தமிழ் செம்மொழி அந்தஸ்து
செம்மொழி தமிழ்
1999 ஜனவரி 16-ம் நாள், சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர், “தமிழ் செம்மொழியா, இல்லையா? என்ற விவாதம், இனிமேலும் தேவை இல்லை. தமிழ்ச் செம்மொழிதான். நடுவண் அரசு அதை உடனடியாக அறிவிக்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
கலைஞர் வலியுறுத்தலுக்கு இணங்க, 2004-ம் ஆண்டுச் செப்டம்பர் 17-ம் நாள் நடைபெற்ற நடுவண் அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணை, 2004 அக்டோபர் 12-ம் நாள் வெளியிடப்பட்டது.
தொன்மை, தனித்தியங்கும் தன்மை; பொதுமைப் பண்பு; நடுவு நிலைமை; பல மொழிகட்குத் தாய்; பட்டறிவு வெளிப்பாடு; பிறமொழித் தாக்கமின்மை; இலக்கிய வளம், உயர் சிந்தனை; மொழியியல் கோட்பாடு போன்ற சிறப்புமிகு தகுதிகளைக் கொண்டது நம் தமிழ்மொழி.
பரிதிமாற் கலைஞர், பரிதி என்றால் சூரியன்; மால் என்றால் நாராயணன்; கலைஞர் என்றால் சாஸ்திரி,
அவர்தான் சூரிய நாராயண சாஸ்திரி. இவர் தன்னுடைய பெயரை பரிதிமாற் கலைஞர் என்று தமிழில் மாற்றிக் கொண்டார். உலகத்தில் 6 செம்மொழிகள் உண்டு. அதில் ஒன்றுதான் தமிழ். அந்த 6 மொழிகளில் உயர்த்தன்மை உடையது தமிழ்மொழி மட்டுமே என்பதை கண்டுபிடித்து முதன்முதலில் சொன்னவர்தான் இந்த பரிதிமாற் கலைஞர்.
தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. திமுகவின் மூதாதையார் தம் அமைப்பான நீதிக்கட்சி 1918 மார்ச் 30, 31 தேதிகளில் நடத்திய தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டிலேயே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
1918 மார்ச் 18-ம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டிற்காக கூடிய புலவர்கள் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி இருந்தனர்.
“உலகில் பிற நாட்டாரின் தாய்மொழியாய்த் தமிழ் இருந்திருக்குமே யானால் அது இந்நேரம் உலகப் பொது மொழியாய் அமைந்திருக்கும்” என்றார் நமது தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த அற்புதமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தலைவர் கலைஞர் அவர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.
தலைவர் கலைஞரது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 12.10.2004 அன்று தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஆணை பிறப்பித்தது. இந்திய மொழிகளிலேயே அதிகாரப்பூர்வமாக செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்மொழி தான். 30.6.2008 அன்று முதலமைச்சர் கலைஞர் சென்னை திருவல்லிகேணியில் செம்மொழி தமிழ் ஆய்வு மைய நிறுவனத்தினை திறந்து வைத்தார்கள்.
சேரனும் சோழனும் பாண்டியனும் புலவர் பெருமக்கள் பலரும் தமிழ்ச் சான்றோர்களும் தமிழை வளர்த்தார்கள். ஆனால் தலைவர் கலைஞர் அவர்களோ பரிதிமாற் கலைஞரின் குரலை புதுடெல்லி வரை ஒலிக்கச் செய்து தமிழுக்கு செம்மொழி என்ற மகுடத்தை சூட்டினார் என்றால் அது மிகையல்ல.
மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மையத்தில் செம்மொழி தமிழ் மையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மத்திய செம்மொழி ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவியதுடன் அதற்கென சென்னை பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கி தலைவர் கலைஞர் உத்தரவிட்டார். இந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட மத்திய அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கியது. 250 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அலுவலகம் கட்டவும் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தவும் அறிஞர்களுக்கென குடியிறுப்பு வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிட்டு அதற்கான மதிப்பீட்டினையும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து இப்போது முடங்கி கிடக்கிறது.
இந்நிறுவனத்தில் பட்டறிவுமிக்க சிறந்த அறிஞர்களைக் கொண்டு உரிய ஆய்வுகள் நடைபெற்று வந்தன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலெல்லாம் கருத்தரங்குகள் பல நடைபெற்று சங்க இலக்கியங்கள் புத்தெழுச்சிப் பெற்று மலர்ந்தன.
இதுவரை எட்டு உலகத் தமிழ் மாநாடுகளையும் ஒருசேர நடத்தியது போல் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உவக்க கோவை மாநகரில் 2010 ஜூன் திங்களில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திய பெருமை கலைஞருக்குண்டு. அத்துடன் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான செம்மொழிப் பூங்கா 14.11.2010-ல் திறந்து வைக்கப்பட்டது.
