்ல! இன்னும் ஒரு முக்கியமான விஷயம்.
‘The Project does not affect the Utilization or inter-State interests. The Project is designed Keeping in view the 1924 agreement of Madras and Mysore Governments. The Project comes under the purview of the 1924 agreement. -என்று இருக்கிறது.
ஹேமாவதி அணையைப்பற்றி 1924-ம் ஆண்டு தயாரித்த ‘ஹேமாவதி ரிசர்வாயர் பிராஜக்ட்’ என்ற இந்தப் புத்தகம் மைசூர் அரசால் அச்சடிக்கப்பட்ட புத்தகம். இதிலே 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படிதான் ஹேமாவதி அணை கட்டப்படும். கட்டப்படவேண்டும். தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டிய லிமிடேஷன் ப்ளோ ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன்ஸ் இவ்வளவுக்குப் பாதிக்காமல் அணை கட்டப்பப்ட வேண்டும், என்கிற உறுதி அளிக்கப்பட்டிருக்கிற புத்தகம் ஆகும். இது மைசூர் அரசிடமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகும்.
அடுத்து 1967-ம் ஆண்டு இன்னொரு சம்பவம் நடைபெற்றது. நம்முடைய தமிழ்நாட்டுடைய நீர்ப்பாசனத்துறை பொறியாளரும், மைசூர் நீர்ப்பாசனப் பொறியாளரும், மத்திய அரசின் நீர்ப்பாசனப் பொறியாளர் தலைமையில் கூடி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சி.டபிள்யூ.பி.சி. நீர்ப்பாசனத் துறை பொறியாளர் டி.பி. ஆனந்த் கையெழுத்திட்டிருக்கிறார். மைசூர் அரசின் சார்பாக மேக்டோம் கையெழுத்திட்டிருக்கிறார். தமிழகத்தின் சார்பாக ஜே.ஈ.வாஸ் கையெழுத்திட்டிருக்கிறார். அதிலே சொல்லி இருப்பது:
“The Chief Engineer. Mysore. Explained that the Mysore Government Was Fully prepared to honour 1924 agreement and that the limit flows that is guaranteed therein would not in anyways be affectedthe Hemavathi Project” என்று சொல்லி கையெழுத்துப் போட்டிருக்கிறார். அடுத்தபடி மைசூர் அரசின் பொறியாளர் சொல்லுகிறார்.
“The Chairman stated that this examination would by the C.W and P.C. and that the contribution of Hemavathi river in the impoundable quantity will be determined from the available inflow data from 1940-41 onwards consistent with the conditions of the 1924 agreement. Suitable proportion factors will have to be fixed by joint gauging between Mysore and Madras. Rules regulation should be framed by the two Governments in due course”
இந்த அளவுக்கு ஆதாரங்கள் நம்மிடத்தில் இருக்கின்றன. அந்தக் காரணங்களாலே தான் நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டும். என்று சொல்லுகின்ற நேரத்தில் மைசூர் அரசு தன்னிடத்தில் நியாயங்கள் இல்லாத காரணத்தாலே 1967-ம் ஆண்டு வரையில். 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை நாங்கள் மதிக்கிறோம். அதற்குப் பாதகம் இல்லாமல்தான் இந்த அணைகள் கட்டப்படும் என்று கூறிவந்தவர்கள். 1968-இல் ஹேமாவதி அடிக்கல் நாட்டு விழாவைத் தமிழக அரசின் இசைவையும் முன் ஒப்புதலையும் பெறாமலும் மத்திய அரசின் முன் அனுமதியையும் பெறாமலும் நடத்தினார்கள். அத்துடன் அந்த அடிக்கல் நாட்டு விழாவைத் தமிழக அரசின் இசைவையும் முன் ஒப்புதலையும் பெறாமலும் மத்திய அரசின் முன் அனுமதியையும் பெறாமலும் நடத்தினார்கள். அத்துடன் அந்த அடிக்கல் நாட்டு விழாவில் கர்நாடக முதலமைச்ர் வீரேந்திர பட்டீஸ் முதன் முதலாக கர்நாடக அரசு 1924 ஒப்பந்தத்தை ஏற்காது என்று கூறினார். என தலைவர் அவர்கள் அன்று கர்நாடகத்தின் மாறுபட்ட போக்கை அடையாளம் காட்டினார்.
உச்சநீதிமன்றத்தில் கலைஞர் தொடுத்த வழக்கு
கலைஞர் அரசு 4.8.1971 அன்று காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைத்திட மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்திலே வழக்குத் தொடர்ந்தது. அப்பொழுது அந்த வழக்கிலே தீர்ப்பளிக்கும் வரையிலும், அப்படி நடுவர் மன்றம் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரையிலும் கர்நாடகத்தில் கட்டப்பட்டு வரும் ஹேமாவதி அணை, கபினி அணை, ஹேரங்கி அணை, சௌர்ணவதி அணை மற்றும் காவிரியில் மற்ற கிளை நதிகளில் கட்டப்பட்டு வருகிற பிற அணைகளின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு செயல்படுத்தாவண்ணம் தடைசெய்யக்கோரி ஆணை பிறப்பிக்குமாறு ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கர்நாடகம் அணைகட்டும் முயற்சிகளுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இதனை உச்ச நீதிமன்றம் 25.10.1971 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பரிசீலித்து அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது. எனவே, தமிழக அரசு தடை “ஸ்டே” கேட்டதும் உண்மை: அந்த “ஸ்டே” தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டதும் உண்மை. அந்த உச்ச நீதிமன்றத்திலே அன்றைக்கு நீதிபதிகளாக இருந்து அந்த வழக்கை விசாரித்தவர்கள் Justice J.M.Shelat. Justice J.D.Dua. Justice S.C.Roy., Justice H.R.Khanna, Justice G.K.Mitter. இவர்கள் தான் அந்த வழக்கை விசாரித்தவர்கள், கடைசியாக Upon persuing the papers and upon hearing. The court dismissed the Application, என்ற வகையிலே அன்றைக்கு நாம் கேட்ட “ஸ்டே” நிராகரிக்கப்பட்டுவிட்டது.
புதிய அணை கட்டும் வேலைகளைத் தொடராமல் தடுக்கவும், நடுவர் மன்றத்திற்குப் பிரச்சினையை விடவும் விவசாயிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் தனியே ஒரு வழக்கைத் தொடுத்தார்.
உச்ச நீதிமன்ற வழக்கும் பிரதமர் இந்திரா காந்தி கூறிய ஆலோசனையும்!
பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் 21.5.1972 அன்று சென்னைக்கு வருகை தந்தார். அவரிடத்தில் அப்போதைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் காவிரிப் பிரச்சினை குறித்து விரிவாகப் பேசினார். அதைப் பற்றிப் பெங்களூரிலிந்து வெளியாகின்ற “டெக்கான ஹெரால்டு” என்ற பத்திரிகையிலே “Prime Minister Indra Gandhi said today that that inter-State disputes at river waters should be thrashed out by the Chief Ministers Concerned. It is much easier that way. If there is anything I can do. I will certainly help. She told the pressman after Tamil Nadu Chief Minister Karunanidhi had met her” என்று செய்தி வந்திருக்கிறது.
