அய்யன் திருவள்ளுவருக்கு கலைஞரின் நன்றிக் கடன்
மனித சமுதாயத்திற்கு வாழும் வழியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துச் சொன்ன அறிவுப் பெட்டகம் திருவள்ளுவர். தமிழ்ச் சமுதாயத்தின் கலங்கரை விளக்கம் அவர். அவருக்கு இந்த மண்ணில் இதுவரை தோன்றியவர்களில் மிகப்பெரிய நன்றிக் கடன் செலுத்தியவர் கலைஞர் ஒருவர் மட்டுமே என்று சொன்னால் அது மிககையில்லை.
வள்ளுவர் கோட்டம்
1976-ம் ஆண்டு கழக ஆட்சியில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அய்யன் திருவள்ளுவருக்கு திராவிட கோவில்கள் பாணியில் வள்ளுவர் கோட்டம் என்னும் பெயரில் நினைவாலயம் ஒன்றை எழுப்பி தலைவர் கலைஞர் ஒரு அற்புத சாதனையை நிகழ்த்தியுள்ளார். இங்கு 4000 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய கலையரங்கம் ஒன்று உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப் பெரியது எனலாம். மேலும் வள்ளுவர் கோட்டத்திற்குள் அழகிய புல்தரைகள் குளிர்ச்சியான சூழல் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தின் முகப்பிலும் அய்யன் திருவள்ளுவருக்கு ஒரு சிலையும் அதைச் சுற்றி அழகிய பூங்காவும் அழகூட்டுகிறது.
கன்னியாகுமரி முக்கடல்கள் சங்கமிக்குமிடத்தில் திருவள்ளுவருக்கு சிலை
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ரூசெல் செதுக்கத்தில் உள்ள ஓரியண்டல் மற்றும் ஆப்ரிகன் ஸ்டடிஸ் என்கிற பள்ளிக்கு வெளியே திருவள்ளுவருக்கு ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது.
இதை நினைவில் கொணர்ந்து அதைவிட பிரம்மாண்டமாக கழக ஆட்சியில் 2000-ம் ஆண்டில் 133 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்துமாக்கடல் என முக்கடல் சந்திக்குமிடத்தில் கடற்கரையை யொட்டியுள்ள ஒரு தீவு பகுதியில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை ஒன்றை வானளாவிய உயரத்தில் நிறுத்தி உலகோர் பார்த்து பிரமிக்கும் வகையில் தலைவர் தலைஞர் அவர்கள் நிர்மாணித்துள்ளார்.
திருக்குறள் உரை
பரிமேலழகர், மணக்குடவர், பரிதியார், மு.வ., காலிங்கர், பரிப்பெருமாள் ஆகியோர் குறளுக்கு உரை எழுதியது போல் தலைவர் கலைஞர் அவர்களும் 1330 குறட்பாக்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். என்பது கலைஞரின் தணியாத ஆசை.
குறளோவியம்
ஒவ்வொரு குறளுக்கேற்ப சிறு சிறு கதைகளை சிறப்பாக சித்தரித்து அதற்கேற்ற ஓவியம் வரையச் செய்து அந்த குறளின் பொருளை படித்தவுடன் எளிதில் புரிந்து கொள்ள 1956-ம் ஆண்டில் தொடங்கி சற்றொப்ப 30 ஆண்டுகால உழைப்பில் இதுவரை 354 குறட்பாக்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் குறளோவியம் தீட்டியுள்ளார்.
அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறப்பு
பெங்களூர் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் சிலையை அங்குள்ள அல்சூர் ஏரி பூங்கா ஒன்றில் நிறுவி கன்னடர்களின் எதிர்ப்பால் கடந்த 18 வருடங்களாக திறக்கப்படாமல் மூடிக்கிடந்தது. இந்த சர்ச்சையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது குறித்து தமிழக முதல்வர் கலைஞரும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் தீவிரமாக கலந்து ஆலோசித்தார்கள்.
இறுதியில் பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கீடாக சென்னை அயன்புரம் ஜீவா பூங்காவில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை நிறுவலாம் என ஒருமித்த கருத்துக்கு வந்தனர். அதன்படி 9.8.2009 அன்று பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் கலைஞரும், 13,8.2009 அன்று சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையை கர்னாடக முதல்வர் எடியூரப்பாவும் திறந்து சாதனை நிகழ்த்தினார்கள்.
அரசு அறிவிப்புப் பலகைகளில் திருக்குறள்
அரசின் தலைமைச் செயலகத் துறைகளிலும், துறைத் தலைமை அலுவலகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களிலும், நாள்தோறும் ஓர் ஆங்கிலச் சொல்லையும், அதற்குரிய தமிழ்ச் சொல்லையும், ஒரு திருக்குறளைப் பொருளுடனும், கரும்பலகையில் எழுதி வைக்க ஆணையிட்டவர் முதலமைச்சர் கலைஞர்.
அய்யன் திருவள்ளுவருக்கு அழகிய சிலை
தென்கடல் ஆடும் குமரியில், அய்யன் திருவள்ளுவருக்கு, அகிலமே கண்டு வியக்கும் அளவுக்கு, 133 அடி உயரத்தில், 7,000 டன் எடையில், மாபெரும் சிலை அமைத்து மரியாதை செய்தவர் தலைவர் கலைஞர்.