முதலாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்
சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த இராஜாஜி, 1938-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் நாள், பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கி ஆணை வெளியிட்டார். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடிக்க இதுவே காரணமாக அமைந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்து நீதிக்கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்துகொண்டிருந்த கலைஞருக்கு, 14 வயது. தன்னுடைய கையில் தமிழ்க் கொடியை பிடித்துக்கொண்டு, இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்டார். “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” என்று முழக்கமிட்டபடி சென்ற கலைஞர், மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது, இந்தி ஆசிரியரிடம் அடி வாங்கும் நிலை ஏற்பட்டது. அடி வாங்கினாலும் தமிழ் ஆர்வம் குறையாத கலைஞர், தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.