முதலமைச்சர் கலைஞர் அவர்களும் பிரதமர் அவர்களும் சந்தித்துப் பேசியபொழுது, பிரதமர் இந்திராகாந்தி அவர்கள்.
“வழக்கு போட்டு விட்டீர்கள்; அந்த வழக்கிலே உங்களுக்குத் தடை உத்தரவும் தரப்படவில்லை. ஹேமாவதி அணையை வழக்கு முடிகிற வரையிலே கட்டக் கூடாது என்பது உங்களுடைய கோரிக்கை. ஆனால், சுப்ரீம் கோர்ட் அதற்கு இணங்கவில்லை; அவர்கள் கட்டிக்கொண்டே போகிறார்கள். இதற்கிடையிலே வழக்கை நடத்துவதால் பயனில்லை. வழக்கு இருக்கும் போது பேசுவது என்பது சற்றுச் சிரமமான காரியம். இரு தரப்பிலும் எரிச்சல் ஊட்டக்கூடிய நிலைமையிலே பேச்சுவார்த்தை அமைய வேண்டாம். எனவே அந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்கிற முயற்சியிலே ஈடுபடுவது நல்லது. மீண்டும் முதலமைச்சர்களை அழைத்து வைத்துப் பேச அது வசதியாக இருக்கும்” என்று முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
பிரதமர் கேட்டுக்கொண்டது போலவே, அப்போதைய மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.எல்.ராவ் அவர்களும் முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக 29.5.1972 அன்று தமிழகம், கேரளம், கர்நாடகம் அகிய மூன்று மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை மத்திய அமைச்சர் கே.எல்.ராவ் அவர்கள் டெல்லியிலே கூட்டினார்கள்.
வழக்கை திரும்பப் பெற அனைத்துக் கட்சியினர் தந்த ஒப்புதல்
பிரதமர் ஆலோசனைப்படி டெல்லியிலே 29-ம் தேதி கூட்டம் என்றதும் முதலமைச்சர் கலைஞர் 27.5.1972 அன்று சென்னை தலைமைச் செயலகத்திலே உள்ள கேபினெட் அறையில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அந்தக் கூட்டத்தில், திருவாளர்கள் ஆர்.பொன்னப்ப நாடார், திருப்பூர் மொய்தீன், ஆறுமுகச்சாமி, ஏ.ஆர்.மாரிமுதது, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி, ஏ.ஆர்.பெருமாள், ஆர்.சக்திமோகன், கே.டி.கே.தங்மணி, கே.ராஜாராம், ஏ.ஆர்.தாமோதரன், டாக்டர் எச்.வி.ஹண்டே. டி.கே.சண்முகம், கே.எஸ்.அப்துல் வகாப், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. ஆகியோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் கூறிய ஆலோசனைகளை முதலமைச்சர் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் அவர்களின் ஆலோசனையை ஏற்று உச்சநீதிமன்ற வழக்கைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதென அனைத்துக் கட்சித் தலைவர்களும் முடிவுக்கு வந்து ஒப்புதல் அளித்தனர்.
நிபந்தனையோடு திரும்பப் பெறப்பட்ட வழக்கு
அதன்படி ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எண் 1/71ஐத் திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு 7.7.1972 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டதோடு, தேவைப்பட்டால் மீண்டும் புது வழக்கு தொடர உரிமை உண்டு என்ற அடிப்படையிலேதான் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்பிறகு, புதுடெல்லியில் 29.4.1973, 29.10.1973 ஆகிய நாட்களில் மத்திய பாசன அமைச்சர்கள் கே.எல்.ராவ் முன்னிலையிலும 27.6.1974 அன்று கே.சி.பந்த் முன்னிலையிலும், வார்த்தைகள் நடைபெற்றன. எனினும் அப்போது தமிழக, கர்நாடக அரசுகளின் வாதங்களை ஒட்டி மத்திய அரசினால் தயாரிக்கப்பட்ட வரைவு ஒப்பந்தம் தமிழகத்தின் பாசனத்தைப் பாதுகாக்கும் அளவுக்கு மேட்டூரில் தேவைப்படும் நீர் கிடைப்பதற்கான உத்தரவாதம் அளிக்காததால், இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் அந்த ஒப்பந்தம் ஏற்கப்படவில்லை.
பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து கலைஞர் அரசு நடுவர் அமைக்குமாறு 1975 மே தினங்களில் கடிதம் எழுதியது.
கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்ட பின் குடியரசுத் தலைவர் ஆட்சியில்
பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்த காரணத்தால் 1976 ஜனவரி 31 அன்று தமிழகத்தில் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழகத்தில் முதல்முறையாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சியில் காவிரிப் பிரச்சினையின் தீர்வுக்காக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தப்பட்டதை ஒட்டி, 25.8.1976 அன்று மத்திய அரசால் மீண்டும் ஒரு வரைவு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.
தி.மு.க. ஆட்சியின் நிலைதான் அ.தி.மு.க. ஆட்சியின் நிலையும் என்ற எம்.ஜி.ஆர்
1977-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க தமிழகத்தில் ஆட்சி அமைத்து எம்.ஜி.ஆர். முதலமைச்சரான பின் தி.மு.க அரசு கடந்தகாலத்தில் காவிரிப் பிரச்சினையில் என்ன நிலை எடுத்ததோ அதே நிலைதான் அ.தி.மு.க அரசின் நிலையும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
அந்த உணர்வோடு எம்.ஜி.ஆர். அரசு 25.8.1976 தேதிய மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. தொடர்ந்து 5.8.1978, 3.9.1978, 9.10,1978, 18.9.1980, 27.12.1980, 13.8.1981 ஆகிய நாட்களில் மத்திய நீர்பாசனத்துறை அமைச்சர் முன்னிலையிலும், 14.10.1981 மற்றும் 15.10.10.1981 ஆகிய நாட்களில் தமிழக கர்நாடக மாநில அரசுகளின் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 5.4.1983 அன்று மத்திய அமைச்சர் ராம் நிவாஸ் மிர்தா அவர்கள் முன்னிலையில் இரண்டு மாநில முதலமைச்சர்களும் 5.1.1984 அன்று பெங்களூரில் இரண்டு மாநில முதல் அமைச்சர்களும் பங்கு பெற்ற பேச்சுவார்த்தைகள் அல்லாமல் 5.11.1985 அன்று அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் எதிலும் தீர்வு எட்டப்படவில்லை.
