திருமதி. சோனியா காந்தி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்
மாபெரும் சமூகநீதிப் போராளி, முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து ஆற்றிய உரை
நவீன இந்தியாவினுடைய வரலாற்றிலே மிகப் பெரிய ஜாம்பவனாக இருக்கின்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையினைத் திறந்து வைக்கின்ற பாக்கியத்தை நான் பெற்றிருக்கின்றேன். இந்த அருமையான வேளையில் அந்த மாபெரும் மனிதரை – அவருடைய வாழ்க்கையை, அவருடைய வரலாற்றுச் சாதனைகளை நினைவு கூர்ந்து பாராட்டி மகிழ்கின்றேன்.
தம்முடைய 60 ஆண்டுகால வரலாற்றிலே தலைவர் கலைஞர் அவர்கள் இந்தத் தமிழகத்தினுடைய வரலாற்றையும் எதிர் காலத்தையும் உருவாக்கியவர். தமிழகத்தினுடைய முதலமைச்சராக 5 முறை இருந்து, ஏறக்குறைய 20 ஆண்டுகள் தமிழகத்தினுடைய நிர்வாகத்தை நடத்தியவர். தமிழகச் சட்டப்பேரவைக்கு 13 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவருடைய அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு; தேர்தலிலே ஒருநாளும் அவர் தோற்கவில்லை என்கிற சரித்திரத்தை வாழ்க்கையிலே படைப்பதற்கான காரணமாக இருந்தது. அந்த அற்புதமான சாதனைகளை யாரும் – இப்பொழுதும் சரி, எதிர்காலத்திலும் சரி செய்யமுடியும் என்று நான் நம்பவில்லை.
டாக்டர் கலைஞர் அவர்களுக்குத் தமிழக மக்களுக்குப் பணியாற்றுவதிலும், அரசியல் நடத்துவதிலும்தான் மிகப் பெரிய ஆர்வமும் ஈடுபாடும் இருந்தது. ஆனால், அவருக்கு இன்னும் ஒரு பெரும் ஆசை இருந்தது. அதுதான் தமிழ் மொழியின் மீது அவருக்கிருந்த தணியாத தாகமும் அன்பும். தமிழகத்தை நடத்துவதிலும் ஆட்சி செய்வதிலும் தம்முடைய முழு நேரத்தையும் சக்தியையும் அவர் செலவிட்டாலும் கூட, இலக்கியத்திலும் தமிழ் மொழியை வளர்ப்பதிலும் அதற்கான தனி நேரத்தை அமைத்துக் கொண்டார்.
அற்புதமான பேச்சாளர். ஆனால், அவருடைய சக்தி வாய்ந்த பேனாவிற்கு நிகர் எதுவுமில்லை. அவர் எப்படிப்பட்ட ஒரு எழுத்தாளர்! அவர் கையில் தமிழ் எப்படி விளையாடியது! அவருடைய அற்புதமான படைப்புகள் எப்படிப் பிரம்மாண்டமான படைப்புகளாக இருந்தன என்றெல்லாம் நான் வியந்து கொண்டிருக்கிறேன்.
தமிழின் மீது தணியாத தாகம் கொண்டிருந்த கலைஞர் அவர்கள், பல்லாயிரக்கணக்கான சிறுகதைகளையும், பெருங்கதைகளையும், நாடகங்களையும், 210 கவிதைகளையும், தம்முடைய உடன் பிறப்புகளுக்கு 7,000 கடிதங்களையும் எழுதினார். தம்முடைய வாழ்க்கையிலே 75 திரைப்படங்களுக்குக் கதை – வசனம் அமைத்த பெருமையும் அவருக்கு உண்டு.
தலைவர் கலைஞர் அவர்களுடைய தமிழ் மொழிப் பற்றானது நாளும் பொழுதும் தமிழ்மொழியை வளப்படுத்துவதிலும், அதற்குப் பல்வேறு படைப்புகளை ஆக்கித் தருவதிலும் அவர் செலவழித்த நேரம் ஏராளம்!
தமிழினுடைய ஒப்புயவர்விலா இலக்கியங்களான திருக்குறளுக்கும் தொல்காப்பியத்திற்கும் உரை எழுதக் கூடிய மிகப் பெரிய இலக்கியப் படைப்பை அவர் ஆக்கித் தந்தார்.
அவருடைய வாழ்க்கையிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரத்தை வழங்கியது தான் அவருடைய வாழ்க்கையிலே அவருக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியையும் நிறைவையும் தரக்கூடிய ஒரு செய்தி. தமிழைச் செம்மொழியாக ஆக்கியபோது, தமிழ்ச் செம்மொழிக்காக அவர் கைப்பட எழுதிய ஒரு கவிதை; இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கும்.
