கலைஞர் இல்லாத தமிழகத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ்நாட்டில் 50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தைக் கட்டிக் காத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள். இது மாபெரும் சாதனை.
அ.தி.மு.க. சார்பில் ஆண்டு விழா நடத்தும் போது, எம்.ஜி.ஆர். படத்துடன் அதன் அருகில் கலைஞர் அவர்களின் படத்தையும் வைக்க வேண்டும். ஏனென்றால் அ.தி.மு.க. உருவாகக் காரணமாக இருந்தவர் கலைஞர். அப்போது யார் யாரெல்லாம் யாரைத் தூண்டிவிட்டார்கள், யார் விலகினார்கள் என்பதெல்லாம் வரலாறு தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
எத்தனையோ வஞ்சனைகள், துரோகங்களை எதிர்கொண்டவர் கலைஞர். அரசியலில் பழையவராக இருந்தாலும், புதியவராக இருந்தாலும் கலைஞர் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது. அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தியவர் கலைஞர். அரசியல் மேடையில் தன்னந்தனியாக நின்று வெற்றி கொண்டவர். ‘அரசியலுக்கு வருபவர் என்னோடு வா இல்லையேல் என்னை எதிர்கொள்’ என்கிற நிலையை உருவாக்கியவர் கலைஞர். எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திக்காட்டிய மாபெரும் தலைவர்.
தமிழ்நாட்டில் பெரிய விழா என்றால் இனி யாரை, தளபதி அவர்கள் அழைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கலைஞர் இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
மெரினாவில் நினைவிடம் அமைய தடங்கல் ஏற்பட்டது. ஒருவேளை இந்தப் பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு இடம் தர மறுத்து அரசு மேல் முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்.
கலைஞர் மறைந்துவிட்டார் என அறிந்து கோபாலபுரம் விரைந்தேன். என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. வீடு திரும்பி விட்டேன். காலையில் ராஜாஜி ஹாலுக்கு 6.30 மணிக்கெல்லாம் விரைந்தேன். அப்போது சில ஆயிரம்பேர் திரண்ட கூட்டம்தான் தெரிந்தது. அந்த மாபெரும் தலைவருக்கு இவ்வளவு தானா கூட்டம். அவரது உடன் பிறப்புகள் எங்கே? என்று என் மனம் பதைபதைத்தது.
ஆனால், காலை 7 மணிக்கு மேல் அந்த மாபெரும் தலைவன் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலில் லட்சக் கணக்கில் திரண்டு விட்டார்கள். கட்டுக் கடங்காத கூட்டம். அலை அலையாய்க் கூட்டம். பார்த்து அசந்து போனேன். பிரமித்துப் போனேன். நன்றியுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தார்கள் தமிழக மக்கள்.
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த முப்படை வீரர்கள், அனைத்து இந்தியத் தலைவர்கள், பிரதமர், கவர்னர், மத்திய அமைச்சர்கள் மற்ற மாநிலத்து முதலமைச்சர்கள், அமைச்சர்கள் எல்லாம் வந்தார்கள். ராகுல்காந்தி மணிக்கணக்கில் மெரினாவில் காத்திருந்தார். ஆனால், தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் வராதது ஏன்? நீங்கள் என்ன ஜாம்பவான்களா? அதெல்லாம்
ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டது. நீங்கள் உங்கள் நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் இறுதி அஞ்சலியில் இருந்திருக்க வேண்டும்.
ராஜாஜி ஹாலில் கலைஞர் அவர்களின் உடலருகே நின்று கொண்டு தளபதி அவர்கள் சிறு குழந்தைபோல் குலுங்கிக் குலுங்கி அழுதார். என்னால் தாங்க முடியவில்லை. உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். கவலை வேண்டாம். கலைஞர் அவர்களுக்கு எனது ஆழ்ந்த மனதிலிருந்து அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.