கல்வி புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர் துணைவேந்தர்கள் புகழ் வணக்கம்
முனைவர் இராஜேந்திரன் செம்மொழி தமிழ் வணக்கம்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே! நீங்கள் வாழ்ந்த நிமிடங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் வழிகாட்டும், உங்கள் வாழ்க்கை எப்போதும் படிக்கவேண்டும் என்பதைச் சொல்லித் தருகிறது. கம்பர் இறந்தபோது தமிழ்த்தாய் நூல் இழந்தாள் என்றதைப் போல, கார்ல் மார்க்ஸ் இறந்தபோது மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்றதைப் போல, தந்தை பெரியார் மறைந்தபோது பெரியார் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டார் என்றதைப் போல உங்கள் மறைவைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் நீங்கள் படிப்பதை நிறுத்திக் கொண்டீர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில், நீங்கள் படிக்க முடியாதபோதும் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள்.
முனைவர் மு.ஆனந்தகிருட்டிணன் நான் வியந்த கலைஞரின் கல்வி சாதனைகள்
கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி இன்று தமிழகத்தில் மிகப்பெரிய கல்விப் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது. பொதுநூலகத்துறை கலைஞர் ஆட்சிக்காலத்திலேயே உயிர் பெற்றது. தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்ததன் மூலம் அதன் தொன்மத்தையும் வளத்தையும் கலைஞர் உலகிற்கு அறிவித்தார். அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழகத்துக்குக் கலைஞர் ஆற்றிய எண்ணற்ற சாதனைகளின் அடையாளங்கள். கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்றால் கல்வியாளர்கள் பெருமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆழ உணர்ந்தவர். கல்வியாளர்கள் அவரைக் காணச் செல்லும் போதெல்லாம், எழுந்து நின்று கைகூப்பி வரவேற்பார். சில நிமிடங்களுக்கு மேல் காக்க வைக்கமாட்டார்.
முனைவர் சே.சாதிக் கலைஞரின் தாக்கம்
கலைஞரின் 94 ஆம் அகவையில் அவரின் ஆக்கபூர்வப் பங்களிப்பைத் தொகுக்கும் பணியில் “சிறுபான்மையினருக்குக் கலைஞரின் பங்களிப்பு” என்று எழுதும் வாய்ப்பைத் தளபதி எனக்குத் தந்தார். அதை முடித்துக் கொடுத்துள்ளேன்.இதுவரை இஸ்லாமியத் துணைவேந்தர்கள் 5 பேர் நியமனம் பெற்றுள்ளனர். அதில் 4 பேரைக் கலைஞரே போட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. கலைஞரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
முனைவர் ஔவை நடராசன் அவர் புகழை போற்றும் அறிவுலகம்
உலகின் ஏழு அதிசயங்கள், என்னவென்று கேட்டால், கட்டடங்கள்தான், சிலைகள்தான். தமிழகத்தில் எட்டு அதிசயங்கள் நிகழ்ந்தன. திருவள்ளுவர் கோட்டம், தென்குமரியில் திருவள்ளுவர் சிலை, இணையப் பல்கலைக்கழகம், பூம்புகார் கலைமாடம், அண்ணா நூலகம், ஓங்கிய தலைமைச் செயலகம், கடற்கரையில் சிலைகள், வழக்குரைக்கும் கண்ணகியின் வடிவம் என்று எட்டல்ல அந்தச் சிலைகள் கலைகள். கல்வியின் நிலைகள், நம் கண்முன் நிற்கின்றன.கல்வியாளர்களுக்கு, மாணவர்களுக்கு, தமிழினத்துக்கு ஒவ்வொரு சிலையும் பாடநூல்கள் தான். தமிழகத்தின் புலமை கலைஞரை எப்போதும் போற்றிப் புகழும், பாராட்டி மகிழும்.
முனைவர் பொற்கோ மாமனிதர் கலைஞர்
மொழியும் இலக்கியமும் இலக்கிய வாணர்களும் கலைஞர்களும் செல்வாக்குப் பெற இவரைவிட முனைப்புடன் துணை நின்றவர்கள் வேறு யாராவது உண்டா? பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத எளிய மக்களுக்கும் இந்திய நாட்டின் பழம்பெரும் நூலான தொல்காப்பியத்தை அறிமுகப்படுத்தியவர் யாராவது உண்டா? தமிழ் மக்களின் வரலாற்றுச் சிறப்பையும் பண்பாட்டுச் சிறப்பையும் பாதுகாக்கும் முறையில் வியக்கத்தக்க
அடையாளச் சின்னங்களை எழுப்பியவர்களாக ஆட்சியாளர்களில் யாரையாவது நினைக்க முடிகிறதா? கலைஞர்தான் முன்னால் வந்து நிற்கிறார்.
