ஈழத் தமிழரும் கலைஞரும்
இலங்கையில், வாழையடி வாழையென வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அனைத்து அரசியல் உரிமைகளையும் பாதுகாப்பையும் பெற்று, தன்மானத்துடனும் நிம்ம்மதியுடனும் வாழ்வதற்கு உகந்த சூழ்நிலைகள் அங்கே உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக, திராவிட முன்னேற்ற கழகம் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து போராடி வருகிறது.
1956-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 29-ம் நாள், சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழகப் பொதுக்குழுவில் அறிஞர் அண்ணா அவர்களின் ஆணையை ஏற்று, இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை தலைவர் கலைஞர் அவர்கள் முன்மொழிந்தார். பொன்னம்பலனார் வழிமொழிந்தார்.
‘திமுக’வுக்குப் பெருமை
1976-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 31-ம் நாள், திராவிட முன்னேற்ற கழக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, ஃபிப்ரவரி 15-ம் நாள் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, “இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.
அதற்குத் தலைவர் கலைஞர் அவர்கள், “ஆட்சிக் கலைப்புக்கு அதுதான் காரணம் என்றால், அதைவிடப் பெருமையான ஒன்று திமுகவுக்கு இருக்க முடியாது என பதிலளித்தார்.
1981-ம் ஆண்டு, இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி கிடைத்த ஆகஸ்ட் 13-ம் நாள், “கொழும்புவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இலங்கையின் கிழக்கிலும் தெற்கிலும் கலவரங்கள் பரவி வருகின்றன என்று தெரிவிக்கின்றன. அங்குள்ள அரசே கலவரத்தை ஊக்குவிப்பதாகத் தோன்றுகிறது. வடகொழும்புவில் தமிழர் இல்லங்கள் தாக்கப்படுகின்றன. யாழ்ப்பானம் ரயில்கள் தாக்கப்படுகின்றன. அவற்றிலிருந்த தமிழ்ப் பயணிகளின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு, வண்டியை விட்டுத் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டுகிறேன்” என்று இந்தியப் பிரதமருக்கு தலைவர் கலைஞர் அவர்கள் தந்தி வழியே வேண்டுகோள் விடுத்தார்.
கலைஞர் கைது – தீக்குளிப்பு மரணங்கள்
1981-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள், இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்னையில் தலைவர் கலைஞர் அவர்கள் அன்றியிருந்த அ.தி.மு.க அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார். கலைஞர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து செப்டம்பர் 16-ம் நாள் கோவிலடி பிருந்தாவன், செப்டம்பர் 20-ம் நாள் திருச்சி மனோகரன், 22-ம் நாள் திருவாரூர் கிட்டு, பெருந்துறை முத்துப்பாண்டியன், 26-ம் நாள் கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகநாதன், சென்னையில் மேரி உள்ளிட்ட பலர் தீயிட்டுக்கொண்டு உயிர் இழந்தனர். மேலும் பலர் கடுமையான தீக்காயங்களோடு உயிர் மீண்டனர்.
1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் நாள், வெளிக்கடைச் சிறைச்சாலைக்குள் நுழைந்த சிங்களவர், சிறையில் இருந்த குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்ளிட்ட 35 தமிழர்களை படுகொலை செய்தனர். அப்போது, தலைநகர் சென்னையில் 7 மணி நேரத்துக்குள் 8 லட்சம் பேரைத் திரட்டி தி.மு.க நடத்திய பேரணி, உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிக் பார்க்கச் செய்தது.
ஈழத்துக்காக பதவி விலகல்
1983-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் நாள், மத்திய – மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்திட வலியுறுத்தி, தலைவர் கலைஞர் அவர்களும் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களும் தங்களது சட்டப் பேரவை உறுப்பினர் பொறுப்புகளை விட்டு விலகினர்.
டெசோ
1985-ம் ஆண்டு மே மாதம் 13-ம் நாள், இலங்கையில் தமிழ் ஈழ மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தமிழகத்தில் ‘தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்க வேண்டுமென்று முடிவெடுத்து, அந்த அமைப்பு உருவாகி அதன் தலைவராக கலைஞர் அவர்களும், உறுப்பினர்களாக பேராசியர், தமிழர் தலைவர் கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோர் இடம்பெற்றனர்.
