பிறப்பு
நாகப்பட்டினம் மாவட்டத்தில் `திருக்கோளிலி‘ என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட திருக்குவளை கிராமத்தில், 1924-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி, நாட்டுவைத்தியர் திரு. முத்துவேலர் அவர்களுக்கும் அவரது இல்லறத்துணைவியார் திருமதி அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தார் கலைஞர் என்று உலகம் போற்றும் கருணாநிதி. அவருக்கு முன் பிறந்த தமக்கையர் இருவர், பெரிய நாயகம் மற்றும் சண்முகவடிவு.
பெற்றோரும் தமக்கையரும் சீராட்டி சீர்மிகு அன்பில் பாராட்டி வளர்த்ததில் போராட்ட குணமும், எதையும் ஆராய்ந்து கேள்வியெழுப்பும் பகுத்தறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாத சுயமரியாதை மிக்கவராகவும் வளர்ந்தார். சிறுவயது முதலே மான உணர்ச்சியும், கொண்ட கொள்கையில் பிடிவாதம் மிக்கவருமான கலைஞர், தந்தையார் ஏற்பாடு செய்த இசைப்பயிற்சி வகுப்பில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வை கண்டு இனி இசை வகுப்புக்கு செல்வதில்லை என்று தீர்மானமாக தன் தந்தையாரிடம் தெரிவித்ததை தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.