தமிழக சட்டமன்றத்தில் கலைஞருக்கு
இரங்கல் தீர்மானம்
தமிழக சட்டப்பேரவையில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானத்தினைத் துணை முதலமைச்சரும், அவை முன்னவருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்தார். அப்போது முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து அவர் படித்த இரங்கல் குறிப்பு வருமாறு :
“”””இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக அரசியல் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவரும், 1957ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்ற சிறப்புக்குரியவரும், 1984, 1986ஆம் ஆண்டுகளில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பணி யாற்றியவரும், 1969ஆம் ஆண்டு தமிழகத்தினுடைய முதலமைச்சராக முதன்முறையாகப் பொறுப்பேற்று, 5 முறை தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகப் பணியாற்றிய பெருமை பெற்றவரும், 50 ஆண்டுக் காலம் திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியினுடைய தலைவராகத் திகழ்ந்தவரும், 15-வது சட்டமன்றப் பேரவையின் மாண்புமிகு உறுப்பினருமான கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்கள் 7-8-2018 அன்று மறைவுற்ற செய்தியை அறிந்து, இப்பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத்துயரமும் கொள்கிறது. மறைந்த மாண்புமிகு கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்கள் தனது 14-வது வயதிலேயே சமூக இயக்கங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்; சமூக நீதிக்காகப் போராடியவர்; அரசியல் மட்டுமின்றி, தமிழ்த் திரைப்படங்களுக்குத் திரைக்கதை, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வசனங்களை எழுதி தனது திறமையை வெளிப்படுத்தியவர். தமிழ்மொழிமீது மிகுந்த பற்று கொண்டு இலக்கியம், நாடகம், கவிதை மற்றும் பத்திரிகை எனப் பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்து, அனைவராலும் பாராட்டப் பெற்றவர். மறைந்த முன்னாள் முதலமைச்சரும், 15-வது சட்டமன்றப் பேரவையின் உறுப்பின ருமான மாண்புமிகு கலைஞர் திரு. மு. கருணாநிதி அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்குப் பேரிழப் பாகும். அன்னாரை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும், அன்னாரது மகனும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கட்சியினருக்கும் இப்பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதா பத்தையும் தெரிவித்துக்கொள்கிறது.””
