பேரறிஞர் அண்ணா
தம்பி கருணாநிதியினுடைய ஆற்றல் பற்றியும், ஆற்றல் காரணமாகப் பெற்ற வெற்றிகள்பற்றியும், பெற்ற வெற்றிகளெல்லாம் நாட்டு முன்னேற்றத்துக்குப் பயன்பட்டன என்பது பற்றியும் அந்த ஆற்றலும் வெற்றியும் நாட்டுக்கு இனியும் நல்ல முறையில் பயன்படும் என்பது பற்றியும், நண்பர்கள்பலர் எடுத்துச் சொல்லக் கேட்பதில் எனக்கு மிகப்பெருமிதம் உண்டாகும் என்பதில் யாருக்கும் ஐயப்பாடில்லை!
கருணாநிதியின் எழுத்து வல்லமை – பேச்சு வல்லமை – நாடக நூல்களை எழுதிய வல்லமை- நாடகங்களில் நடித்த திறமை இவைகள் ஒவ்வொன்றையும் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.
கருணாநிதி இத்தகைய திறமைகளைப் பெற்றிருப்பது எவ்விதம் என்பதை உணர்ந்தால்தான்இந்தப் பாராட்டு விழாவின் உட்கருத்து புரியும். கருணாநியைப் போல இந்தத் திறமைகளைப் பெறவேண்டும் என்பது மட்டுமல்ல; அந்தத்திறமைகளை அவர் எப்படிப் பெற்றார் என்பதைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும்.
ஒரு நாளைக்குக் கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதே அவருக்குத் தெரியாமல் அவர் உழைக்கிறார். அதை கருத்தில் கொண்டால், இந்தத் திறமை பெற்றதன் அடிப்படை உழைப்பு என்பதை உணர்வீர்கள். உழைக்காமல் இந்தத் திறமை வந்துவிடவில்லை!