1985 மே 16-ம் நாள், காஞ்சியில் நடைபெற்ற மறியல் போரில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்துகொண்டு கைதாகி, சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தத் தீர்ப்பைக் கேட்டுப் பொறுக்க முடியாத கழகக் காளை வேணு, பாலசுப்பிரமணியன் என்கிற பிராமண இளைஞர், தருமபுரி அப்புலு, வலங்கைமான் ரங்கன் போன்றோர் தீக்குளித்து உயிர் துறந்தனர்.
நாடு கடத்தல் ஆணை
1985 ஆகஸ்ட் 23-ம் நாள், சந்திரகாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த அன்றைய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சென்னையில் பேரணி நடத்தி, நாடு கடத்தும் செயல் நிறுத்தப்படாவிட்டால் போராட்டம் தொடருமென்று தி.மு.கழகம் மூலம் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக நாடு கடத்தல் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
1985-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 3-ம் நாள் கோவையிலும், 4-ம் நாள் திண்டுக்கல்லிலும், 5-ம் நாள் தூத்துக்குடியிலும், 6-ம் நாள் திருச்சியிலும், 7-ம் நாள் சேலத்திலும், 13-ம் நாள் வேலூரிலும் டெசோ அமைப்பின் சார்பில் மிகப்பெரிய பேரணிகளும் பொதுக்கூட்டங்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்டன.
1986-ம் ஆண்டு மே மாதம் 4-ம் நாள், டெசோ அமைப்பின் சார்பில் ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாடு’ ஒன்றை மதுரையில் தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தினார். அதில், அகில இந்தியத் தலைவர்களான வாய்பாய், என்.டி.ராமாராவ், ஹெச்.என்.பகுகுணா, ராமுவாலியா, உபேந்திரா, அப்துல் ரஷீத் காபூர், ஜஸ்வந்த் சிங், ராச்சய்யா, சுப்பிரமணியம் சுவாமி, உன்னிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அந்த மாநாட்டில் டி.யு.எல்.எஃப் சார்பாக அமிர்தலிங்கம், எல்.டி.டி.ஈ சார்பாக திலகர், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எஃப் சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பாக வரதராச பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அந்த மாநாட்டிலேயே பல்வேறு போராளி இயக்கப் பிரதிநிதிகளையும் தலைவர் கலைஞர் அழைத்து சகோதர யுத்தம் வேண்டாம் என்றும், அது நமது குறிக்கோளைக் குலைத்துவிடும் என்றும் உருக்கத்தோடு கேட்டுக்கொண்டார்.
பிறந்தநாள் நிதியுதவி
1986 ஜூன் 3-ம் நாள், தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் ரத்து செய்யப்பட்டு, அன்று உண்டியல் வழியே வசூலான 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதியை, ஈழத் தமிழ்ப் போராளி இயக்கங்களுக்குத் தலைவர் கலைஞர் பகிர்ந்தளித்தார்.
மீண்டும் 5 லட்சம் மக்கள் பேரணி
1987-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள், வடசென்னை அறிவகத்தில் தொடங்கி தந்தை பெரியார் சிலையருகில் நிறைவுற்ற ஐந்து லட்சம் மக்கள் கலந்துகொண்ட பேரணியில் தலைவர் கலைஞர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
1987 அக்டோபர் 16-ம் நாள், வீட்டுக் காவலில் இருந்த தளபதி கிட்டுவை காணச் சென்ற வைகோ, வீராசாமி, என்.வி.என்.சோமு ஆகியோர் கைது செய்யப்பட்டதற்காகத் தலைவர் கலைஞர் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டார். இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக எட்டு மாநிலங்களின் முதல் அமைச்சர்களிடமும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் ஆதரவு கேட்டு கலைஞர் அவர்கள் தந்தி அனுப்பினார்.
மனித சங்கிலி
1987 நவம்பர் 6-ம் நாள், சென்னையில் ‘ஈழத் தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ சார்பாக பல்வேறு கட்சியினர், தமிழ்ப் புலவர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள், மகளிர் கலந்துகொண்ட மனித சங்கிலியை தி.மு.க நடத்தியது.
