இளமைப் பருவம் – கல்வி
திருக்குவளை கிராமத்தில் ஆரம்பக்கல்வியும், பின்னர் திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற கலைஞர், பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை மற்றும் சொற்பொழிவு ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு கொண்டவராக விளங்கினார்.
திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவராக கலைஞர் சேர்ந்ததே வியப்பான நிகழ்வு. வயதின் காரணமாக அனுமதி மறுக்கப்பட, பள்ளியில் இடமளிக்கவில்லை என்றால் எதிரே இருக்கும் குளத்தில் வீழ்வேன் என்று தலைமை ஆசிரியரிடம் போராடி பள்ளியில் சேர்ந்தார். அந்தப் போராட்ட குணமே கலைஞரின் அடையாளமாக இறுதிவரை நிலைத்தது. 1939-ம் ஆண்டு, கலைஞர் எட்டாம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில், ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசினார். இதுவே, கலைஞரின் முதல் மேடைப் பேச்சு.
விளையாட்டிலும் கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. ஹாக்கி விளையாட்டு அவருக்கு மிகவும் பிடிக்கும். திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளி ஹாக்கி அணியில் கலைஞர் பங்கு பெற்றிருந்தார். கிரிக்கெட்டும் கலைஞருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு. பிற்காலத்தில் அரசியல் பணிகளின் பரபரப்புக்கு இடையிலும் கிரிக்கெட் போட்டிகளை தவறாமல் தொடர்ந்து கவனித்து வந்தார்.