முத்தமிழ் வித்தகர் கலைஞர்! இலக்கியவாதிகள் புகழ் வணக்கம்
கவிஞர் மு.மேத்தா
உலகத்திலே தன் மூச்சுள்ள அளவும், பேச்சுள்ள அளவும் தமிழுக்காகப் போராடிய ஒரே தலைவர் கலைஞர்தான். நாங்கள் தமிழைப் பேசுகிறோம்; எழுதுகிறோம், அதனால், எங்களை நீங்கள் இங்கே உட்கார வைத்திருக்கிறீர்கள். மொழி எங்களுக்கு நாற்காலி கொடுத்திருக்கிறது. ஆனால், கலைஞர் ஒருவர்தான் மொழிக்குச் சிம்மாசனம் கொடுத்தவர். ‘செம்மொழி’ என்ற சிம்மாசனத்தைத் தமிழுக்குக் கொடுத்தவர் கலைஞர்.
கவிஞர் கலாப்ரியா
கலைஞர் அவர்கள் முழுவதும் மரபு சாராமல், முழு வசன நடையும் இல்லாமல் ஒரு புதுமையான நடையில் 1944லேயே எழுதினார். அதனை அன்றைய கவிஞர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவரே சொல்லியிருக்கிறார், ‘என் கவிதை யாப்பின்றிப் போனாலும் போகட்டும். என் நாடு – மொழி – இனம் – மான உணர்வெல்லாம் காப்பின்றிப் போகக்கூடாது’ என்று. ஆனால், அவருடைய கவிதைகள்தாம் கவியரங்கத்திற்குப் புதிய ஒரு வடிவத்தைக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.
கவிஞர் அறிவுமதி
திராவிட இயக்கம் என்பது கைநாட்டுப் பேர்வழிகளைக் கையெழுத்துக்காரர்களாக்கிய வரலாற்று இயக்கம். அய்யா கலைஞர் அவர்கள் தம் வாழ்க்கையின் நீளத்தில் தமிழின் நீளத்தையும், தமிழரின் நீளத்தையும் நமக்கு உழைத்துக் கொடுத்தவர். இப்போது நம்மைக் கழுகுகள் சூழ்ந்திருக்கிற நேரம். இந்த நேரத்தில் தமிழர்கள் நாம், தி.மு.கழகத்தை அமர வைக்க வேண்டிய இடத்தில் அமர வைக்கவேண்டும்
எழுத்தாளர் சா.கந்தசாமி
கலைஞர் அவர்கள் தமது மேதைமையைத் தமிழ் மூலமாகச் சொல்லி யிருக்கிறார். அவர் அளவுக்குத் தமிழ்நாட்டில் தமிழுக்கு எந்த முதலமைச்சரும் செய்தது கிடையாது. அந்த வகையில், தமிழ்நாடு கண்ட சிறந்த முதலமைச்சர் என்று சொன்னால் அது அவரேதான். எல்லாப் பணிகளையும் நேர்மையாகச் செய்யக்கூடியவர். அவர் தமிழர் – திராவிடர் – இந்தியர். எனவே, கலைஞருக்குப் ‘பாரத ரத்னா’ பட்டம் அளித்துச் சிறப்பிக்க வேண்டும்.
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன்
வள்ளுவர் கோட்டம் என்பது கலைஞரின் கனவு. அங்கு நிற்கக்கூடிய அந்தத் தேர், தமிழ்த் தேர். அங்குச் செதுக்கப்பட்டிருக்கும் அந்தக் குறள்கள் தமிழனின் பெருமையைச் சொல்லக் கூடியவை. ஆசை ஆசையாக – ஒவ்வொரு கல்லாகப் பார்த்து அவர் கட்டிய வள்ளுவர் கோட்டத்தினைத் திறக்கும்போது அவர் அழைக்கப்படவில்லை. இந்தத் தமிழினம் இப்படியே தம்மை விட்டுவிடுமா என்று அவர் நினைத்தார் இல்லை; அப்படி விட்டுவிடாது என்பதற்கு
அடையாளமாகப் பின்பு, அதே அரங்கில் அவர் முதலமைச்சராகப் பதவியேற்றார். தமிழர்கள் தமிழுக்கு நன்மை செய்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். குமரி முனையில் அவர் வைத்த வள்ளுவர் சிலை உயரமாக நிற்கிறதே, அதைவிட உயரமாகத் தமிழ் மக்களின் மனதில் கலைஞர் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார்.
எழுத்தாளர் வசந்தி
எங்கள் பத்திரிகையின் தமிழ்ப் பிரதியில் கலைஞரைப் பற்றிய கட்டுரை வந்தது. அது அவரைக் கோபப்படுத்தலாம் என்று நினைத்தேன். சனிக்கிழமையன்று தமிழ்ப் பிரதி வந்தது.
ஞயிறன்று முரசொலியில் வரும், ‘புதையல்’ இணைப்பு இதழில் எல்லாப் பக்கங்களிலும் என்னைக் கிழி கிழியென்று கிழித்துவிட்டார்கள். நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஆங்கிலப் பதிப்புக்குக் கலைஞரின் பேட்டி ஒன்று தேவைப்பட்டது. கோபாலபுரத்தின் மாடியில் இருக்கிறோம். கட்டுரை பற்றி நேரில் என்ன கேட்பாரோ, என்ன பதில் சொல்வது என்ற படபடப்பில் காபியைக் கூட குடிக்க முடியவில்லை. அவரோ, ஒரே வரியில் அவர் என்னைச் சமாதானப்படுத்திய பாங்கு அசத்தலாக இருந்தது. அதற்கப்புறம் நான் அவருக்கு அடிமை.