ராஜீவ்காந்தியுடன் பேச்சுவார்த்தை
1989-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள், அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லியில் இரண்டு முறை சந்தித்து, ஈழத் தமிழர் பிரச்னை குறித்து முதலமைச்சர் என்ற முறையில் கலைஞர் அவர்கள் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
1989 ஜூன் 15-ம் நாள், சென்னை விமான நிலையத்தில் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களை சந்தித்து இலங்கைப் பிரச்னை தொடர்பாக தலைவர் கலைஞர் அவர்களும் முரசொலி மாறனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
1989 நவம்பர் 5 மற்றும் 6-ம் நாட்களில் தமிழகத்தில் பேசிய ராஜீவ்காந்தி, “இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் ஒத்துழைப்பு வழங்கி வரும் கழக அரசுக்கும் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கும் நன்றி” என்று கூறினார்.
ராணுவத்துக்கு வரவேற்பு இல்லை
1990-ம் ஆண்டு மார்ச் 30-ம் நாள், தமிழகச் சட்டப் பேரவையில் “இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை தமிழகம் வந்தபோது, முதலமைச்சராக இருந்த கலைஞர் ஏன் வரவேற்கச் செல்லவில்லை?” என்று கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு, இந்திய ராணுவம் இலங்கையில் எப்படி நடந்துகொண்டது என்பதைப் பற்றி 1988-ம் ஆண்டு பிரபாகரன் எழுதிய கடிதத்தைப் படித்துக் காட்டி, “இந்திய ராணுவத்தின் மீது கழகத்துக்கு அனைத்துவிதமான மரியாதையும் உண்டு. ஆனால்,இலங்கையில் அந்த ராணுவம் இலங்கைத் தமிழர்களை தாக்கி நசுக்கிட முயற்சித்தது என்பதால்தான் வரவேற்கச் செல்லவில்லை” என்று கூறினார். மேலும், “ராணுவம் மதிக்கத்தக்கது, மரியாதைக்குரியது. ஆனால், தவறு செய்யும்போது ராணுவத்தை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை” என்றும் விளக்கமளித்தார்.
ஈழ ஆதரவு – தி.மு.க அரசு கலைப்பு
1991-ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க அரசு நடந்துகொண்டது என்ற காரணம் கூறப்பட்டு, தலைவர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு கலைக்கப்பட்டது.
சட்டப் பேரவை தீர்மானம்
2008-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் நாள், தமிழக சட்டப் பேரவையில், “இலங்கையில் அமைதி ஏற்படுத்தப்படுவதற்காக அங்கே மோதலில் ஈடுபட்டு வரும் இரு பிரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையில் அமைதியை ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்காக பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என இப்பேரவை வலியுறுத்துகிறது” என்ற தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிந்து நிறைவேற்றி வைத்தார்.
அறிவாலய தீர்மானம்
2008-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் நாள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தலைவர் கலைஞர் அவர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிப் பிரதமருக்கும் திருமதி சோனியாகாந்தி அம்மையாருக்கும் அனுப்பி வைத்தார். இதன் அடிப்படையில், அன்றைய தி.மு.க அமைச்சர் டி.ஆர்.பாலுவை அழைத்துப் பேசிய பிரதமர், இலங்கைப் பிரச்னை குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்.
பிரதமருக்கு வேண்டுகோள்
2008 அக்டோபர் 6-ம் நாள் காலையில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, புதுடெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை மத்திய அரசு உடனடியாக அழைத்து, நிராயுதபாணியாக உள்ள இலங்கைத் தமிழர்களை கொல்வது குறித்து இந்தியாவின் மன வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டுமென்றும், இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையும் இனப்படுகொலையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் தலைவர் கலைஞர் கேட்டுக்கொண்டார்.
அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டம்
2008 அக்டோபர் 6-ம் நாள், சென்னை மயிலை மாங்கொல்லையில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து அனைத்துக் கட்சிகளின் சார்பில் பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், “இலங்கைத் தமிழர் பிரச்னையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தமிழர்களுக்காக இயக்கம் நடத்துகிறவர்களும், தமிழ் மக்களும் ஒரே வடிவில் ஒரே உணர்வில் நின்று இந்த ஆபத்துக்கு விடை காண்போம்” என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்தார்.
