விதைத்தவர் பெரியார்; வளர்த்தவர் அண்ணா; மரம் ஆக்கியவர் கலைஞர்!
திரு.ப.சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர்
இன்று தமிழ்நாடு மட்டுமல்ல; தமிழ்கூறும் நல் உலகம், உலகமெங்கும் பரந்து விரிந்திருக்கக்கூடிய எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் 94 வயதுவரை வாழ்ந்த கலைஞர் அவர்களைப் பார்த்து வியந்து மனம் நிறைவடைந்து நன்றி சொல்கிறார்கள்.
எந்த வகையில் பார்த்தாலும் இருபதாம் நூற்றாண்டினுடைய வரலாற்றை எழுதும்போது, குறிப்பாக அதன் இரண்டாவது பகுதி வரலாற்றையும், இருபத்தியோராம் நூற்றாண்டினுடைய முதல் பதினைந்தாண்டு கால வரலாற்றையும் எழுதும்போது, கலைஞர் அவர்களைத் தவிர்த்து இந்திய நாட்டின் வரலாற்றை எழுத முடியாது.
திராவிட இயக்கத்திற்கு விதை விதைத்தவர் தந்தை பெரியார், அதை நாற்றாகப் பாதுகாத்தவர் பேரறிஞர் அண்ணா, மரமாக வளர்த்தவர் கலைஞர் அவர்கள். இதைத்தான் ஸ்டாலின் அவர்களும் எழுதியிருந்தார். இந்த மூன்று பேர்கள்தான் நூறாண்டுகள் திராவிட இயக்கம் மூலமாக தமிழக வரலாற்றைப் பாதித்தவர்கள், தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள். இந்த மூன்று மனிதர்கள்தான் நூறாண்டு களில் தமிழ் மக்களின் வாழ்க்கையிலும், சிந்தனையிலும் மாறுதல்களை ஏற்படுத்தியவர்கள். சிந்தனையில் மாறுதலை ஏற்படுத்துவதுதான் பெரிய விஷயம். அந்த ஆளுமையோடு அந்த மூன்று பேரும் இருந்தார்கள் என்றால் அது எளிமையான காரியம் அல்ல. அதில் ஐம்பது ஆண்டுகளை நிரப்பியவர் கலைஞர் அவர்கள். ஐம்பது ஆண்டுகள் ஆளுமையோடு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் யாரும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
சிலர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கலைஞர் அவர்களை ஆதரித்தாலும் எதிர்த்தாலும், கலைஞர் அவர்களைப் போற்றினாலும் தூற்றினாலும், கலைஞர் அவர்களோடு உடன் பட்டாலும், உடன்படாவிட்டாலும் பாதிப்பு, அனைவர் மனதிலும் பாதிப்பு ஏற்படுத்தியதில் கலைஞர் அவர்களுக்கு ஈடான ஒரு தலைவர் தமிழகத்தில் இல்லை.தமிழக வரலாற்றில், தமிழக மக்களுக்காக எழுபது ஆண்டுகள் எழுதியவர், பேசியவர் என்றால் அது கலைஞர் ஒருவர்தான்!
15 நாவல்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகள், 7000-த்திற்கும் மேற்பட்ட கடிதங்கள், 23 திரைப்படங்களைத் தயாரித்தவர், 75 திரைப்படங்களுக்குக் கதை – வசனம் எழுதியவர். இப்படிப்பட்ட ஒருவர் ஒரு மாநிலத்திற்கு ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்க முடியாது. இவற்றையெல்லாம் எழுதிவிட்டு, எப்படி முதலமைச்சராக இருந்தார்? அல்லது முதலமைச்சராக இருந்து கொண்டு இவற்றையெல்லாம் எப்படி எழுதினார்?
49 ஆண்டுகள் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, ஐந்து முறை முதலமைச்சராக இருந்து கொண்டு, இவற்றையெல்லாம் எழுத முடியுமா? நூறாண்டுகள் அல்லது இருநூறு ஆண்டுகள் கழித்து என்ன சொல்வார்கள் என்றால், இவற்றையெல்லாம் செய்தவர் ஒரு மனிதர் அல்லர் – இரண்டு அல்லது மூன்று பேர் செய்திருப்பார்கள் – அவையெல்லாம் ஒருவரின் பெயரில் வந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இவற்றை ஒரு வாழ்க்கையில் ஒரு மனிதனால் செய்ய முடியாது.
ஒரு துறையில் ஆற்றல் உள்ளவர்கள் இருப்பார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் அரசியல், எழுத்து, இயல் – இசை – நாடகம் மூன்றும் சேர்ந்த இலக்கியம், திரைப்படம், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், வரலாற்று நூலாசிரியர், பழைய தமிழ் இலக்கியங்களில் புலமை வாய்ந்தவர், சமகாலத் தமிழ் இலக்கியத் தொனியை முழுமையாக அறிந்தவர், போராளி, புரட்சிகரமான கருத்துகளை விதைத்தவர், கட்டடக் கலையில் நுணுக்கமான அறிவைப் பெற்றவர் – அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், கொஞ்ச காலம் சட்டமன்றமாக இருந்து, இன்று மருத்துவமனையாக மாறிவிட்ட கட்டடம் – நாத்திகம், இசை, இத்தனைத் துறைகளிலும் ஒருவரால் முத்திரை பதிக்கமுடிகிற தென்றால், இந்தப் பன்முகம் எத்தனை பேருக்குக் கிடைத்தது?