பின்னர், 23.11.1985 அன்று சென்னையில் தமிழக, கர்நாடக மாநில முதல் அமைச்சர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோதும் பயன் எதுவும் ஏற்படாததால், வேறு வழியின்றி, நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமென்று எம்.ஜி-ஆர். ஆட்சியிலும், தமிழகத்தின் சார்பில் கோரிக்கை எழுதப்பட்டது.
16.6.1986 அன்று மத்திய அமைச்சர் பி.சங்கரானந்த் முன்னிலையில் மாநில முதல் அமைச்சர்களிடையே மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது- அந்தப் பேச்சுவார்த்தையிலும் பயன் கிடைக்காததால் எம்.ஜி.ஆர். அரசு 6.7.1986 அன்று நடுவர் மன்றம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறிய மத்திய அரசின் விருப்பத்திற்கு எம்.ஜி-ஆர் அரசு இணங்கவில்லை.
தஞ்சை விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கு
1983-ம் ஆண்டில் தொடுக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த காவிரி விவசாயிகள் சங்க வழக்கில் தமிழக அரசு தன்னையும் இணைத்துக்கொண்டது.
தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விளைப்பொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கம் தொடுத்திருந்த அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.
அப்போது எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகளால் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி ஏற்பட்டது. அந்த அந்த நேரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த அறிவுரையையொட்டி, 19.9.1988 அன்று மீண்டும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் பலனளிக்காததால், ஆளுநர் அவர்களால் நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசிற்கு ஆணை வழங்கும் பொருட்டு, உச்சநீதிமன்றத்தில் 25.9.1988 அன்று விண்ணப்பிக்கப்பட்டது. 18.10.1988 அன்று தமிழக ஆளுநரால் பிரதமருக்குக் கடிதம் ஒன்றும் எழுதப்பட்டது.
1989 கலைஞர் ஆட்சியில் மீண்டும் நடுவர் மன்றக் கோரிக்கை
1989.ல் தலைவர் கலைஞர் தலைமையில் கழக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்றவுடன் காவிரிப் பிரச்சினைக்கு முடிவுகாண முற்பட்டபோது, கர்நாடக அரசு கலைக்கப்பட்டு, அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. எனினும், தமிழக கர்நாடக மாநிலங்களோடு 8.8.1989 அன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்தது. அப்போது சுமூகமான முடிவு ஏற்படாவிட்டால் உடனடியாக நடுவர் மன்றம் அமைக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளலம், என முடிவு செய்து தீர்மானம் ஒன்றும் 27.7.1989 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கூறியதற்கு ஏற்ப 8.8.1989 அன்று பேச்சுவார்த்தை நடத்தலாம். என்று கடிதம் மூலம் கர்நாடக ஆளுநர் ஒப்புக்கொண்ட நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து விவாதிக்க தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றிய போதிலும், திடீரென்று கர்நாடக ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு பேச்சுவார்த்தை நடத்தினால்தான் பயனுள்ளதாக இருக்குமென்று கடிதம் மூலமும் ஏடுகள் மூலமும் ஏடுகள் மூலமும் தெரிவித்துவிட்டார்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமர் ஆனார்!
இதற்கிடையே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று சமூக நீதிக் காவலர் திரு.வி.பி.சிங் அவர்கள் 2.12.1989 அன்று பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பிரதமர் பொறுப்பேற்ற பிறகுதான். காவிரிப் பிரச்சினையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு, காவிரிப் பிரச்சினையில் தீர்வு காண்பதற்காக உடனடியாக நடுவர் மன்றம் அமைக்க ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு கடிதம் எழுதினார். அதனையொட்டி, பிரதமர் வி.பி.சிங் அவர்களின் ஆலோசனைப்படி டெல்லியில் மத்திய நீர்ப் பாசனத்துறை அமைச்சர் கூட்டியிருந்த காவிரி சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.
“1968-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பொதுப் பணித்துறை அமைச்சராகவும், வீரேந்திர பட்டீல் முதல் அமைச்சராகவும் இருந்து தொடங்கிய பேச்சுவார்த்தை 22 ஆண்டுகளுக்குப் பிறகும். அதே பிரச்சினைக்காகத் தொடர்ந்து 24 கூட்டங்கள் நடைபெற்று முடிந்த பிறகு 25வது தடவையாக நான் முதல்வராகவும். வீரேந்திர பட்டீல் அவர்கள் கர்நாடக முதல்வராகவும் இருக்கும் இந்நாளில் மீண்டும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் மத்தியிலே நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களாக இருந்த டாக்டர். கே.எல்.ராவ், கே.சி.பந்த், ஜெகஜீவன்ராம், ராவ் பிரேந்திரசிங், ராம் நிவாஸ் மிர்தா, பி. சங்கரானந்த் ஆகியோரால் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியவில்லை. 1970-ம் ஆண்டு இந்தப் பிரச்சினையை நடுவர் மன்றத்திற்கு விட வேண்டுமென்று தி.மு.க அரசினால் விடுத்த கோரிக்கை 1975-ம் ஆண்டு தி.மு.க.அரசினால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அரசினால் 1986-ம் ஆண்டும், ஆளுநரால் குடியரசுத் தலைவர் ஆட்சியில் 1988-ம் ஆண்டும் நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்தக் கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் ஏற்படாவிட்டால் உடனடியாக இதனை நடுவர் மன்றத் தீர்ப்புக்கு அனுப்பவேண்டும்” என்று குறிப்பிட்டார். அதற்குப் பிறகும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை.
பின்னர், முதலமைச்சர் கலைஞர், சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அப்போதைய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குழுவாகச் சென்று பிரதமர் வி.பி.சிங் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அப்பொழுது அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும், அந்த மனுவினை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அப்பொழுது அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும், அந்த மனுவினை அளிக்க துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் சேர்ந்து வருவதாக முதலில் ஒப்புக் கொண்டு; பின்னர், கடைசி நேரத்தில் வர மறுத்து விட்டனர். துரைமுருகன் தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் திருமதி வைஜயந்தி மாலா எம்.பி.மட்டும் உடன் வர, பிரதமரைச் சந்தித்து மனு வழங்கியது. ஆனால், அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தம்முடன் அழைத்துக் கொண்டு தனியாகச் சென்று ஒரு மனுவினைப் பிரதமரிடம் அளித்தார்கள். அவர்கள் பிரதமரிடம் அளித்த மனுவின் முதல் வாக்கியமே கர்நாடகாவின் வாதத்தை வலுப்படுத்துவது போல 1924-ம் ஆண்டின் காவிரி ஒப்பந்தம் 1974-ம் ஆண்டோடு முடிந்து விட்டது. (The Period of agreement on sharing of Cauvery water between Tamilnadu and karnatake (Mysore State came to and end in 1974) என்று இருந்தது. இதனை ஏடுகளில் படித்துவிட்டுத் தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துத் தரப்பினரும், பத்திரிகைகளும் அ.தி.மு.க.வைக் கண்டித்தனர்.
