திரு. வி.நாராயணசாமி
முதலமைச்சர் – புதுச்சேரி மாநிலம்
செம்மொழியாக்கிய கலைஞர்
தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், அவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றவன் நான். அவரது நீண்ட நாள் கனவு தமிழைச் செம்மொழியாக ஆக்க வேண்டும் என்பது தான். அதற்காக அவர் பட்டபாடு – அதற்கு உறுதுணையாக இருந்த அன்னை சோனியா காந்தி அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். டாக்டர் மன்மோகன்சிங் அவர்களிடம் சொல்லி அன்னை சோனியா காந்தி அவர்கள் தமிழைச் செம்மொழியாக ஆக்குவதற்குக் கலைஞர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
கலைஞர் அவர்களுக்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு; அவர் பேச்சாளராக இருந்த காலத்தில் இருந்து, முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து புதுச்சேரி மாநில மக்களின் மீது பாசமும் பற்றும் வைத்திருந்தார்கள்.
அதனால் தான் நாங்கள் புதுச்சேரி மாநிலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்த அன்றே புதுச்சேரியில் கலைஞர் அவர்களின் வெண்கலச்சிலை அமைப்போம் என்று சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றினோம். அது மட்டு மல்ல! கலைஞர் அவர்களுக்குப் புதுச்சேரி பல்கலைக் கழகத்திலே ஓர் இருக்கையை அமைக்கவேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து அதையும் நிறைவேற்றி இருக்கிறோம். மேலும், கலைஞர் அவர்களின் பெயராலே மேற்படிப்புப்பட்ட மையத்தைக் காரைக்காலில் நாங்கள் துவங்கவிருக்கிறோம்.
நான்காவதாக, புதுச்சேரி காரைக்காலில் ஒரு சாலைக்கு டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரைச் சூட்டிப் புகழ் சேர்த்திருக்கிறோம். எங்களைப் பார்த்தாவது தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். டாக்டர் கலைஞர் அவர்களை எப்படிக் கௌரவிக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.