2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் நாள், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி இலங்கைத் தமிழர் பிரச்னைக்குறித்து தலைவர் கலைஞர் அவர்கள் விவாதித்து அவர்களின் கருத்தறிந்தார்.
பிரம்மாண்ட மனித சங்கிலி
2008 அக்டோபர் 24-ம் நாள், தலைநகர் சென்னையில் அதுவரை நடைபெறாத அளவுக்கு பிரம்மாண்டமான மனிதச் சங்கிலி ஒன்று இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்று நடைபெற்றது.
2008-ம் ஆண்டு நவம்பர் 12-ம் நாள், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் ஒன்றினை தலைவர் கலைஞர் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றினார்.
பிரதமருடன் சந்திப்பு
2008 டிசம்பர் 4-ம் நாள், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வேண்டுகோள் விடுத்ததுடன், மத்திய அமைச்சர் பிரனாப் முகர்ஜி அவர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
2008 டிசம்பர் 27-ம் நாள், தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெறற கழகப் பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ரூ.50 கோடி நிதியுதவி
தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக நிதி ஒன்று திரட்டப்பட்டு, அதில் 50 கோடி ரூபாய்க்கு மேல் சேர்ந்து, அந்தத் தொகையில் இருந்து உணவுப் பண்டங்கள், துணிகள், மருந்துப் பொருட்கள் மத்திய அரசின் உதவியோடு செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக வழங்கப்பட்டது.
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை
2009-ம் ஆண்டு ஃபிப்ரவரி 3-ம் நாள், தலைவர் கலைஞர் உடல் நலம் குன்றியிருந்த நிலையில்கூட இலங்கைப் பிரச்னை குறித்து கழகத்தின் செயற்குழுவில் நீண்ட நேரம் உரையாற்றினார். கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் இருந்தபோதே ‘இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளைக் கொண்டு அமைத்தார்.
2009 ஃபிப்ரவரி 21-ம் நாள், சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தி.மு.க இளைஞர் அணியின் சார்பில் இலங்கைப் பிரச்னைக்காக ‘இளைஞர் சங்கிலி’ நடத்தப்பட்டது.
2009 ஏப்ரல் 9-ம் நாள், சென்னையில் மகத்தான பேரணி நடைபெற்று, அதன் முடிவில் சேப்பாக்கத்தில் தலைவர் கலைஞர் உரையாற்றினார்.
வேலை நிறுத்தம்
2009 ஏப்ரல் 24-ம் நாள், தலைவர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
உண்ணா நோன்பு
2009 ஏப்ரல் 28-ம் நாள், அதிகாலை 5.45 மணியளவில் இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து, தலைவர் கலைஞர் அவர்கள் தனது உடல்நிலையைக்கூட கருத்தில் கொள்ளாமல் அண்ணா நினைவிடத்தில் உண்ணா நோன்பு மேற்கொண்டார்.
தொடர்ந்து போராடும் தி.மு.க
இலங்கையில் போர் முடிந்த பின்னரும் கழகம் வாளாவிருந்து விடவில்லை. இலங்கைப் போரில் ராஜபட்சே அரசு நடத்திய படுகொலைகள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பான போர்க் குற்றங்கள், தமிழ்ப் பெண்களின் மீது பாலியல் வன்முறை நடத்திக் கொன்றொழித்த மாபாதகங்கள், குழந்தைகள் – முதியோர் ஆகியோரை இரக்கம் சிறிதுமின்றி கொன்று குவித்தக் கொடுமைகள் ஆகியவற்றைக் கடுமையாகக் கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு இப்போதாவது நியாயம் கிடைத்திட வேண்டும், அமைதியான வாழ்வுக்கு உத்தரவாதம் வேண்டும் என்பதற்காகவும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து ஜனநாயக ரீதியாகப் போராடிக் கொண்டிருக்கிறது.
போர்க் குற்றங்களுக்கு தண்டனை தேவை
2011-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் நாள் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக, “இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, இலங்கைப்படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசுக்கு கோரிக்கை
2012-ம் ஆண்டு மார்ச் 1-ம் நாள், தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “கழகத்தின் நிலைப்பாடினை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவுபடுத்தி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிக்கக்கூடாது” என்று வலியுறுத்தியிருந்தார்.