1924-ம் ஆண்டு ஒப்பந்தம் 50 ஆண்டுகளில் முடிவடைகிறதா?
1924-ம் ஆண்டு காவிரி ஒப்பந்தம் 50 ஆண்டுகளில் முடிவடைகிறது. என்று கர்நாடக அரசு கூறி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்துவரும் நேரத்தில் தமிழகத்திலும் சிலர் குதர்க்க எண்ணத்தோடு உண்மையை உணர்ந்து புரிந்து கொள்ளாமல் கர்நாடக அரசுக்கு துணைபுரிவதுபோல தமிழகத்திற்குத் துரோகம் இழைக்கும் நடவடிக்கையாக. அந்த ஒப்பந்தம் 50 ஆண்டுகளில் முடிவடைகிறது, என மேடையில் பேசும் போதும், பேட்டிகளின் போதும், ஊடக விவாதங்களின் போதும், பத்திரிகைகளில் எழுதும்போதும், பொய்யாகக் கூறி இப்போது கூட மக்களைக் குழப்பி ஏமாற்றி வருகின்றனர்.
தலைவர் கலைஞர் அவர்கள் இப்படிப்பட்ட குழப்பவாதிகளுக்கும், அரைவேக்காட்டுக் காரர்களுக்கும் 26.4.1990 அன்று தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றும்போதே விளக்கமாகக் கூறியுள்ளார். விளங்கிக் கொள்ளாத குறைமதியாளர்கள் எல்லாம் இதைப் பார்த்து விளங்கிக் கொள்ளட்டும்!
அதாவது, “1942-ம் ஆண்டு ஒப்பந்தம் என்ன என்பதை நான் இங்கே படித்துக் காட்ட விரும்புகிறேன், அதில்.
“The Mysore Government and the Madras Government further agree that the limitations and arrangements embodied in Clauses iv-viii supra shall at the expiry of 50 years from the date of the execution of these presents, we open to reconsideration in the light of the experience gained and of an examination of the possibility of the further extension of irrigation within the territories of the respective Government and to such modifications and additions as may be mutually agreed upon as the result of such reconsideration”
என்று மிகத் தெளிவாக இருக்கிறது. நான்காவதிலிருந்து எட்டாவது வரையில் உள்ள அந்தப் பிரிவுகள் மட்டும்தான் “ரீ-கன்சிட்ரேஷனுக்கு வரவேண்டும். என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடத்திலும் “ரெனீவல்” என்கின்ற வார்த்தை இந்த ஒப்பந்தத்திலே கிடையாது. “எண்டட்” என்ற வார்த்தையும் எழுபத்து நான்கோடு இது முடிந்து விடுகிறது. என்ற வார்த்தையும் இந்த ஒப்பந்தத்திலே எங்கும் கிடையாது. எனவே, இது “பர்மனென்டு” ஒப்பந்தம். ஆனால், எந்த நான்கைப் பற்றி நாம் “ரீ-கன்சிடர் பண்ணி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றால்,
- Retum of the newly brought under cultivation to be fumished to the other Government அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் புதிதாகப் பாசனத்திற்கு எடுக்கப்பட்டிருக்கிற பரப்பளவு, விரிவுப்படுத்தப்பட்ட பகுதி.
- Extension of irrigation in Mysore மைசூரில் பாசனத்திற்கு விரிவுப்படுத்தப்பட்ட பகுதி.
- Details of the reservoir to tbe furnished by Mysore, புதிதாக மைசூரில் கட்ட இருக்கும் நீர்த்தேக்கத் திட்டங்கள்.
- Reserve storage in Krishnaraja Sagar may be utilized for generation of power by Mysore. கிருஷ்ணராஜசாகரில் மின் உற்பத்தி செய்வதற்காகப் போடுகின்ற திட்டங்கள் குறித்து, இவைகளைக் குறித்துத்தான் ரீ-கன்சிடர் பண்ண வேண்டும் என்று இருக்கிறதே அல்லாமல்: நம்முடைய பழைய ஆயக்கட்டுகளுக்குத் தரப்படுகின்ற தண்ணீரை ரீ-கன்சிடர் பண்ணவேண்டும். ஒப்பந்தம் எழுபத்தி நான்கோடு முடிவடைகிறது. என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
அது மாத்திரமல்ல. அந்த ஒப்பந்தத்தினுடைய கடைசிப் பகுதியில்,
“The Madras Government and the Mysore Government hereby agree that, if any time there should arise any dispute between the madras Government and the Mysore Government touching the interpretationor operation or carrying out of this agreement, such dispute shall be referred for settlement to arbitration”
-என்று மிகத் தெளிவாக அந்த ஒப்பந்தத்தினுடைய கடைசிப் பகுதியிலே இருக்கிறது. இதை மேலும் வற்புறுத்துகின்ற வகையில் 1956-ம் ஆண்டு ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. நாடாளுமன்றத்தில் அதுதான் ‘inter-State Water Dispute Act’ அந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகின்ற நேரத்தில் அதிலே இந்த ‘May’ ‘Shall’ தகராறு வந்தது. ‘May be constituted’ என்றுதான் சட்டத்திலும் இருந்தது. ஆனால், அந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு முன்பு சில திருத்தங்கள் கொடுக்கப்பட்டு, ‘May’ என்ற இடத்தில் எல்லாம், ‘should’ என்கிற வார்த்தைபயன்படுத்தப்பட்டு, கட்டாயமாக “Tribunal’ போட்டுத்தான் தீரவேண்டும் என்ற அளவிலே அது திருத்தப்பட்டிருக்கிறது. அது கிளாஸ்-4-ல்
“The Committee are of opinion that when a State Government makes a request for the reference of a water dispute to a Tribunal the Central Government should have no discretion in the matter and that a Tribunal should be constituted for the adjudication of the water dispute. At the same time the Committee realize that when a request is receiver from a State Government in this behalf the Central Government should be given an opportunity to settle the disputes by negotiations if possible. If however. Negotiations fail. He dispute should be referred to Tribunal” ad a matter of course”
-என்று நடுவர் மன்றத்திற்கு விடுவது பற்றியும் அதிலே சொல்லப்பட்டிருக்கிறது.
1956-ம் ஆண்டு ‘inter-State Water Dispute Act” நமக்கு உதவிகரமாக அமைந்திருக்கிறது. இவைகளையெல்லாம் வைத்துத்தான் இன்றைக்கு நாம் மத்திய அரசோடு வாதாடிக்கொண்டிருக்கிறோம்.” என்று கூறி 1924-ம் ஆண்டோடு ஒப்பந்தம் முடிந்துவிட்டது என்று கூறுவது தவறு என்று 26.4.1990 அன்றே தெளிவுபடுத்தியுள்ளார் கலைஞர்.
வி.பி.சிங் அரசு அமைத்த நடுவர் மன்றம்
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி ரெங்கநாதன் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு விசாரணை வேகமான நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கருத்தினை உடனடியாகத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டது.
