ஆங்கில இதழாளர்களின் அஞ்சலி
அம்ரித் லால்
(Indian Express)
கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் சமூக உள்ளடக்கத்திற்கு ஏற்ப ஆட்சி நிர்வாகத்தில் பலதரப்பினரும் இடம்பெறுவதை உறுதி செய்தார். மேலும், மிக முக்கியமாக அரசாங்க சேவைகள், பொருட்கள் முறையாகச் சென்று சேர்வதைச் சாதித்தார். தமிழகத்தைத் தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாமல் சமூக, சுகாதாரக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றிக்காட்டினார்.
க்பிரான்சிஸ் கோடி
(Hufftingtonpost)
மனிதநேயரான கலைஞர் கருணாநிதியின் தமிழ்மொழிப்பற்று, தமிழ் இலக்கியக் காதல் தமிழகத்தின் பொதுவாழ்வை உருமாற்றியது. அதனை இனிவரும் காலங்களில் மாற்றிவிடமுடியாது.
இந்திய அரசியலில் தனித்துவமான பாதையில் தமிழகம் பீடுநடை போடுகிறது. அதுவும் தற்போதைய சூழலில் இப்படிப் பயணிப்பது கவனத்துக்கு உரியது. இதற்குக் கருணாநிதியின் முயற்சிகள் பெருமளவில் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரூ வியாட்
(India Seminar)
தமிழ்நாட்டின் அரசியலில் பல தளங்களில் ஜனநாயக அரசியல் வளர்வதை கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகள் உறுதி செய்தன. அடிமட்ட மக்களைப் பற்றி அக்கறை கொண்டதாகத் திகழ்ந்த அவரின் தலைமையின் கீழ் திமுகவின் அரசியல் பிரபலமானதாக, அணுகக்கூடிய ஒன்றாகத் திகழ்ந்தது. பல்வேறு வகைகளில் தமிழக அரசியலைச் சமத்துவம் மிக்கதாகத் திமுக உருமாற்றியது.
மரியா அபி ஹபீப்
(The NewYork Times)
இந்தியாவை ஒன்றிணைக்க, இந்தியாவின் பல்வேறு இன, மொழி, மதக் குழுக்களின் நலன்களைப் பாதுகாக்க மாநில சுயாட்சியே தேவை என்று கருணாநிதி முழங்கினார். இறை மறுப்பாளரான கருணாநிதி இந்தியாவின் உயர்சாதியினரின் ஆதிக்கத்திற்குச் சவாலாகத் திகழ்ந்தார். அவரின் அரசியல் தமிழ்நாட்டில் மையம் கொண்டிருந்தது என்றாலும் அதன் அதிர்வலைகள் நாடுமுழுக்க எதிரொலித்தது.
பிரசாந்த் ஜா
(Hindustan Times)
கருணாநிதியின் வாழ்க்கைப்பயணம் நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது. இந்திய அரசமைப்பு இந்தியாவின் பன்மைத்துவத்தை மதிக்கவும், அதனைக் கருத்தில் கொண்டு திட்டங்களைத் தீட்டவும் கருணாநிதி காரணமானார். அதன்மூலம், இந்திய ஜனநாயகத்தை ஆழமாக வேரூன்ற வைத்தார்.
கோர்கோ சாட்டர்ஜி
(Indian Statistical Institute)
கருணாநிதி மக்களுக்காக, மொழியியல் தேசத்தின் பிரிக்க முடியாத உரிமைகளுக்காக அயராது இயங்கிய போராளி. அதிகாரத்தை அபகரித்துக் கொள்ளும் டெல்லியின் ஆதிக்கத்திற்கு எதிராக வாழ்நாள் முழுக்க அவர் சமராடினார். அவர் தலைமுறையைச் சேர்ந்த தமிழ் நிலத்துப் போராளிகளின் போராட்டங்கள் பொருளாதார ஆற்றல்மிக்க மாநிலம் நிமிர்ந்து நிற்க முடிவு செய்துவிட்டால், டெல்லி ஏகாதிபத்தியம் இறங்கி வந்தே ஆகவேண்டும் என்பதை உணர்த்தியது.
எக்கனாமிக் டைம்ஸ்
தலைவர் கலைஞர் அவர்களுடன் அரசியலைக் கடந்து தாம் கொண்டிருந்த நட்பு ஆழமானது என்றும்; தம்முடைய பிறந்த நாளைத் தாமே மறந்துவிட்டாலும் தலைவர் கலைஞர் மறக்காமல் வாழ்த்து சொல்லுவார் என்றும் முதுமை காரணமாக நேரில் அஞ்சலி செலுத்த முடியாததால் வீட்டி லிருந்தே அவருக்கு வீரவணக் கம் செலுத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரையா உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து “தி டைம்ஸ் ஆப் இந்தியா’’ ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
“கருணாநிதி எப்போதும் கம்யூனிஸ்டுகளிடம் பாசம் கொண்டிருந்தார். அவர்
ஏராளமான முறை நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் சேர்ந்திருப்பேன். ஆனால், பெரியாருக்காகவும், அண்ணாவுக்காகவும், அவ்வாறு செய்யவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
டெக்கான் கிரானிக்கல்
ஒரு முன்னாள் முதலமைச்சரின் உடல் அடக்கம் அங்கே நடைபெறக்கூடாது என்று மாநில முதலமைச்சர் முடிவெடுத்தது ஓர் அரசியல் தற்கொலை ஆகும். அது ஒரு முறையற்ற நடவடிக்கையும் கூட.
தமிழர்களின் மகத்தான தலைவர் என்பதைக் கருத்தில் கொண்டும், மத்தியில் ஆட்சியில் பங்குற்றபோதெல்லாம் பல்வேறு தேசியத் தலைவர்களுடன் இணைந்து பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்தவர் என்கிற
நிலையிலும், கலைஞருக்குத் தாமாக முன்வந்து அந்தக் கௌரவத்தைத் தந்திருக்க வேண்டும்.
இலங்கை
இலங்கை அதிபர் மைத்ரிபால சீறிசேனா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
கலைஞர் மறைவுச் செய்தி அறிந்ததும் அமெரிக்க அரசு இரங்கல் தெரிவித்துக் கொண்டுள்ளது.
அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர்
பொதுவாழ்வின் மூலம் தமிழகத்துக்கும் தேசத்துக்கும் பெரும் சேவை ஆற்றியவர் கலைஞர்.
அமெரிக்க நியூயார்க் டைம்ஸ்
சினிமா, அரசியல் என பன்முகத் தம்மை கொண்ட இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதி கலைஞர் கருணாநிதி மறைந்துவிட்டார். அவரது மறைவு தமிழக அரசியலில் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விக்னேஸ்வரன்
இலங்கை வடமாகாண முதலமைச்சர்
தனது வாழ்வை தமிழக வரலாற்றின் அத்தியாயமாக மாற்றிவிட்டு மறைந்துள்ளார் கலைஞர்.
இரா.சம்பந்தம்
இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்
கடந்த 6 தசாப்தங்களாக பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில் அவரது அரசியல் பணியை ஆற்றியவர் கலைஞர். அவரது பேரிழப்பு துயரம் தருகிறது.