தம்முடைய வழிகாட்டிகளாகவும் தலைவர் களாகவும் கொண்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் வழியிலே தலைவர் கலைஞர் அவர்கள் ஒரு மாபெரும் சமூக நீதிப் போராளி ஆவார். அவர் முதலமைச்சராக இருந்த போது, அவர் ஆற்றிய சீர்திருத்தங்கள், திருமணச் சட்டங்களிலே அவர் கொண்டுவந்த சீர்திருத்தம், மகளிருக்கான சொத்துரிமையிலே அவர் கொண்டு வந்த சட்டத் திருத்தங்கள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர் ஏற்படுத்திக் கொடுத்த இடஒதுக்கீடு, நிலச் சீர்திருத்தச் சட்டத்திலே அவர் கொண்டுவந்த மிகப் பெரிய புரட்சி, அரசு வேலை வாய்ப்புகளிலே 30 விழுக்காடு பெண்களுக்கான இடஒதுக்கீடு, பிராமணரல்லாத வகுப்பினர் கூட எல்லா ஆலயங்களிலும் அர்ச்சகராக இருக்கலாம் என்று கொண்டு வந்த வரலாற்றுப் புகழ் மிக்க சட்டம், இவையெல்லாவற்றிற்கும் மேலாகக் கூட்டாட்சித் தத்துவத்திலே மாநிலங்களின் உரிமைக்காக இறுதிவரை போராடிய ஒரு மிகப் பெரிய போராளி, தலைவர் கலைஞர் அவர்கள்.
பாராளுமன்ற நிறுவனங்களிலும், மரபுகளிலும் தலைவர் கலைஞர் அவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். எந்த நேரத்திலும் சமரசமே செய்துகொள்ளாத மதச்சார்ப்பற்ற அரசியல்வாதி. வாழ்க்கை முழுவதும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு அசைக்க முடியாத அரணாக இருந்து பாதுகாத்தவர். அதே நேரத்திலே அவர் எல்லா மதங்களையும் மதிக்கக் கூடிய பண்பாளர். அவருடைய கருணை உள்ளம் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை உருவாக்கித் தருவதிலே மிகவும் முனைப்பாக இருந்தது.
1971-லும், 1980-லும் அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு வங்கிகளைக் தேசிய மயமாக்குகின்றபோது, மன்னர் மானிய ஒழிப்பின்போது, நிலச் சீர்திருத்தச் சட்டங்களை அமல்படுத்தியபோது தலைவர் கலைஞர் தந்த மகத்தான ஆதரவினைக் காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் மறக்க மாட்டோம். 2004லிருந்து
2014 வரை 10 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கலைஞர் அவர்கள் தந்த மகத்தான ஆதரவினை நாங்கள், காங்கிரஸ்காரர்கள் மறக்கமாட்டோம்.
எனக்குத் தனிப்பட்ட பல நேரங்களிலே பல அனுபவங்கள் உண்டு. எப்பொழுதெல்லாம் பிரச்சினைகள், சிக்கல்கள் தேசிய அரசியலில் வந்ததோ, அப்பொழுதெல்லாம் நீண்ட அறிவும், மிகுந்த அனுபவமும் கொண்ட தலைவர் கலைஞர் அவர்களிடம் நாங்கள் ஆலோசனை கேட்டபோது, அவர்கள் வழங்கிய மகத்தான ஆலோசனைகளையெல்லாம் நான் இன்னும் தனிப்பட்ட முறையிலே, என் இதயத்திலே தாங்கி நிற்கின்றேன்.
தேசிய அரசியலில் அரசியல் சாசனச் சட்டத்தையும், அரசியல் சட்ட சாசனமுள்ள நிறுவனங்களிலும் சீரமைப்பதற்கான அரசியல் போராட்டத்தை வலுவாக நாம் நடத்துகின்றபோது, தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்கின்றபோது எப்படி நமது இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருந்ததோ, அதைப்போல இந்த அரசியல் போராட்டத்திலும் நம் இரண்டு கட்சிகளும் உறுதியாக இணக்கமாக இருந்து போராட வேண்டு மென்பது என்னுடைய தணியாத ஆசை.
கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையைத் திறந்து அவருடைய கனிவான பார்வையின் கீழே நிற்கின்ற நான் இந்த நேரத்திலே அகில இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் ஒரு செய்தியை உரக்கச் சொல்லவேண்டும்.
70 ஆண்டுகளாக நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற இந்தியா என்கிற நம்முடைய கனவையும், ஜனநாயக நிறுவனங்களையும், அரசியல் சாசனச் சட்டத்தையும் நாம் இரண்டு பேரும் உறுதியாக இணக்கமாக இருந்து பாதுகாத்துப் போராடுவோம் என்பதுதான், கலைஞர் அவர்களுடைய காலடியிலே நாம் எடுக்கின்ற உறுதிமொழியாக இருக்க முடியும்.
கலைஞர் அவர்களுடைய நினைவுகள் என்றென்றும் வாழ வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.