அதன் பொருட்டு, பிரதமர் வி.பி.சிங் அவர்கள் முதலமைச்சர் கலைஞர் அவர்களைத் தொலைபேசியிலே தொடர்புகொண்டு மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் என்ன தெரிவிக்கலாம் என்று கேட்டார். அப்போது.
“இனிமேல் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை, இதைத் தெளிவாக்கி விடுங்கள். அப்போதுதான் எங்களுக்கு நடுவர் மன்றம் கிடைக்கும்.”
-என்று பிரதமர் வி.பி.சிங் அவர்களிடம் கலைஞர் உறுதிபடக் கூறினார். அப்பொழுது தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றித் தமக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமர் வி.பி.சிங் அவர்கள் முதலமைச்சர் கலைஞர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
அதனையொட்டி முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 24.4.1990 அன்று சட்டப் பேரவையில், ஒரு தனி தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார். அது
“காவிரிப் பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டுமென்று உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று, தஞ்சை விவசாயிகள் சார்பில் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு தன்னையும் இணைத்துக் கொண்டிருப்பது (Implead) தெரிந்ததே; இன்று, உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கின் மீது, விசாரணை தொடர்ந்து நடக்கிறது. கடந்த 19-ஆம் தேதி, தமிழக முதலமைச்சருக்கும், கர்நாடக முதலமைச்சருக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது என்றும், இனிப் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும், எனவே, உச்சநீதிமன்றம், காவிரிப் பிரச்சினையை, உடனடியாக நடுவர் தீர்ப்புக்கு விடுவதற்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டுமென்றும், நமது தமிழக அரசின் சார்பில், உச்சநீநிமன்றத்திற்கு எடுத்து உரைக்க வேண்டுமென்றும் பேரவையின் சார்பில் தமிழக அரசு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறது.”
இத்தீர்மானத்தை நிறைவேற்றி, முதலமைச்சர் கலைஞர் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்குத் தொலைநகலி மூலம் (FAX) அனுப்பி வைத்தார். அது மத்திய அரசின் வழக்கறிஞர் மூலமாக உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம். “இனிப் பேச்சுவார்த்தை இல்லையென்றால் நடுவர் மன்றும் அமைக்க உத்தரவிடுகிறோம்” என்று உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2.6.1990 அன்று காவிரி நடுவர் மன்றத்தை அமைத்து மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.
இடைக்காலத் தீர்ப்பு வேண்டும் என்ற கலைஞரின் கோரிக்கை
நடுவர் மன்றம் அமைந்த பிறகு, இந்தப் பிரச்சினையை முழுவதும் விசாரித்துத் தீர்ப்பு சொல்வதற்கு நீண்ட நாளாகும் என்பதால் அதுவரை தமிழகம் பாதிக்கப்படாமல் இருக்க ஒரு இடைக்காலத் தீர்ப்பு வழங்குங்கள் என்று கலைஞர் அரசின் சார்பில் 28.7.1990 அன்று நடுவர் மன்றத்திற்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
5.1.1991 அன்று நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றது. நடுவர் மன்றத்துக்கு அதிகாரம் உண்டா இல்லையா என்று தீர்ப்பு அளியுங்கள் என்று உச்சநீதி மன்றத்திடம் 10.1.1991 அன்று கலைஞர் ஆட்சியிலே ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதன்மீது அதிகாரம் உண்டு என்று 26.4.1991 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதனையொட்டி, காவிரி நீர்ப்பங்கீடு குறித்து ஆய்வு செய்த நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பாக ஆண்டு ஒன்றுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகம் தமிழகத்திற்குத் தர வேண்டும் என்று 25.6.1991 அன்று ஆணை பிறப்பித்தது. அந்த இடைக்கால ஆணை மத்திய அரசிதழிலும் 11.12.1991 அன்று வெளியிடப்பட்டது.
நடுவர் மன்ற இடைக் காலத் தீர்ப்பு:
தமிழகத்திற்கு கர்நாடகம் 205 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என்றும், கர்நாடகம் தன் சாகுபடிப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் உயர்த்தக் கூடாது என்றும் காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பில் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்பினை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்ட பின்னரும் கர்நாடக அரசு அந்த ஆணையை ஏற்க மறுத்துவிட்டது.
இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்த கர்நாடக அரசின் அவசரச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனம்
நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு இடைக்கால உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்ட பின்னர் நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவைச் செல்லாமல் ரத்து செய்வதற்காக கர்நாடக அரசு 25.6.1991 அன்று அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அந்த அவசரச் சட்டம் குறித்து. குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் 143வது பிரிவின்படி உச்சநீதிமன்றத்தின் கருத்தைக்கோரினார். அந்தக் கோரிக்கை மீது 1993-ல் உச்சநீதிமன்றம் வழங்கிய விளக்கத்தில், உச்சநீதிமன்றம் கர்நாடகத்திற்கு எதிராகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தியது.
“கர்நாடக மாநிலம் காவிரித் தண்ணீர் மீது தங்களுக்கு மிக உயர்வான உரிமைகள் இருப்பதாகக் கருதிக்கொண்டும், அதைத் தாங்கள் எப்படி வேண்டுமானலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டும் செயல்பட்டுள்ளது. அது பிறப்பித்துள்ள அவசரச்சட்டம் சட்டத்தின் ஆட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது. அது சட்டத்தைத் தனது கைகளில் எடுத்துக்கொணடுள்ளது. அதன் மூலம் சட்டம் இல்லாத நிலைக்கும் சர்வாதிகாரத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்துள்ள கூட்டாட்சி அமைப்புக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று முன் கூட்டியே அறிகுறி காட்டியுள்ளது.”
-என்று உச்சநீதிமன்றம் கர்நாடக அரசின் அவசரச் சட்டத்தை மிகவும் வன்மையாகக் கண்டித்தது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு வருவதற்குமுன் 31.1.1991 அன்று கலைஞர் ஆட்சி இரண்டாம் முறையாகக் கலைக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா ஆட்சி வந்தது.
1991 முதல் 1996 தமிழகத்தில் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.முக. அரசு இடைக்கால ஆணையின்படி தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற எந்த ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை. என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
1996ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி
1996-ம் ஆண்டு மீண்டும் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் கலைஞர் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பினைச் செயல்படுத்துவதில் தாமதத்தைத் தவிர்க்கும் வண்ணம், திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிட வேண்டுமென்று 9.7.1997, 23.7.1997, 29.9.1997, 1.11.1997,6.11.1997 ஆகிய நாட்களில் பிரதமருக்குக் கடிதங்கள் எழுதினார். 27.7.1997 மற்றும் 29.9.1997 ஆகிய நாட்களில் பிரதமரை சந்தித்தும் வலியுறுத்தினார்.