‘அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற கழகக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வர்கள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து கழகத்தின் நிலைப்பாட்டினையும் உலகளாவிய தமிழ் மக்களின் உணர்வுகளையும் எடுத்துரைத்தார்.
இதையடுத்து, தலைவர் கலைஞர் அவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 12.03.2012 அன்று எழுதிய கடிதத்தில், “இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் குறித்து அனைத்துத் தரப்பினருடனும் தொடர்பு கொண்டுள்ளோம்” என்று உத்தரவாதமில்லாத ஒரு நிலையைக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பதிலில் திருப்தியடையாத கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி ஆகியோர், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இது குறித்துக் கூறும்போது, “பண்டித நேரு அவர்கள் தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப் பிரச்னையில் மேற்கொண்ட அணுகுமுறை, இந்திராகாந்தி அவர்கள் வங்கதேசப் பிரச்னையில் மேற்கொண்ட அணுகுமுறை ஆகியவற்றுக்கு மாறாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலில், ‘இலங்கை நமது அண்டை நாடு. அண்டை நாட்டின் பிரச்னைகளை நாம் புறக்கணித்துவிட முடியாது என்ற அளவுக்குத் தெரிவித்தது, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி நிலைகுலையச் செய்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தி.மு.க.வின் நிலைப்பாடு
அந்த வகையில் 2012 மார்ச் 20-ம் நாள் நடைபெற்ற தி.மு.க உயர்நிலை செயற்திட்டக் குழு கூட்டத்தில் இதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில், கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
தி.மு.க முன்வைத்த வேண்டுகோளை மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் உணர்வுபூர்வமான ஒட்டுமொத்த வேண்டுகோளை ஏற்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டுமென்று இந்த உயர்நிலை செயற்திட்டக் குழு மத்திய அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
ஈழம் – தலைவர் கலைஞரின் உரை
2012-ம் ஆண்டு, தலைமைக் கழக அறிவிப்பின்படி ‘சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில், மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்று சென்னைப் பெரவள்ளூரின் நடைபெற்றது. கூட்டத்தில் கலைஞர் அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் ஒரு பகுதி.
“நான், ஐந்தாண்டுகளுக்கு முன்பு செய்தியாளர்களிடத்தில் பேசும்போது, ‘உங்களுடைய நிறைவேறாத கனவு என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு நான, ‘இதுவரையில் நிறைவேறாமல் இருக்கின்ற கனவு, தமிழ் ஈழம்தான்’ என்று சொன்னேன். அது நிறைவேறாமல் போனதற்குப் பல காரணங்கள் உண்டு.உயிரையே துச்சமாக மதித்த விடுதலைப் போர் வீரர்கள், ஆயிரம் ஆயிரம் வீரர்கள் வீழ்ந்தும்கூட அது நிறைவேறாமல் போய்விட்டது. அதற்கான காரணங்களை ஆராய்ந்து புதிய குழப்பங்களை உருவாக்க விரும்பவில்லை. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கட்டும். ஆனால், தமிழன் தலை நிமிர்ந்து வாழவேண்டும். அதற்கு, பழைய நிலைமைகளை எல்லாம் மறந்து புதிய நிலைமைகளை உருவாக்குவோம். அந்த நம்பிக்கையிலேதான் தமிழ் ஈழம் வேண்டும் என்ற அந்தக் கனவு நிறைவேற வேண்டும் என்று நான் முரசொலியில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். சிலர் இதை எதிர்த்துப் பேசினாலும்கூட, அவர்களையும் நம் பக்கம் இழுப்பதற்கேற்ற வகையில் ஆதாரங்களை எடுத்து எழுதிக் கொண்டிருக்கிறேன், வழங்கிக் கொண்டிருக்கிறேன். தமிழ் ஈழத்துக்கு இன்றைய நாள் புதிய எழுச்சி, புதிய உருவகம் ஏற்படுத்துகின்ற ஒரு கால கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று கருதுகிறேன்.