என்னால் இருவரைத்தான் சொல்ல முடியும். ஒருவர் அண்ணல் அம்பேத்கர். பொருளாதார மேதை, சட்ட மேதை, இலக்கியவாதி, அனைத்து சமயங்களைப் பற்றியும் அறிந்தவர்; இப்படிப் பன்முகம் கொண்டவர் அண்ணல் அம்பேத்கர். அதுபோல் பன்முகத் திறமை கொண்டவர் கலைஞர். அவரை நினைக்கும் போது மலைப்பைத் தருகிறது. இப்படி ஒரு மனிதர் வாழ முடியுமா?
கலைஞர் அவர்கள் ஆட்சியிலும் இருந்திருக்கிறார், எதிர்க்கட்சியிலும் இருந்திருக் கிறார். எதிர்க் கட்சி என்பது ஏறத்தாழ ராமருக்கு வனவாசம் போல. 1977-லிருந்து 1989 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் எதிர்க்கட்சி. 1989-ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 1991-ல், இரண்டாண்டுகளில் ஆட்சியை இழந்தது. இந்த இரண்டு ஆண்டுகளைத் தவிர்த்து, 1977- லிருந்து 1996 ஆம் ஆண்டு வரை, கலைஞர் அவர்கள் தலைமை வகித்த திராவிட முன் னேற்றக் கழகம் ஏறத்தாழ எதிர்க்கட்சிதான். பதினெட்டு ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் கட்சியின் தலைவராக இருந்து அந்தக் கட்சியை எப்படிக் காப்பாற் றினார்? எப்படிப் பாதுகாத்தார்? இவற்றை யெல்லாம் இருபது முப்பது ஆண்டுகள் கழித்து வரலாற்று அறிஞர்கள் ஆராய்ந்து ஆதரித்தும், எதிர்த்தும் எழுதுவார்கள். அப்படி எழுதும்போது இருபது ஆண்டுகள் எதிர்க்கட்சியாக, தொடர்ந்து கட்சிக்குத் தோல்விகள் ஏற்பட்ட போதும், அந்தக் கட்சியை எப்படி ஒரு மனிதர் காப்பாற்றினார் என்ற வரலாற்றை எழுதும்போதுதான் கலைஞர் அவர்களுடைய உண்மையான ஆற்றல் வெளிவரும்.
ஆளும் கட்சியாக, முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகளுக்கு ஈடாக, எதிர்க்கட்சியாக, எதிர்க் கட்சித் தலைவராக இருந்து கலைஞர் அவர்கள் ஆற்றிய பணிகள் வெளிப்படும். இருபது ஆண்டுகள் எதிர்க்கட்சியில் ஒருவர் தலைவராக இருந்து அந்தக் கட்சியை முழுமையாகக் காப்பாற்றியவர் இந்தியாவில் யாரும் இல்லை. அந்தத் தலைமைக் குணம் என்பது சிலருக்கு வரப்பிரசாதமாக வருகிறது,
சிலர் தங்களுடைய உழைப்பால், பணியால் அதை வளர்த்துக்கொள்கிறார்கள். கலைஞர் அவர்களுடைய தலைமைக் குணத்தை நான் பாராட்டுகிறேன், போற்றுகிறேன். பதின்மூன்று முறைகள் சட்டமன்ற உறுப்பினராகத் தோல்வியே அறியாத ஓர் அரசியல்வாதி கலைஞர் அவர்கள். இந்த இடத்தை இனிமேல் யாரும் வெல்ல முடியாது.
ஐம்பது ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்து, அதைக் கட்டிக் காத்து, அரியணையின் ஒரு விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தி, அரியணை ஏறுவதற்கான படிகளில் முதல்படிவரை கொண்டு வந்து நிறுத்தி, இன்று அந்தப் படிகளைக் கடந்து அரியணையில் ஏறக்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கி, அதற்கு ஒரு சரியான தலைவரைக் கண்டுபிடித்துச் சென்றிருக்கிறாரே கலைஞர் அவர்கள்; அதற்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று அருமைச் சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். அவர் ஆற்றிய உரையைப் படித்தேன். எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு, கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்கும் நாளில், மத்தியில் வலிமை வாய்ந்த ஒரு ஆளும் கட்சியை எதிர்த்துப் பேசுவது என்பது எளிதல்ல. அந்தத் துணிவு அவருக்குக் கலைஞர் அவர்கள் விட்டுச்சென்ற சொத்து என்று நான் நம்புகிறேன். அந்தத் துணிவே அவருக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.