முரசொலி
1942-ம் ஆண்டு, அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ ஏட்டில், கலைஞர் எழுதிய ‘இளமைப்பலி’ என்ற படைப்பு வெளியானது. அப்படைப்பு அண்ணாவை பெரிதும் கவர, திருவாரூரில் ஒரு விழாவுக்காக சென்றிருந்த அவர், கலைஞரை அழைத்துப் பாராட்டு தெரிவித்தார். இதனால் உற்சாகமடைந்த கலைஞர், முன்பைவிடத் தீவிரமாக செயல்படத் தொடங்கினார்.
துண்டுப் பிரசுரங்கள், வெளியீடுகள் மூலம் பிரசாரம் செய்து வந்த கலைஞர், தன் பரப்புரைக்கென ஒரு அச்சிதழ் தொடங்கும் தேவையை உணர்ந்து, 1942 ஆகஸ்ட் மாதம் ‘முரசொலி’ இதழைத் தொடங்கினார். தொடக்கத்தில் வார இதழாக வெளிவந்த முரசொலி, 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாளேடாக மாற்றப்பட்டது. அதில், ‘சேரன்’, ‘மறவன் குரல்’ போன்ற பெயர்களில் அனல் தெரிக்கும் கட்டுரைகளை கலைஞர் எழுதினார். இதுவே, பின்னர் உடன்பிறப்புகளுக்கான கடிதமாக மாறியது. உடன்பிறப்புகளுக்கு எழுதும் கடிதம், திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
“கடிதங்கள் மூலம் கருத்துகளைச் சொல்லி, அதைப் படிக்கும் ஒவ்வொருவரையும் அந்தக் கருத்துகளோடு தனிப்பட்ட முறையில் ஈடுபாடு கொள்ளச்செய்வதில் நேரு, மு.வரதராசனார் போன்ற அறிஞர்கள் முன்னோடிகள். அண்ணா இருந்தபோது ‘தம்பிக்கு…’ என விளித்து, வாரத்துக்கு ஒரு கடிதம் எழுதுவார். அப்போதே நான் ‘அன்பு நண்பா…’ என்று அழைக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறேன். அப்படிப் பார்த்தால், கிட்டத்தட்ட 1965-ல் இருந்து உடன்பிறப்புக் கடிதங்கள் எழுதி வந்திருக்கிறேன். 1968-ல் இருந்து எழுதப்பட்ட எனது உடன்பிறப்புக் கடிதங்கள் புத்தமாகத் தொகுக்கப்பட்டு, இதுவரை பன்னிரண்டு தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. ‘நண்பா’ என்ற வார்த்தையிலிருந்து ‘உடன்பிறப்பே’ என்ற வார்த்தைக்கு மாறியதன் காரணம், அது இருபாலருக்கும் பொதுவான வார்த்தை என்பதால்தான். மற்றபடி, பாச உணர்வோடு கழகத் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் பிணைப்புப் பணியை, இந்த உடன்பிறப்புக் கடிதங்கள் செய்கின்றன என்றால், அது மிகையில்லை.” என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் கலைஞர்.