மேலும், 10.11.1997 அன்று மத்திய அரசுக்கு அப்படியொரு ஆணை பிறப்பிக்க உச்சநீதி மன்றத்தில் முறையீட்டு மனு ஒன்றும் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. மீண்டும் 28.3.1998, 6.4.1998 மற்றும் 31.5.1998 அன்று நேரிலும் சந்தித்து, வரைவுத் திட்டத்தை இறுதி செய்து அரசிதழில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு
1998-ம் ஆண்டில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றார். (1996 மே திங்களில் முதல்முறையாக பிரதமர் ஆனார்.
21.7.1998 அன்று உச்ச நீதிமன்றம், “பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்க்கப் போவதாக மத்திய அரசு உறுதியளித்து, 15 மாதமாகிறது. இன்னமும் இணக்கமான திட்டம் உருவாக்கப்படவில்லை. இந்த நிலை நீடித்துக் கொண்டே போவதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தது.
அதன் விளைவாக, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் 6.8.1998 அன்று பிரதமர் அலுவலகத்தில் காவிரிப்பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு 28.7.1998 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதிலே கலந்து கொள்வது பற்றி 3.8.1998 அன்று தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, பிரதமர் கூட்டியிருந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஆனால், ஜெயலலிதா அந்தக் கூட்டத்திற்கு முதலமைச்சர் செல்லக் கூடாது என்று அறிக்கை விடுத்தார்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி ஆணையம் கலைஞரின் இராஜ தந்திர வெற்றி!
பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தலைமையில் முதலமைச்சர் கலைஞர் உள்ளிட்ட 4 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க 6.8.1998 ஆகிய இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற அந்தக் கூட்டத்தின் இறுதியில்தான் 7.8.1998 தி.மு.க ஆட்சியில் இடைக்காலத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி இடைக்கால ஆணையில் கூறப்பட்ட 205 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடகம் தமிழகத்திற்கு விடுவிக்கவேண்டும். என்றும், பிரதமர் தலைமையில் காவிரி பாயும் நான்கு மாநில தலைவர்கள் அடங்கிய காவிரி ஆணையம் அமைக்கப்படும் என்றும் முடிவாயிற்று, இரண்டு நாள்களிலும் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் 9 மணி நேரம் அமர்ந்து ஒப்பந்தம்காண உதவியது மிகுந்த பாரட்டுக்குரியதாகும்.
அந்த ஒப்பந்தத்தை சி. சுப்பிரமணிய, ஜி.கே. மூப்பனார். சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு அப்துஸ்சமது எம்.ஏ.லத்தீப், குமரி ஆனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, ஆர்.எம்.வீரப்பன் ஜி.ஏ.வடிவேலு, இல.கணேசன். எஸ்.திருநாவுக்கரசு, பேராயர் எஸ்றா சற்குணம் போன்ற தலைவர்களும் மற்றும் இந்து எக்ஸ்பிரஸ், தினமணி, விடுதலை, தீக்கதிர், தி டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய நாளேடுகளும் கல்கி, குமுதம், சாவி, துக்ளக், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய இதழ்களும் பாராட்டின.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஏடுகளும் பாராட்டியபோது, ஜெயலலிதா மட்டும் அந்தத் தீர்வினை நீராகரிக்கிறோம் என்றும், அதனை ஏற்க மாட்டோம் என்றும் கூறினார். “காவிரிப் பிரச்சினையில் வாஜ்பாய் கருணாநிதியின் தந்திரத்திற்கு ஆளாகி விட்டார். இரண்டு பேரும் சேர்ந்து செய்து கொண்டிருக்கின்றன உடன்பாட்டை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அனைத்துக் கட்சித் தலைவர்கள் வரவேற்பு
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தி.மு.கழக 5.2.2007 அன்று வெளியிடப்பட்டது. இந்தத் தீர்ப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த எம்.கிருஷ்ணசாமி, திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல், திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ரெங்கநாதன், உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில் கே.எஸ்.நடராசன் அப்போது வரவேற்று அறிக்கை கொடுத்தனர்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்தபோது கூட, தி.மு.கழக அந்த நிலையிலும், இந்த இறுதித் தீர்ப்பு குறித்து ஜெயலலிதாவைப் போலத் தன்னிச்சையாக முடிவெடுக்க விரும்பாமல், 19.2.2007 அன்றும் 15.4.2007 அன்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டித்தான் முடிவெடுத்தது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- காவிரியை எந்த மாநிலமும் தனி உரிமை கோரமுடியாது. அது எந்த மாநிலத்திற்கும் சொந்தமல்ல. அது ஒரு தேசியச் சொத்து.
- தமிழகத்திற்கு வழங்கும் தண்ணீர் 192 டி.எம்.சி.யில் இருந்து 14.75 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகாவிற்குக் குடிநீருக்காக வழங்க வேண்டும்.
- தமிழகத்திற்கு ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரைக் கர்நாடகா தங்கு தடையின்றி வழங்கிட வேண்டும்.
- காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாகக் காலதாமதமின்றி (6 வார காலத்திற்குள்) அமைக்கவேண்டும்.
- புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களுக்கு காவிரியிலிருந்து தண்ணீர் வழங்கிடும் அளவில் மாற்றமில்லை.
- தமிழகத்திற்கு மாதம்தோறும் முறையாகத் தண்ணீர் திறக்கப்படுகிறதா என்று காவிரி மேலாண்மை வாரியம் மாதம்தோறும் ஆய்வு செய்திட வேண்டும்.
- இந்த வழக்கின் தீர்ப்பே இறுதியானது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது.
- காவிரியின் குறுக்கே இனி கர்நாடகம் பழைய ஒப்பந்தத்தின்படி அணைகட்ட முடியாது.
- இந்தத் தீர்ப்பு 15 ஆண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்.
தீர்ப்பைச் செயல்படுத்திட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடுமாறு திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட அனைத்துக்கட்சிகளும் விவசாயச் சங்கங்களும் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தன. தமிழக அரசும் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் காரணமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்தி தமிழகத்தைத் துன்பத்திற்கு ஆளாக்கியது.
மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து கழகச் செயல் தலைவரின் போராட்டங்கள்
கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கமெனச் சீறி எழுந்தார் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி பல போராட்டங்களை நடத்தினார். பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டப்படும் என தளபதி அவர்கள் அறிவித்த போராட்டம் மகத்தான வெற்றி பெற்றது. தமிழகம் முழுவதும் இரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு எனப் போராட்டங்கள் நடைபெற்று, மத்திய மாநில அரசுகளுக்கு வலிமையான எதிர்ப்பைக் காட்டியது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி “காவிரி உரிமை மீட்புப் பயணம்” கழகச் செயல் தலைவர் அவர்கள் தலைமையில் 7.4.2018 அன்று மாலையில் திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்தும், 9.4.2018 அன்று இரண்டாவது பயணக்குழு அரியலூரிலிருந்தும் புறப்பட்டு காவிரிப் பாசனப் பகுதிகளுக்கெல்லாம் சென்று விவசாயப் பெருங்குடி மக்களிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு எழுச்சியை ஏற்படுத்தி, 12.4.2018 கடலூரில் முடிவடைந்தது.
