திரு. ராகுல் காந்தி
தலைவர் – அகில இந்திய காங்கிரஸ் கட்சி
தமிழ் மக்களின் குரல்
ஒரு மிகப் பெரும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுடைய நினைவைப் போற்றுவதற்காக இங்கே நாம் அனைவரும் கூடியிருக்கிறோம்.
கலைஞர் அவர்கள் ஒரு சாதாரணமான அரசியல்வாதி அல்ல; அவர் தமிழ் மக்களின்
குரலாக இருந்தார். தமிழ் மக்களின் விழியாக இருந்தார். ஒவ்வொரு அரசியல் தலைவர்களிலேயும், ஒவ்வொரு அரசியல்வாதிகளிலேயும் இரு பக்கங்கள் இருக்கும். ஒன்று மக்களின் குரலைப் பிரதிபலிப்பதாக இருக்கும். மற்றொன்று, அவர்களின் குரல் மக்களுக்காகப் பிரதிபலிப்பதாக இருக்கும். கலைஞர் அவர்களை நாம் இன்று பெருமைப்படுத்தியிருக்கிறோம். ஏனென்றால், கலைஞர் பரிபூரணமாக ஒட்டு மொத்தமாகத் தமிழ் மக்களின் குரலாகவே ஒலித்தவர்.
மக்களுக்காக வாழ்ந்தவர், மக்களின் குரலாகவே ஒலித்தவர். மக்களின் வலியை, கஷ்டத்தை தம் கஷ்டமாக நினைத்தவர், மக்களின் மகிழ்ச்சியை தம் மகிழ்ச்சியாக எண்ணி உழைத்த தலைவர் கலைஞர் அவர்கள்! தலைவர் கலைஞர் அவர்களின் – முழு வாழ்நாளையும் எடுத்துப் பார்த்தால், தமது வாழ்நாள் முழுவதையுமே தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட தலைவராக இருந்தவர் கலைஞர் அவர்கள்.
நீங்கள் எல்லோரும் கலைஞரை நினைவிலே கொண்டிருக்கிறீர்கள். சில பேர் கலைஞரை நேரிலே பார்த்திருப்பீர்கள். நான் கலைஞர் அவர்களை இரண்டாவது முறையாகச் சந்தித்ததை இப்பொழுதும் எனது நினைவில் வைத்திருக்கிறேன்.
நான் கலைஞர் அவர்களின் இல்லத்துக்கு, அதற்கு முன்பு சென்றதில்லை. நான் முதன்முறையாக கலைஞர் அவர்களின் வீட்டிற்குச் சென்றபோது, ஒரு பெரிய வீட்டில் கலைஞர் இருப்பார். ஏராளமான பெரிய பெரிய பொருட்கள் இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளே முதன் முறையாகச் சென்றேன். பலப் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்ற ஒரு பெரிய தலைவருடைய வீடு, சந்திரபாபு நாயுடு அவர்கள் சொன்னதைப் போல நான் நினைத்திருந்தேன்; பெரிய வீடாக இருக்கும் என்று கற்பனையில் இருந்தேன். நான் வீட்டிற்குள் சென்றவுடன் ஆச்சரியப்பட்டேன். அவருடைய எளிமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றை, அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்தபோது பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.
நான் ஒரு இளைஞனாக அவரைப் பார்த்தபோது பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த ஒரு மிகப் பெரிய தலைவருடைய எளிமை, அவருடைய நாணயம், அவருடைய அகங்காரம் இல்லாத அந்த நிலையை நான் பார்த்தபோது உள்ளபடியே மிகவும் ஆச்சரியப்பட்டேன். இளைஞனான நான் பெருமைப்பட்டேன். ஓர் இளம் அரசியல் தலைவராகச் சென்றபோது எனக்கு அது மிகப் பெரும் உந்துதலாக வழிகாட்டுதலாக அந்தச் சந்திப்பு எனக்கு அமைந்திருந்தது. நான் கலைஞர் அவர்களைச் சந்தித்ததை மட்டும் நினைவிலே கொள்ளவில்லை. எனக்கு அவர் மிகப் பெரிய வழிகாட்டுதலை பின்பற்றக் கூடிய ஒரு தலைமையை அவர் எனக்குக் காட்டிச் சென்றதை நான் நினைத்துப் பார்க்கிறேன்; ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்.
மக்களின் குரலைப் பாதுகாப்பவராக, இங்கு இருக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டங்களைப் பாதுகாப்பவராக கலைஞர் அவர்களை நான் பார்க்கிறேன். இப்போது தமிழ்நாட்டில் ஓர் அரசாங்கம் இருக்கிறது. தமிழ்க் கலாச்சாரத்தை, தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நாட்டில் இருக்கின்ற அனைத்து அமைப்பு களையும் நிர்வாகத்தையும் அழிக்கக் கூடிய ஓர் அரசாங்கமாக இப்போது இருக்கின்ற அரசாங்கத்தை நான் பார்க்கிறேன்.
மத்தியில் இப்போது ஓர் அரசாங்கம் இருக்கிறது. தாங்கள் நினைக்கின்ற காரியங்களை எல்லாம் நிறைவேற்றக் கூடிய மனோநிலையில் இருக்கிற அரசாங்கமாக இருக்கிறது. கோடானு கோடி மக்களுடைய குரல்களை மதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிற அரசாங்கமாக, இந்த அரசாங்கம் இருக்கிறது. இந்த நாட்டில் இருக்கின்ற பல்வேறு விதமான மொழிகளை, பண்பாடு, கலாச்சாரத்தை மதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கின்ற ஓர் அரசாங்கமாக இருக்கிறது, இந்த அரசாங்கம்.
உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி போன்ற சுய அதிகாரங்கள் கொண்ட பல்வேறு அமைப்புகளை அழித்து ஒழிப்பதை ஒருகாலத்திலேயும் நாம் ஏற்கப் போவதில்லை.நாம் ஒன்றுபடப் போகிறோம், ஒன்றுபட்டு இந்த நாட்டுக்கான காரியத்தைச் செய்ய இருக்கிறோம், செய்வோம்.
இங்கே நான் வந்தது எனக்கு மிகப் பெரிய பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது. அதிலும் மிகப் பெரிய தலைவரான கலைஞர் அவர்களுடைய சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு அவரைப் பற்றிப் பேசியதைக் கவுரவமாக, பெருமையாக நான் கருதுகிறேன். ஏனென்றால், நான் கலைஞர் அவர்களைப் பற்றிப் பேசுகிறபோது, தமிழ் மக்களுடைய பெருமையை, தமிழ் மக்களுடைய கலாச்சாரத்தை, தமிழ் மக்களுடைய வரலாற்றை, தமிழ் மக்களின் பண்பாட்டைப் பேசுவதாகக் கருதுகிறேன். நான் கலைஞர் அவர்களைப் பற்றி நினைக்கிறபோது கலைஞர், தமிழக மக்களுடைய குரலாக, ஒலியாக இருந்ததை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரைப் பற்றிப் பெருமையடைகிறேன்.