சட்டமன்றத்தில் துரைமுருகன் கண்ணீர்
சட்டப்பேரவையில் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தில் கழகப் பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் பேசியதாவது:-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர் களே, எனக்கு ஒரு வருத்தம். காரணம், ஒரு சாதாரண குடியானவனின் மகனாக நான் சென்னைக்கு வந்தேன். எனக்குச் சென்னையைப் பற்றித் தெரியாது. எனக்கென்று ஒருவர்கூட இங்கு அப்போது கிடையாது. நான் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் சேருவதற்காக வரும்போது, எனக்கு வழி தெரியவில்லை. ஜெமினி பாலத்திலிருந்து, அப்போது ஜெமினி ஸ்டுடியோ; அங்கிருந்து தகரப் பெட்டியைத் தலையில் சுமந்துகொண்டு, வழி தெரியாமல், கேட்டு, கேட்டுக்கொண்டே போய் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்தவன். அப்படி இருந்த என்னை, ‘நீ எந்த ஜாதி? பணக்காரனா, ஏழையா?’’ என்றெல்லாம் பார்க்காமல், என்னை தத்தெடுத்த பிள்ளையாக வளர்த்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அவையில் சட்டமன்ற உறுப்பினராக உட்காரவைத்து, பத்து, பதினைந்து ஆண்டுகாலம் அமைச்சராகப் பணிபுரிய வாய்ப்பளித்து, தம் பிள்ளைகளைவிட எனக்கு முக்கியமான சலுகைகளைக் கொடுத்து, ‘துரை, துரை’ என்று கடைசி வரையில் என்னை அழைத்தவர் தலைவர் அவர்கள்.
எனக்கு ஒரே ஓர் ஆசை இருந்தது. அந்த ஆசை 2007-ல் நிறைவேறி இருக்கவேண்டும். மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்குத் தெரியும். ஒருவனுக்கு அப்பா, அம்மா அவர்கள் ஒரு முறைதான் உயிர் கொடுப்பார்கள். ஆனால், என் தலைவர், எனக்கு இரண்டாவது முறை உயிர் கொடுத்து, எனக்கு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவர்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அறுவை சிகிச்சைக்கு முதல்நாள் இரவு, அறுவை சிகிச்சை முடிந்து நல்ல முறையில் வருவேனா, வரமாட்டேனா என்று நடுங்கிய நிலையில் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன். இரவு 10.00 மணிக்கு அவர் எனக்குப் போன் செய்கிறார். ‘துரை, நீ தூங்கிவிட்டாயா?’ என்று கேட்டார். நான் ‘இல்லை’ என்றேன். ‘காலையிலே ஆபரேசன்; பயப்படுகிறாயா’ என்று கேட்டார். ‘இல்லை’ என்று சொன்னேன். ‘எனக்குத் தெரியும்டா, நீ கோழை. நீ பயப்படாமல் இரு. நான் வந்து உன்னோடு இரவு உன்னுடைய அறையிலே தங்கிவிட்டு, காலையில் உன்னை ஆபரேசன் தியேட்டருக்கு அனுப்பிவிட்டு வருகிறேன், துரை’ என்று சொல்லிவிட்டு அவர் மருத்துவ மனைக்கு வந்துவிட்டார். அதற்குப்பிறகு அங்கு வந்த அவரை நான் வழியனுப்பி வைத்தேன்.
‘புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து’
தன்னுடைய தலைவர், தனது பிணத்தின் மீது ஒரு சொட்டு கண்ணீர் விட்டால், அதுதான் அவன் பெற்ற பேறு என்பதைப் போல், 2007 ஆம் ஆண்டிலேயே ஆபரேஷனில் நான் மடிந்திருந்தால், என் தலைவர் என் உடல்மீது ஒரு சொட்டு கண்ணீர் விட்டிருப்பார். ஆனால், துரதிருஷ்டம் என்னுடைய தலைவருடைய சவத்தின்மீது நான் கண்ணீர் சிந்துகின்ற ஒரு துர்பாக்கியத்தைப் பெற்றேன்.
(இதற்குமேல் பேச முடியாமல் கதறி அழுதார். மேலும் உரையாற்ற இயலாமல் சிறிது நேரம் கண்ணீர் மல்க அமர்ந்திருந்தார்.)