நிலையாக நம் நெஞ்சில்.. சிலையாக அறிவாலயத்தில்..
வார்த்தைகளில் அடக்கி விட முடியாது தலைவர் கலைஞரின் தனிப் பெரும் வரலாற்றை! வடிவங்கள் என்னென்ன உண்டோ அத்தனையிலும் அவரது பெருமைகளை எடுத்துக் கூறினாலும் மேலும் ஏராளமானவை எஞ்சியிருக்கும். இந்தியத் துணைக் கண்டம் இதுகாறும் கண்டிராத ஈடு இணையற்ற தனித்துவமான தலைவர் கலைஞர்.
தமிழினத்தின் தலைவர் முத்தமிழறிஞர் 80 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் – அரை நூற்றாண்டுக் காலம் தமிழ்நாட்டின் அரசியலைத் தம் விரலசைவுக்கேற்ப விசையேற்றிச் சுற்றிச் சுழல வைத்தவர் – இந்திய அரசியலில் இக்கட்டுகள் ஏற்பட்டபோதெல்லாம் தம் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தால் ஜனநாயகத்தை நிலை நாட்டியவர் – பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும் உருவாக்கியவர்.
13 சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொண்டு தோல்வியே காணாமல் வெற்றிகளைக் குவித்துச் சரித்திரம் படைத்தவர். தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்து, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை உருவாக்கித் தந்தவர். 14 வயதில் தமிழ்க்கொடி பிடித்து இனமான முழக்கத்துடன் சமூக நீதி காக்கக் களமிறங்கி 95 வயதிலும் தளராமல் போராடி, மரணத்திலும் தமக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்றுச் சமூக நீதியைக் காத்த போராளி.
எழுத்தாளர் – கவிஞர் – பேச்சாளர் – பத்திரிகையாளர் – பாடலாசிரியர் – கதாசிரியர் – திரைப்பட வசனகர்த்தா – இயக்கப் பிரச்சார நடிகர் எனப் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி என உலகில் வேறெவரும் தொடாத உயரங்களைத் தொட்ட ஒரே தலைவர் நம் உயிர் நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
அந்த மாபெரும் தலைவர் மறைந் தாலும் அவர் கட்டிக்காத்த இயக்கமும் அதன் கொள்கைகளும், அவர் உருவாக்கித் தந்த திட்டங்களின் பலன்களும், சட்டங்களின் விளைவுகளும் சாதனை வைரங்களாக சதா ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த வைரங்களை மணிமுடியில் பதிப்பது போல – அதன் பெருமை உலகுக்கெல்லாம் தெரிவது போல டிசம்பர் 16ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் தமது ஆருயிர்த் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் அருகில், சிலையாக எழுகிறார் தலைவர் கலைஞர் அவர்கள்.