முனைவர் க.திருவாசகம் கலைஞருக்கு புகழஞ்சலி
நாடற்றவர் நலமற்றவர் நலிவுற்றவர் பாடற்றவர் பணியற்றவர் பாழ்பட்டவர் வீடற்றவர் விதியற்றவர் வீழ்வுற்றவர் காடற்றவர் கழனியற்றவர் கல்வியற்றவர் கலைஞரின் ஆட்சியில் சீர்பெற்றனர் சிறப்புற்றனர். அவர்களின் அத்தனை பேரின் சார்பாகவும் கலைஞருக்குப் புகழஞ்சலி.
முனைவர் M.பொன்னவைக்கோ கனித்தமிழ் வளர்த்த கலைஞர்
கலைஞர் இல்லையென்றால் இன்றைக்குக் கனித்தமிழ் இல்லை, கலைஞர் இல்லையென்றால், இணையத்திலும், கணினியிலும் தமிழ் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கும்., இணையத்தில், கணிப் பொறியில் தமிழ்த் தகவல் தொழில் நுட்பப் பணிக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கலைஞர் அவர்களுடைய தலைமையிலே ஒரு பணிக்குழுவை உருவாக்கி; அதற்கு அய்யா ஆனந்தகிருஷ்ணன் அவர்களைத் துணைத் தலைவராக நியமித்தார்கள். அந்தப் பணிக்குழு தொடங்கியவுடனே ‘பள்ளிக் குழந்தைகள் பள்ளிகளில் கணிப்பொறியைத் தமிழில் பயில வேண்டும், அதற்கான பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும், புத்தகங்கள் உருவாக்க வேண்டும்’ என்று அந்தப் பணிக்குழு முடிவு செய்தது. அதற்கெல்லாம் வித்திட்டவர் கலைஞர்.
முனைவர் ப.நாகபூஷணம் மனித உரிமைக் கல்வி போராளி
Human Rights, Human Values ஆகியவற்றை உணரவும் காக்கவும் இன்றியமையாத கல்விக்கென மூதறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், விலங்கியல் மருத்துவக்கல்லூரி பல்கலைக்கழகமாகப் பரிமளித்தது, அண்ணா பல்கலைக்கழகமும் அதன் விரிவாக்கமும் எனப் பல்வேறு சிறப்புப் பாட அடிப்படையில் பற்பல உயர் கல்விக்கூடங்கள் அமைத்த பெருமையும் பெருமிதமும் அவருக்கே உரித்தானது.
முனைவர் பி.மன்னர் ஜவகர் வியக்க வைத்தவர் கலைஞர்
கலைஞர் அவர்கள் ஒரு நாள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்தார்கள். அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படி மாணவர் சேர்க்கை நடக்கிறது என்பதை மிகவும் கவனமுடன் கேட்டறிந்தார்கள். அது மட்டுமல்லாமல் அங்கு உள்ள சில துறைகளையும் சுற்றிப் பார்த்தார்கள். அங்குப் பணிபுரியும் ஊழியர்களிடம் குறைகளைக் கேட்டார்கள். பின்னர், எல்லாத்துறைகளும் நன்றாக உள்ளன எனச் சான்றளித்து விட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றார். இது எனக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு ஊழியருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
முனைவர் நல்.இராமச்சந்திரன் கலைஞரின் தலைமைத்துவம்
இளையோருக்கு ஒரு காலப் பெட்டகம்
கலை நிகழ்ச்சியில் மாணவியர் பட்டமரம் துளிர்த்தது என்ற நாடகம் பெரியாரை மய்யப்படுத்தி மிகச் சிறப்பாக நடத்திக்காட்டினர். அதனைத் தொடர்ந்து தொடக்கவிழா உரையாற்றிய கலைஞர் அவர்கள் பட்டமரம் துளிர்த்தது, அது தொடர்ந்து வளரும், காய்க்கும், கனி தரும் உலகின் முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி என்று சொல்லி, இந்தக் கல்லூரி பின்னாளில் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயரும் என்றார். யாருக்கும் அந்த வார்த்தை தெரியாமல் வினவக்கூடிய அந்நாளில் அப்படி ஓர் சொல்லாக்கத்தைத் தந்தவர் கலைஞர். இன்று அது உண்மையாக வெளிப்பட்டு அனைவரும் அறியும் வண்ணம் ஒளி வீசிக்கொண்டுள்ளது.
முனைவர் கி.கருணாகரன் உயர்கல்வித் துறைக்கெனத் தனி அமைச்சகம் தந்தவர்
பொறியியல் கல்வி என்பது பரவலாக்கப்பட வேண்டும் என்று கலைஞர் கண்ட கனவே, கோவையிலும், திருச்சியிலும், மதுரையிலும், நெல்லையிலும் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களை உருவாக்கியது. இதனால் பல இலட்சக்கணக்கான மாணவர்களும், ஆய்வாளர்களும் பயன் பெற்றனர்