கட்டாயப் பாடம்
இன்றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கலைஞர் அவர்களே காரணம். அண்ணா வழியில் கலைஞர் அவர்களும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர். 1967-68-ம் ஆண்டு, இளங்கலை வகுப்பில் தமிழைப் பயிற்றுமொழியாக்கி ஆணை பிறப்பித்தார் அறிஞர் அண்ணா. அவரைத் தொடர்ந்து, 1969-70-ம் ஆண்டில் இளம் அறிவியல் வகுப்பில் தமிழை பயிற்றுமொழியாக்கி ஆணை பிறப்பித்த முதலமைச்சர் கலைஞர், தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கினார்.
மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ்
1996-ம் ஆண்டு, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழைப் பாடமொழியாக்கி ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் கலைஞர்.
2006-ம் ஆண்டு, அனைத்துப் பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை, தமிழை ஒரு பாடமாகக் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றினார்.
தமிழில் பொறியியல் கல்வி
இந்தியாவிலேயே முதன்முறையாக, அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில், கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ் வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து ஆணையிட்டவர் தலைவர் கலைஞர்.
அனைத்துக் கல்லூரிகளும் choice based credit System எனப்படும், விருப்பம் சார்ந்த தகுதிப் புள்ளி முறையை, 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் முதலமைச்சர் கலைஞர். இதன்படி, பட்டப்படிப்பில் தமிழை முதல் பிரிவில் எடுத்துப் படிக்காத மாணவர்கள், நான்காம் பிரிவில் தமிழை ஒரு பாடமாகக் கட்டாயம் படித்தாக வேண்டும். தமிழ்நாட்டில், தமிழைப் படிக்காமல் பட்டம் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையைக் கொண்டுவந்தவர் தலைவர் கலைஞர்.
அரசுப் பணியில் தமிழுக்கு ஒதுக்கீடு
2010-ம் ஆண்டுச் செப்டம்பர் 30-ம் நாள், குறிப்பிட்ட அரசுப் பணிகளுக்குத் தேவையான அடிப்படைக் கல்வித் தகுதியில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இடங்கள் ஒதுக்கி ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் கலைஞர்.
அகரமுதலி
1974-ம் ஆண்டு அன்றைய கழக அரசால் “செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்” நிறுவப்பட்டு, மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர் அவர்கள் அதன் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1974 முதல் 1980 வரை முழுமையாக உழைத்தும் பாவாணர் அவர்களால் “ஆசைமொழி”வரைதான் எழுத முடிந்தது. 1981-ம் ஆண்டு, பாவாணர் மறைந்தார்.
அதன்பின் 1985 ஜனவரியில், அவர் உருவாக்கிய முதல் தொகுதி நூல் வெளியிடப்பட்டது. 1989-ம் ஆண்டு, அகரமுதலித் திட்டத்துக்கு கலைஞர் அளித்த ஊக்கம் காரணமாக, இரண்டாம் தொகுதி உருவாக்கப்பட்டது. 1991 ஜனவரியில் தி.மு.க அரசு கலைக்கப்பட்டதன் காரணமாக, இப்பணியில் தொய்வு ஏற்பட்டு, பின்னர் 8.5.1992-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
13.5.1996-ல் கழக அரசு அமைந்த பிறகு, அகரமுதலி உருவாக்கும் திட்டம் முடுக்கிவிடப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மூன்றாம் பாகம் உருவாக்கப்பட்டு, 25.2.1997-ல் வெளியிடப்பட்டது. “அ” முதல் “ஒள” வரையிலான சொற்கள் தொகுக்கப்பட்டு நூல்களாகிவிட்டன.
இணையத்தில் தமிழ்
1999 ஃபிப்ரவரி மாதம், முதலமைச்சர் கலைஞரால், உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டது.
இணையத்தில் தலைவர் கலைஞர் அனுப்பிய தமிழ் வாழ்த்துச் செய்தியே, முதல் வாழ்த்துச் செய்தியாகும்.
ஊர்திகளில் தமிழ்
ஊர்திகளில் காணப்படும் பதிவெண் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே
பயன்படுத்தப்பட்டு வந்தன. அவற்றைத் தமிழில் எழுதிக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிட்டவர் முதலமைச்சர் கலைஞர்.
சென்னை பெயர் மாற்றம்
30.9.1996-ம் ஆண்டு, செப்டம்பர் 30-ம் நாள், “மெட்ராஸ்” என்னும் பெயரை “சென்னை” என மாற்றி ஆணையிட்டவர் முதலமைச்சர் கலைஞர்.
தமிழில் மருத்துவம்
ஏழை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், மருந்துச் சீட்டுகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்று அரசு ஆணை
பிறப்பித்தவர் முதலமைச்சர் கலைஞர். இதன் காரணமாக, அரசு வெளியிடும் மாத்திரைகளுக்கான உறைகளில் தமிழ் இடம் பெறத் தொடங்கியது.
தொடர்வண்டிகளில் தமிழ்
முதலமைச்சர் கலைஞர் எடுத்த முயற்சிகளின் விளைவாகவே தொடர்வண்டிகளில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டன.
தேர்வாணையம்
வினாத்தாள்கள் அனைத்தும், முதலில் தமிழும், அடுத்து ஆங்கிலத்திலும் அமைய ஏற்பாடு செய்தவர் தலைவர் கலைஞர்.