நான் முதன்முதலில் சொன்னதைப்போல, இன்னும் எத்தனை ஆண்டுகளோ எனக்குத் தெரியாது. அதற்குள் மிச்சமிருக்கிற ஆண்டுகளில் தமிழ் ஈழத்துக்கான உரத்தை, அதற்கான பலத்தை, அதற்கான எழுச்சியை உருவாக்கிவிட்டுத்தான் உங்களிடமிருந்து அல்ல, இந்த உலகத்தைவிட்டே நான் விடைபெற விரும்புகிறேன். அத்தகைய எழுச்சி உருவாக, தமிழ் ஈழம் உருவாக, அமைதியான முறையில், அறவழியில், அண்ணா வழியில், அண்ணல் காந்தியடிகள் வழியில் நாம் போராட்டத்தை நடத்த வேண்டும். அந்த அறப்போராட்டம், தமிழ் ஈழத்தை நமக்குத் தருகின்ற போராட்டமாக, அமைதிப் போராட்டமாக அமையும்.
தமிழ் ஈழம் என்பது, ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வா அவர்கள் தலைமையில் உருவான கீதம். அந்தக் காலத்திலிருந்து அவரோடு இணைந்து திராவிட முன்னேற்ற கழகமும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நானும், நம்முடைய நண்பர்களும் தந்தை செல்வா அந்தக் குறிக்கோளுக்காக அன்றைக்குக் கொடியேற்றினாரோ, அந்தக் கொடி நிழலில் நின்று தமிழ் ஈழம் பெற, தமித் தமிழ் ஈழம் பெற நாம் பாடுபட வேண்டும். இது, இலங்கையில் உள்ள அதிபர்களின் காதுகளில் விழுந்து அவர்கள் இதற்கு மறுப்புரைக்கலாம். ஆதிக்கக்காரர்கள், ஆதிக்கத்தை அவ்வளவு சுலபமாக விட்டுவிடமாட்டார்கள். ஆனால், நாம் அந்த ஆதிக்கவாதிகளிடம் இருந்து விடுபட்டு நம்முடைய தமிழன் தமிழனாக, தமிழ் மொழிக்கு உரியவனாக வாழ்கின்ற அந்த விடுதலை அவனுக்குக் கிடைக்கிற வரையில் போராடுவோம்.
உங்களுக்கு நினைவிருக்கும். ஏற்கெனவே ‘டெசோ’ என்ற இயக்கத்தை நாம் நடத்தினோம். அந்த டெசோவை நாம் மீண்டும் தொடங்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்கு நீங்களெல்லாம் உங்களுடைய ஆதரவைத் தரவேண்டும். தி.மு.க.வின் துணை அமைப்பாக டெசோ இருந்து, அந்த டெசோவிலே நானும் நம்முடைய பேராசிரியரும் வீரமணி போன்றவர்களும் அங்கம் வகித்து, இன்னும் யார் யாரையெல்லாம் இணைத்துக்கொள்ள வேண்டுமோ அவர்களையெல்லாம் இணைத்துக்கொண்டு அந்த டெசோ பணியாற்றும், பாடுபடும், போராடும். அறவழியில் ஆக்கப்பூர்வமாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கும். அதற்கு உங்கள் அன்பான ஆதரவு தேவை.
இன்றைய கூட்டத்தில் எனக்கு இரண்டு லட்சியங்கள். ஒன்று, தமிழக சட்டப் பேரவையில் ஜனநாயகம் ஓங்க வேண்டும் என்பது. அது எப்போது என்று கேட்டால், இப்போதோ அல்லது மறுபடி நாம் ஆட்சிக்கு வரும்போதோ அதற்கு விடை காண வேண்டியவர்கள் நீங்கள். இரண்டாவது லட்சியம், தமிழ் ஈழம் பெறுவதற்கு இலங்கையில் உள்ளவர்கள் தங்களுடைய ஒப்புதலைத் தருவதற்கேற்ற வகையில் நாம் நம்முடைய சக்தியைத் திரட்ட வேண்டும். அதற்கு நம்முடைய மத்தியப் பேரரசும் ஆதரவை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை இந்த மாபெரும் மக்கள் சமுத்திரத்தில் நான் எடுத்துச் சொல்லி, உங்களுடைய அன்பான ஆதரவு தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ் ஈழத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்”