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தோழமைக் கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்த மக்கள் எழுச்சி மற்றும் பல போராட்டங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான இலக்கை நோக்கி விசாரணையை விரைவுபடுத்தியது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
அதன்படி கடந்த மார்ச் 29-ம் தேதிக்குள் விரைவுச் செயல் திட்டத்தை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், தாக்கல் செய்யவில்லை. கெடு முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் “ஸ்கீம்” என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இதேபோல் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழக அரசு தாக்கல் செய்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்கத் தயார் மத்திய அரசு!
காவிரி நடுவர் மன்றம் கூறிய உத்தரவுகளை, பணிகளை மேற்கொள்ளும் இந்த அமைப்பின் தலைவர் 65 வயதுவரை பதவியில் நீடிக்கலாம் அல்லது 5 ஆண்டுகள் வரை தொடரலாம் எனவும், அந்தக் காவிரி திட்ட வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதுடன் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஆணையம், குழு இந்த மூன்றில் எதை உச்சநீதிமன்றம் அமைக்கச் சொல்கிறதோ அதனை ஏற்றுச் செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழகம் உள்பட 4 மாநிலங்களிடம் கருத்து
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் காவிரி திட்ட வரைவு அறிக்கையை அனுப்பிடவும், அது குறித்த கருத்தினை இம்மாநிலங்கள் எழுத்துப் பூர்வமாக 16.5.2018 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
மத்திய அரசு ஒப்புதல் (மே-16,2018)
உச்சநீதிமன்ற உத்தரவின்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு, தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் சார்பாக 16.5.2018 அன்றுபதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில், புதிதாக உருவாக்கப்படும் அமைப்புக்குக் காவிரி மேலாண்மைவாரியம் எனப்பெயர் சூட்டவேண்டும் என்றும், தலைமை அலுவலகம் பெங்களூருவுக்குப் பதில் டெல்லியில் அமைக்கப்பட வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியத்திற்குக் கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதற்கு, மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட வில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதிகாரமற்ற மேலாண்மை வாரியம் -உள்ளீடற்ற வெறும் கூடு- விசை ஒடிந்த அம்பு
தன்னாட்சி மிக்க காவிரிமேலாண்மை வாரியம் தேவை! மு.க.ஸ்டாலின் கருத்து:
கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பின் அடிப்படையில், அதிகாரமிக்க அதாவது. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பில் உள்ளவாறு. தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய பா.ஜ.க. அரசு மே 17 அன்று தாக்கல் செய்யும் வரைவுத்திட்டத்தில் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“தன்னாட்சி அதிகாரம் இல்லாத மேலாண்மை வாரியம் என்பது, உள்ளீடற்ற வெறும் கூடுபோன்றது விசை ஒடிந்த அம்பைப் போன்றது” என்று கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
புதிய செயல் திட்டம் மத்திய அரசு தாக்கல் (மே 17,2018)
16.5.2016 உச்சநீதிமன்ற அறிவுரைப்படி வழக்கு 17.5.2018 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருத்தப்பட்ட வரைவுச் செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அமைப்புக்கு காவிரி மேலாண்மை ஆணையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் எனப் பெயர் வைக்க வேண்டும் என்ற தமிழகம் அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கர்நாடக அரசு 2 பக்க அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், மத்திய அரசின் வரைவுச் செயல் திட்டம் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு உட்பட்டதாக இல்லை என்றும், மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல் பாட்டில் தலையிடுவதாக உள்ளது என்றும் கூறியது. திருத்தப்பட்ட வரைவுச் செயல் திட்டம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டுள்ளதா என ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
18.5.2018 அன்று இறுதித் தீர்ப்பை வெளியிட்ட உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வீல்கர், ஒய்.வீ.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு 18.5.2018 அன்று மாலை இறுதித் தீர்ப்பினை வெளியிட்டது.
தீர்ப்பின் சுருக்கம்:
காவிரி மேலாண்மை ஆணையம் எனப் பெயரிட்டு மத்திய அரசு அளித்த திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
இந்தப் பருவத்திற்குள்ளேயே ஆணையத்தை அமைக்க வேண்டும்.
நீர்ப் பங்கீடு தொடர்பு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கே உள்ளது.
வரைவுத் திட்டத்தை ஜூன் 1 தேதிக்குள் அரசிதழில் வெளியிட்டுள்ள உடனே செயல்படுத்த வேண்டும்.
இத்துடன் காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன. -என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு குறித்து கழகச் செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்,,
“உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரிநீர் தடையின்றிக் கிடைத்திட ஆவன செய்திட வேண்டும்.
முழுமையான சுதந்திரமான தன்னாட்சி அதிகாரம் இல்லாத ஓர் ஆணையத்தையாவது அமைக்க மத்திய பா.ஜ.க. அரசு ஒப்புக்கொண்டுள்ளது. என்றால் அதற்கு விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களுக்கும், இதற்காக அழுத்தம் கொடுத்த தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும், இன்னும் ஒரு படிமேலே சென்று கூறுவது என்றால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடுத்தடுத்துக் கால அவகாசம் கொடுத்தாலும் ஒவ்வொரு விசாரணையிலும் கிடுக்குப்பிடி போட்டு இந்த அளவிற்காவது காவிரி வரைவுத் திட்டத்தை இறுதி செய்திருக்கின்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களின் அமர்வும், அது காட்டிய கடுமையான, தீவிர அணுகுமுறையும்தான் காரணம்” -என்று குறிப்பிட்டார்
1968 முதல் இந்தக் காவிரி நீர்த் தகராறு பிரச்சினையில் பேச்சுவார்த்தை என்னும் போராட்டத்தைத் தொடங்கிய நடுவர் மன்றம் அமைத்து, இக்காலத் தீர்ப்பும், இறுதித் தீர்ப்பும் பெற்று: தொடர்ந்து ஏற்பட்ட உச்சநீதிமன்ற வழக்கிலும் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிருந்தாலும் ஓர் அளவு தண்ணீர் தமிழகத்திற்குக் கிடைக்கக்கூடிய வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து உச்சநீதிமன்றம் இறுதியாக அளித்துள்ள தீர்ப்பு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் போராட்டக்களத்தில் ஓர் அளவுக்கு ஆறுதல் தருகிறது. என்றாலும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு பறைசாற்றுகின்ற தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இந்த ஆணையம் அமைக்கப்படாதது. தமிழகம் எவ்வளவு தான் அழுத்தம் கொடுத்தாலும் அதனைப் பொருட்படுத்தாது. தமிழகத்தை வஞ்சிப்பது மட்டுமே தம்முடைய இயல்பு என்பதை மத்திய அரசு மெய்ப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு என்பது தமிழகத்திற்கு மட்டும் தான் வேண்டுமா? இந்தியாவின் இதர மாநிலங்களுக்குத் தேவையில்லையா?
