திரு. சந்திரபாபு நாயுடு
முதலமைச்சர் – ஆந்திரா
கூட்டாட்சியின் நம்பிக்கை நட்சத்திரம்
என் பாரதமே பெருமை கொள்ளும் நாள் இது. சென்னைக் கடலலைகள் மகிழ்ச்சி கொள்ளும் தருணம் இது. இந்திய நாட்டின் மூத்த அரசியல்வாதி கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையைச் சென்னை மாநகரில் திறந்து வைத்துள்ளோம். இம்மாபெரும் விழாவில் நான் பங்கு கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
கலைஞர் அவர்கள் 13 முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தி.மு.க.வின் தலைவராக 50 ஆண்டு கள் இருந்துள்ளார். இந்த நாட்டில் எந்த ஒரு தலைவரும் இந்த அளவிற்கு மிக நீண்ட காலம் ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருந்ததில்லை. அவர் எந்தவொரு தேர்தலிலும் தோற்றதில்லை.
இந்த அளவிற்கு மகத்துவம் பெற்ற கலைஞர் அவர்களோடு நான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து பணியாற்றியது ஓர் அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.
அந்த நேரத்தில் தி.மு.க.வும், தமிழ் மாநில காங்கிரசும் 40 இடங்களில் வெற்றி பெற்றன. 2004-ஆம் ஆண்டிலும் அவ்வாறு ஒருங்கிணைந்து பணியாற்றி 40 இடங்களிலும் வெற்றி பெற்றோம்.
அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், மற்றவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கியவர். அது மட்டுமின்றித் தமிழ் நாட்டின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை உருவாக்கி, அவைகளைச் செயல்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டிற்கும் இந்திய நாட்டிற்கும் அவர் ஆற்றிய அயராத பணிகள், எதிர்கால மக்கள் நினைவுகூரத்தக்க வகையில் இருக்கின்றன. கூட்டாட்சி யில் அவர் மிகவும் நம்பிக்கை கொண்ட வராகத் திகழ்ந்தார். அவர் எப்போதும் கூறுவார்; வலிமையான மாநிலங்கள்தான் வலிமையான நாட்டை உருவாக்கும் என்று. இதைத்தான் ஆரம்பம் முதல் அவர் வலியுறுத்திக் கொண்டே வந்தார்.
ஜனநாயக மாண்புகள், அரசியல் சட்டப் பாதுகாப்பு, முக்கிய அமைப்புகளைப் பாதுகாத்தல் இவைகளுக்கு இன்றைய தினம் கலைஞர் அவர்கள் கொண்டிருந்த மாண்புகள் தேவைப்படுகின்றன.
நான் எப்போது கலைஞர் அவர்களைச் சந்தித்தாலும், அவர் தமிழர்களின் நலன்கள் குறித்தும், பிரச்சினைகள் குறித்தும் பேசுவார். தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான என்.டி.ஆர். அவர்கள் சென்னைக்குக் குடிநீர் வழங்கினார். அதையே நானும் தொடர்ந்து தமிழகத்திற்கு – குறிப்பாகச் சென்னைக்குக் குடிநீர் வழங்குவதைத் தொடர்கிறேன்.
மீண்டும் மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். மூத்த தலைவர் கலைஞர்அவர்கள், என்மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். என் வாழ்வில் இந்த நாள் உணர்வுபூர்வமான நாளாகும். இத்துடன் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.