இறப்புக்கு பிறகும் இட ஒதுக்கீடு போராட்டம்
நீதிக்கட்சி காலம் முதற்கொண்டு, தமிழுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும், இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்காகவும் எத்தனையோ போராட்டங்களில் ஈடுபட்டவர் கலைஞர். இந்தப் போராட்டங்களை முன்னெடுத்ததற்காக, இரண்டு முறை ஆட்சியைப் பறிகொடுத்தவர். மக்களுக்காகப் போராடி, பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர்.
“அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா..
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா
என்று கண்ணீர் மல்க இறங்கற்பா எழுதினார் கலைஞர்.
அண்ணாவின் அருகில் உறங்கவேண்டும் என்பது கலைஞரின் கனவுகளில் ஒன்றாக இருந்தது. இதை நிறைவேற்றும் முகமாக, பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்கக் கோரி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசை நேரில் சந்தித்து முறையிட்டார்.
ஆனால், காழ்ப்புணர்ச்சி காரணமாக கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்க அ.தி.மு.க அரசு மறுத்துவிட்டது.
தகவல் அறிந்த தி.மு.க உடன்பிறப்புகள், கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இட ஒதுக்கீடு கேட்டுத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இறந்த பிறகும் இட ஒதுக்கீடு போராட்டம் என்று செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் #Marina4Kalaignar என்ற வேண்டுகோள் உலகம் முழுவதும் பரவி செய்தியானது.
இதனிடையே, கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடம் ஒதுக்கக் கோரி, தி.மு.க தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அண்ணா நினைவிடத்தில் கலைஞருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஓய்வெடுக்காமல் உழைத்தவன்
இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்
என்ற வாசகம் அடங்கிய பேழையில், அண்ணாவின் அருகே ஓய்வுகொண்டிருக்கிறார் தலைவர் கலைஞர்.