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில்
வெளியிட்ட மத்திய அரசுக்கு தலைவர் கலைஞர் நன்றி.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 20.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதனையொட்டி, தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட செய்தி இங்கு இடம்பெறுகிறது:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து தமிழகத்தின் முதல் அமைச்சராக நான் பொறுப்பேற்றதற்குப் பிறகும் கூட, தொடர்ந்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து முதல் அமைச்சர்களோடும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர்களோடும்- இந்தியப் பிரதமர்களோடும் அதிக முறை பேச்சுவார்த்தை நடத்தியவன் என்ற முறையிலும்:
17.2.1970 அன்று முதன் முதலாக காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைக்கப்பட வேண்டுமென்று, நான் முதல் அமைச்சராக இருந்த போதுதான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியவன் என்ற முறையிலும்: 8.7.1971 அன்று நடுவர் மன்றம் அமைத்திட வேண்டுமென்றும் தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து அதனை நிறைவேற்றச் செய்தவன் என்ற முறையிலும்:
27.7.1989 அன்று முதலமைச்சராக இருந்து நான் கூட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடுவர் மன்றம் அமைத்திடுமாறு மத்திய மத்திய அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றக் காரணமாக இருந்தவன் என்ற முறையிலும்: 24.4.1990 அன்று தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் நடுவர் மன்றம் தேவை என்ற தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றினை நான் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டதன் காரணமாக 2.6.1990 அன்று திரு.வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த போது, நடுவர் மன்றம் மத்திய அரசினால் அமைக்கப்படப் பெரிதும் காரணமாக இருந்தவன் என்ற முறையிலும்:28.7.1990 அன்று கழக ஆட்சியில் நடுவர் மன்றத்தின் சார்பில் இடைக் காலத் தீர்ப்பு ஒன்று வெளியிடப்பட வேண்டுமென்று கோரி மனு செய்ததையொட்டி-
25.6.1991 அன்று நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பினை வழங்க பெரிதும் காரணமாக இருந்த தி.மு.கழக அரசின் முதலமைச்சர் என்ற முறையிலும்: 5.2.2007 அன்று கழகம் ஆட்சியிலே இருந்த போது, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளிவரக் காரணமாக இருந்தவன் என்ற முறையிலும்: அந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழிலே வெளியிட வேண்டுமென்று பலமுறை வேண்டுகோள் விடுத்தவன் என்ற முறையிலும்:
உச்சநீதி மன்றமே முன் வந்து, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அரசிதழிலே வெளியிட வேண்டுமென்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டதையடுத்து: இன்றையதினம் (20.2.2013) காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதற்காக தமிழக மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும்,இதற்கு பெரிதும் காரணமாக இருந்த உச்ச நீதி மன்றத்திற்கும் மத்திய அரசுக்கும், குறிப்பாக பிரதமர் அவர்களுக்கு நன்றியையும் பெரு மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் இல்லாதபோதும் காவிரி நீருக்காகப் பிரதமரை வற்புறுத்திய கலைஞர்
தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சியிலே இல்லாத நேரத்திலேகூட, 5.7.2002 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்குக் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனே கூட்ட வேண்டுமென்று கோரி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்.
“தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்ற உத்தரவைக் கண்காணிப்பதற்காகவே தங்களது (பிரதமரது) தலைமையில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல் அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டு காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், நடுவர் மன்ற ஆணையின்படி தண்ணீர் திறந்து விடப்படாததால், காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மிகுந்த துயருக்குள்ளாகியுள்ளனர். காவிரிப் பாசன விவசாயிகளின் இந்தத் துயரத்தை உணர்ந்து, பிரச்சனை ஓரளவேனும் குறைக்கப்பட தமிழகத்திற்கு 3 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விடும்படி கர்நாடக முதலமைச்சரைத் தாங்கள் கேட்டுக்கொண்டதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஆனால், தாங்கள் விடுத்த அந்தக் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்துள்ளது. எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் கூட்டத்தை விரைவில் கூட்டி நடுவர் மன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை வேண்டுகிறேன். -என்று எழுதியிருந்தார்.
தலைவர் கலைஞர் அவர்கள் 5.7.2002 அன்று பிரதமருக்கு காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று எழுதிய கடிதத்திற்கு 10.7.2002 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்கள் எழுதிய பதில் கடிதத்தில் அதைப்பற்றிக் கவனிப்பதாகக் கூறியிருந்தார். அவ்வாறே காவிரி நதி நீர் ஆணையம் கூட்டப்பட்டது.
மன்னிப்புக் கடிதம் எழுதிய ஜெயலலிதா
“பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதியது, கடுமையான ஆட்சேபத்துக்குரியது; அந்த அவதூறு கடிதத்தை நான்கு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும். -என்று தமிழக அரசு வழக்கறிஞரிடம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் வழக்கறிஞரான கே.கே.வேணுகோபால், நீதிபதிகளிடம், “பிரதமர் மீதும், அவரது தலைமையில் செயல்படும் காவிரி நதிநீர் ஆணையத்தின் மீதும் தமிழகம் முழு நம்பிக்கை வைத்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் மீது நம்பிக்கை தெரிவித்தும், பிரதமர் வாஜ்பாய்க்கு இதுதொடர்பாக எழுதிய கடிதத்தைத் திரும்பப் பெறுதற்காகவும் மீண்டும் ஒரு கடிதத்தை வெகுவிரைவில் பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதி அனுப்புவார்” என்றும் தெரிவித்தார். அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்டிப்புக்குப் பணிந்து, பிரதமருக்குத் தமது வருத்தத்தைத் தெரிவித்ததுடன், பிரதமர் மீது தனிப்பட்ட முறையில் தான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், காவேரி ஆணையத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார்.
கலைஞர் கர்நாடகத்தில் அணைகள் கட்டியதைத் தடுக்க வில்லையா?
கர்நாடக அரசு ஆறுகளில் அணைகள் கட்டுவதை தலைவர் கலைஞர் தடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை இன்று சிலர் மக்களிடம் பொய் சொல்கின்றனர். தி.மு.க. ஆட்சி அமைவதற்கு முன்பாகவே குறிப்பாக பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக வீற்றிருந்த காலத்திலேயே அவரது எதிர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அங்கு அணைகளைக் கட்டத் தொடங்கிவிட்டது. என்பதையும், கழக ஆட்சிக் காலத்தில் இந்த அணைகளைக் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் முறையிடப்பட்டிருந்தும் உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. என்பதையும் கலைஞரைக் குறைகூறுவோர் எண்ணிப் பார்த்திட வேண்டும்.