திரு. பினராயி விஜயன்
முதலமைச்சர் – கேரளா
தாய் – தாய் நாடு – தாய் மொழி – கலைஞர்
இந்திய அரசியலில் முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடிய அளவிற்கு முக்கியப் பங்காற்றிய கலைஞரின் மறைவால் நாம் ஒரு வலுவான தலைவரை இழந்து நிற்கிறோம்.மற்ற தலைவர்களைப் போல் அவரைப் பற்றிப் பேசிவிட முடியாது. கலைஞரைப் பற்றி பேசுவது என்பதே ஒரு சவால் நிறைந்த பணியாகும். காரணம், பல்வேறு துறைகளில் கலைஞர் ஆற்றியுள்ள பங்களிப்புகளை ஒற்றை உரையில் அடக்கிவிடமுடியாது.
அவர் ஈடுபடாத துறைகளே இல்லை எனலாம். இலக்கியமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், திரைப்படத் துறையாக இருந்தாலும், திராவிடக் கொள்கை களைப் பரப்புவதாக இருந்தாலும், மொழி குறித்ததாக இருந்தாலும் அவர் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைப் படைத்துச் சென்றுள்ளார்.
தமிழ்மொழியை அவர் மிகவும் விரும்பினார். சாமானிய மக்களுக்கு அவர் ஆற்றியுள்ள பணிகள் என்றென்றும் நினைவு கூரப்படும். மொழிக்காக அவர் நடத்திய போராட்டங்களால் ஒரு தலைமுறையே அந்த மொழியைப் படிக்கவும் பேசவும் எழுதவும் ஏன் அதில் சிந்திக்கவும் கற்றுக் கொண்டது.
கலைஞர் ஒரு கலை வித்தகர். எனவேதான், அவரது ஒவ்வொரு எழுத்தும் ஓவியம் போல் இருக்கும். கட்டுரையானாலும், நாடகமானாலும் திரைப்பட வசனமாக இருந்தாலும் அதில் அவர் ஏற்றுக் கொண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர் களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரது சிந்தனைகளையும் கருத்துகளையும் இணைத்திருப்பார். அந்தத் தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் அந்தக் கொள்கைகளை மேலும் மக்களிடம் பரவச்செய்யும் பணியில் அவர் ஈடுபட்டார்.
பொதுவாக அரசியல்வாதிகளை மக்கள் சில ஆண்டுகள் வரைதான் நினைவில் வைத்திருப்பர்.ஆனால், கலைஞர் போன்றவர்கள் தமிழ் மொழிக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பிற்காக அந்த மொழியைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இவரைப் பற்றி நினைக்க வேண்டி யிருக்கும். தமிழ் மொழி உள்ளவரை கலைஞரும் இருப்பார். அவர் தமது தாயார், தமது தாய்நாடு, தமது தாய்மொழி எனும் மூன்று தாய்மார்களையும் எப்போதும் விரும்பினார்.
அதே போல, அவர் பத்திரிகைத் துறையில் ஆசிரியராகவும் சிறப்பாகப் பணியாற்றினார். தமது மாணவப் பருவ காலத்தில் கையெழுத்துப் பிரதியை நடத்தியதால் – கிடைத்த அனுபவத்தால்தான் பிற்காலத்தில் அவர் ‘முரசொலி’ என்ற நாளிதழைச் சிறப்பாக நடத்த முடிந்தது. அவர் ‘முரசொலி’யைத் தமது முதலாவது குழந்தைபோல் வளர்த்தார். அவர் எந்தப்பணியை எடுத்தாலும் அக்கறையுடனும் மிகுந்த ஆர்வத்துடனும் கடமையுணர்வுடனும் செய்து முடித்தார்.
கலைஞர் எப்போதும் தனியாக பொருளாதார வளர்ச்சி பற்றி மட்டும் பேசியது இல்லை. சமூகப் பொருளாதார முன்னேற்றம் குறித்தே பேசினார். அவரது சிந்தனையில் உதித்த உழவர் சந்தை, குடிசை மாற்று வாரியம், தொழில் வளர்ச்சியைப் பரவலாக்கியது ஆகியவற்றின் மூலமாகச் சமமான சமூகத்தை உருவாக்க அரசியலில் புதிய பாதையைத் தோற்றுவித்தார்.