எழுத்தாளர் சு.வெங்கடேசன்
குமரி முனையில் வள்ளுவருக்குச் சிலை வைப்பது, ஆசியாவிலேயே மிகப்பெரிய பொது நூலகமாக அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் இவையெல்லாம் அமைக்க வேண்டும் என்ற எண்ணமும் கனவும் ஓர் எழுத்தாளனாக இருந்தால்தான் முடியும். அதை நிறைவேற்றியவர் கலைஞர். தமிழ்ப் படங்களில் நீதிமன்றக் காட்சி என்றால் 600 அடி வைப்பதுதான் மரபு. ஆனால், முதன்முறையாக அந்த மரபை மீறி பராசக்தியில் 2000 அடி வைத்தார் கலைஞர். அந்த நீதிமன்றக் காட்சி அவர் வாழ்வின் கடைசி நாள் வரை நீண்டது. அவர் நினைவிடத்தில், முகம் தெரியாத ஒருவன் காலை 5 மணிக்குப் போய் 3 செய்தித்தாள்களை வாங்கி, அங்கே போய் வைத்துவிட்டு வந்திருக்கிறான். பேனாவுக்கும் பேப்பருக்கும் இடையில் இருந்ததுதான் கலைஞரின் உலகம்.
எழுத்தாளர் இமயம்
தமிழ் ஒரு செம்மொழி. அந்தச் செம்மொழியைக் கலைஞர் பயன்படுத்தியது மட்டுமல்ல, கடைக்கோடித் தமிழனும் அந்தச் செம்மொழியின் சிறப்பை உணர்ந்து பேசுகிற ஒரு வல்லமையை உருவாக்கினார். அவர் தம் கொள்கையிலிருந்து 80 ஆண்டுகள் மாறவேயில்லை. சமரசம் செய்து கொண்டதேயில்லை. ஆட்சி நிர்வாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசிடமிருந்து பல அரிய திட்டங்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால், எழுத்தில் ஒரு முறை கூட அவர் சமரசம் செய்து கொண்டதேயில்லை.
கவிஞர் பா.விஜய்
கலைஞர் நினைவிடத்திற்குச் செல்லும்
அறிவாலயத் தோழர்களே
அவர் கல்லறை கால்மாட்டை
கண்ணீரால் கழுவாதீர்
எவர் தம் முன் அழுதாலும்
துடைக்க வரும் தலைவர் விரல்
தனக்காக அழும் விழியைத்
துடைக்காமல் போனதினால்
மரித்தாலும் அவர் விழியில் நீர்
துளிர்த்தாலும் துளிர்த்து விடும்
அதனால் அவர் கல்லறைத் தோட்டத்தைக்
கண்ணீரால் கழுவாதீர்.
வழக்கறிஞர் அ.அருள்மொழி
திராவிட இயக்கத்தின் சிந்தனையுடன் இராவணனின் புகழைப் பரப்பும் வகையில் படைப்புகளைத் தந்த, இராவண காவியத்தைப் பரப்பியவர் கலைஞர். காலத்திற்கேற்ற வகையில் தமிழை வளர்த்தவர். மூன்று தமிழோடு நிற்கவில்லை. இன்றைய இளைஞர்கள் கையில் உள்ள அலைபேசியில் தமிழில் அச்சிடுகிறார்களே அதற்கு வித்திட்டு, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கி, அறிவியல் தமிழை வளர்த்த பிதாமகன் கலைஞர். அவர் வளர்த்த இன்னொரு தமிழ் சமத்துவத் தமிழ் – ஒற்றுமைத் தமிழ். இந்த இயக்கத்தில் மட்டும்தான் யார் என்ற அடையாளம் தேவையில்லை. தமிழன் என்ற பெயர் மட்டுமே போதுமானது. பிரிக்கின்ற மற்றவைகளையெல்லாம் தூரவைத்து, இணைக்கும் மொழியை மட்டுமே அருகில் வைத்து, ஒற்றுமைத் தமிழை உருவாக்கி, இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் கலைஞர்.
கவிஞர் ஷாஜாகனி
இந்த இனம் செல்லக்கூடிய இலக்கு எது என்பதைச் சரியாக இயம்பக்கூடிய இலக்கியத்தைக் கலைஞர் எழுதினார். அவர் காகிதத்தில் எழுதியது, தலைமுறை தலைமுறையாக அடிமைப்பட்டிருந்த மக்களுக்கு எழுச்சியைத் தந்தது. அவர் களத்தில் எழுதியவை போராட்ட உணர்வைக் கூர்மைப்படுத்தின. இவற்றுடன், அவர் போர்க்குணமிக்க தொண்டர்களையும் பகுத்தறிவுக் கொள்கை வழியிலான சிந்தனையாளர்களையும் உருவாக்கியிருக்கிறாரே அது, அவர் சதை வடிவில் எழுதிய கவிதை காகிதத்தில், களத்தில், சதையில் என மூன்று வகையாகத் தம் படைப்புகளைத் தந்திருப்பவர் கலைஞர்.