தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
பெரும் புலவரும் தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவருமான மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாண சுந்தரனார், தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியம் பிள்ளை, சைவ பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் எல்லாம் கலந்து கொண்ட கூட்டத்தில்,
“திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும், அதுமுதல் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாக பின்பற்றுவது என்றும், வழக்கத்திலுள்ள ஆங்கில ஆண்டுடன் 31 ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டுவரும் என்றும், அதனையே தமிழாண்டு என கொண்டாடுவது என்றும்” முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதற்குப் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் நாவலர் சோமசுந்தர பாரதியார், தந்தை பெரியார், சுரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.போ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலை அடிகளார், பி.டி.ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக்கவிஞர் அகில இந்திய தமிழர் மாநாட்டில்,
“தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும்,
பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும்”அறிவிக்கப்பட்டது.
மேற்கண்ட தமிழ் அறிஞர் பெருமக்கள் எடுத்த முடிவுகளை முதலமைச்சர் பொறுப்பிலிருந்த முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்கட்டமாக 1971-ம் ஆண்டு முதல் தமிழக அரசு நாட்குறிப்பிலும், 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசு அரசிதழிலும் வெளியிட்டு நடைமுறைப்படுத்தினார்கள்.
அடுத்த கட்டமாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள், “தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு தொடக்கம் “ என்பதற்கான மசோதா ஒன்றினை 1-2-2008 அன்று சட்டசபையில் தாக்கல் செய்து அனைத்து கட்சியினரும் ஏற்கும் வண்ணம் சட்டமாக்கி சரித்திர சாதனை ஒன்றை நிகழ்த்தினார். இதனை அனைத்து தமிழ் அறிஞர்களும், தமிழக மக்களும் வரவேற்று மகிழ்ந்தனர்.