அவர் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் இவற்றை அமல்படுத்தினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவர் அளித்த முக்கியத்துவத்திற்காக அவர் என்றென்றும் நினைவு கூரப்படுவார். எழுத்தாளராகவும் அரசியல் தலைவராகவும் அறியப்படும் கலைஞர் அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே சாதிய ரீதியிலான பாகுபாட்டிற்கு எதிராகப் போராடினார்.
அதோடு மட்டுமல்லாமல் பெண் அதிகாரமயமாக்கலுக்காக அவர் ஆற்றிய பணிகளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. 1989-ஆம் ஆண்டு, இந்தியாவிலேயே பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உரிமை உண்டு என்ற சட்டத்தை இயற்றினார். அவர் இதற்காகச் சட்டம் கொண்டு வந்து 16 ஆண்டுகள் கழித்தே மத்திய அரசு, அதுபோன்ற சட்டத்தைக் கொண்டு வந்தது.
அவர் நடத்திய மற்றொரு போராட்டம் திருநங்கை சமூகத்தினருக்காக. அனைத்து மாநில அரசுகளும் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடுவதற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் அவர்களுக்காகத் தனி நலவாரியத்தைக் கலைஞர் ஏற்படுத்திவிட்டார்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்காகத் தனி அடையாள அட்டையை வழங்கி அவர்கள் ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றைப் பெறமுடியும் என்ற நிலையை உருவாக்கியதற்காக இந்த விஷயத்தில் உலகில் தமிழகம் முதன்மையான இடத்தை அடையக் காரணமாக இருந்தார்.
திரைப்படத்துறையில் தமது பேனாவின் மூலமாக மாறுபட்ட கருத்துகளை விதைத்து தமிழ்த் திரைப்பட உலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியவரும் அவரே. அவரது திரைப்படங்களில் முற்போக்கான கதாபாத்திரங்கள், உலகில் உள்ள உண்மையான பிரச்சினைகளைப் பேசவைத்தது. ஆவேசமூட்டும் ஆவர் வசனங்களுக்கு நிகராக எழுதக்கூடியவர்கள் இதுவரை எவரும் இல்லை.
ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த அவர், நாட்டில் மிகச்சிறந்த நிர்வாகத்தை வழங்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். மாநில அரசுகளின் உரிமைக்காகவும், மத்திய மாநில உறவுகளை மாற்றியமைக்கவும் கலைஞர் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் மக்களுக்காக அவர் பாடுபட்டதால்தான், அவரது எதிரிகளிடத்திலும் மரியாதைமிக்க தலைவராகத் திகழ்ந்தார்.
கலைஞர் சமூக நீதியின் காவலர் மட்டுமல்லர்; சோசலிசக் குறிக்கோள்களைக் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார். தமிழகத்தை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தவேண்டும் என்பதே அவரது பெரும் கனவாக இருந்தது. தமது கனவை நனவாக்குவதற்காகத் தமிழ் மொழி, தமிழ்மக்கள் ஆகியோரது வளர்ச்சிக்காக ஓய்வில்லாமல் பணியாற்றினார். மக்களுக்காக இந்தச் சாதனைகளைப் படைப்பதற்காக அவர் எந்த ஒரு நிலைமையையும் எதிர்கொள்ளக் கூடியவராகத் திகழ்ந்தார்.
நான் என்னுடைய உரையை முடிக்கும் முன்னர், கலைஞர் எப்போதும் விரும்பிய வாசகத்தைச் சொல்லிவிட்டு விடை பெறலாம் என்று நினைக்கிறேன். ‘ஓய்வில்லாமல் உழைத்தவன் இங்கே ஓய்வுகொண்டிருக்கிறான்’ என்பதே அந்த வாசகம். இப்படியாக அவர் இறுதியில் அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.