தெற்கில் உதித்தெழுந்த சூரியன்! தேசிய தலைவர்கள் புகழ் வணக்கம்
திரு.எச்.டி.தேவேகவுடா, முன்னாள் பிரதமர், மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்குத் துணையாக நின்று பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையைச் செயல்படுத்த உதவியவர் கலைஞர். என்னைப் பிரதமராக்கியதில் கலைஞருக்குப் பங்கு உள்ளது. என்னைப் பிரதமராகக் கூறியபோது நான் தயங்கினேன். இருப்பினும் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத கூட்டணி அமைந்தது. அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் கலைஞர். எனது அரசுக்கு மட்டுமின்றி, ஐ.கே. குஜ்ரால் அரசு, வாஜ்பாய் அரசு, மன்மோகன்சிங் அரசுகளுக்கும் ஆதரவு அளித்து மத்தியில் 20 வருடங்கள் நிலையான ஆட்சி அமையக் காரணமாக இருந்தவர் கலைஞர்.
திரு.நிதின் கட்கரி, பாரதிய ஜனதா கட்சி
கலைஞரை, தமிழ்நாட்டின் தலைவராகவோ ஒரு மாநிலத் தலைவராகவோ, பார்ப்பது முற்றிலும் நியாயமற்றது. மிகப்பெரிய தேசியத் தலைவரான கலைஞர் ஆற்றிய பணிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது மறைவிற்குப் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இரு அவைகளிலுமே உறுப்பினராக இல்லாத ஒருவருக்குப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இப்படியொரு கௌரவம் அளிக்கப்பட்டது வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொள்கைகளையும், அரசியல் நிர்பந்தங்களையும் லாவகமாகக் கையாண்டு முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதில் மிகச்சிறந்த தொலை நோக்குப் பார்வை கொண்டவர் தலைவர் கலைஞர். நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டவுடன் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தைக் கலைஞர் மெரினாவில் ஏற்பாடு செய்தார். அவரது ஆட்சியையே விலையாகக் கொடுத்தார். எங்களின் ஒப்பற்ற தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களும் கலைஞர் அவர்களும் நாட்டின் பொதுப் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளார்கள்.
திரு.குலாம் நபி ஆசாத், இந்திய தேசிய காங்கிரஸ்
இந்தியாவின் மாபெரும் தலைவர் கலைஞர். கூட்டணி ஆட்சி நிலைபெறப்பாடுபட்டபோதும் கொள்கைகளை விட்டுத் தராதவர். வாஜ்பாய் அரசை அவர் ஆதரித்த காலத்திலும் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தின் அடிப்படையில் தம் கொள்கைகளை நிலை நாட்டியவர். சமூகநீதிக் கொள்கையில் அழுத்தமான பிடிப்பு கொண்டவர். தென்னிந்தியாவில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு வழங்கிய முதல் தலைவர் அவர்.
திரு.நிதிஷ் குமார், பிஹார் முதலமைச்சர்
கலைஞர் கருத்துச் சுதந்திரத்தின் காவலர். ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலர். சமூகச் சீர்திருத்தவாதி. தீண்டாமை, ஜமீன்தாரி ஒழிப்பு முறை, மதத்தின் பெயரால் நடைபெறும் போலித்தனங்களுக்கு எதிராகவும், விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தவர். சுயமரியாதை இயக்கத்தி லிருந்து வந்த கலைஞர் பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை தரும் சட்டம் இயற்றினார். அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றை அளித்ததோடு மட்டு மின்றி, பெண்கள் பொருளாதாரச் சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காகவும் 1989-லேயே மகளிர் சுய உதவிக்குழுக்களைத் துவங்கியவர்.
திரு.பாரூக் அப்துல்லா, தேசிய மாநாடு கட்சி, ஜம்மு – காஷ்மீர்
ஜனநாயகத்தின் தந்தையாகவும், நம் அனைவருக்காகவும் போராடிய ஒரு தந்தையுமான மாமனிதரை நினைவுகூர்வதற்காக இங்கே வந்திருக்கிறேன். எந்த மாநிலத்தவராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், என்ன நிறம் கொண்டவராக இருந்தாலும் அவர்கள்
அனைவரையுமே சமமாகக் கருதி அன்பு செலுத்தியவர் கலைஞர். அவரைப் பொருத்தமட்டில் அனைவரும் சமம். அத்தகைய கலைஞரின் சகாப்தத்தை இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன். இந்த மேடையில் இருக்கும் நாம் அனைவரும் ஜனநாயகத்தையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாப்பதற்குப் பாடுபட வேண்டும். அதுதான் கலைஞருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
திரு. பிரபுல் பட்டேல், தேசியவாத காங்கிரஸ்
தாங்கள் வாழ்வதற்காக உலகத்தில் பிறப்பவர்கள் உண்டு. ஆனால், மக்களை வாழ வைக்கவும், அவர்களின் தலையெழுத்தை மாற்றி முன்னேற வைக்கவும் உலகத்தில் பிறந்தவர் கலைஞர். சென்னை மற்றும் மதுரை விமான நிலைய நவீனமயமாக்கல் நடைபெற்ற நேரத்தில் நான் விமானத்துறை அமைச்சராக இருந்தேன். கலைஞர் அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்தார். எனக்கு அவரைச் சந்திக்கவும், கலந்து ஆலோசிக்கவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வயதில் அவருக்கு இருந்த திடமான மன உறுதியையும், நவீன சிந்தனை மிக்க திறன்களையும் நான் எண்ணி எண்ணி வியந்தேன். கலைஞருக்குத் தமிழகத்தை மட்டுமல்ல; இந்தியாவை முன்னேற்றுவதற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வை இருக்கிறது என்பதை அந்தச் சந்திப்பில் புரிந்துகொண்டேன். அதனால் தான் கலைஞர் போன்ற தலைவர்கள் ஒவ்வொரு நாளும் பிறப்பதில்லை. கலைஞர் வாழ்நாள் முழுவதும் ஓய்வறியாமல் உழைத்தவர். ஜாதி, ஏழ்மை, சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து, நாட்டின் சிந்தனையோட்டத்தை மாற்றியவர் கலைஞர்
திரு. சீதாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர், சி.பி.எம்
கலைஞர் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்தவர். பெரியார், அண்ணா ஆகிய பெரிய தலைவர்களுடன் பணியாற்றியவர். சமூக நீதிக்காகப் போராடியவர். சுயமரியாதைக்கும், பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கப் போராடியவர். இந்தியக் குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும், ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர் களை உயர்த்தியவர். தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை. கலைஞர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை. அவரின் தமிழ் மட்டும் பிரபலம் அல்ல. அவரின் நகைச்சுவை உணர்வும் ரசிக்கத்தக்கது.
திரு. சுதாகர் ரெட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
நாட்டின் முன்னோடித் திட்டங்களை எல்லாம் விஞ்சும் வகையில் மனிதர்கள் மனிதனை வைத்து இழுக்கும் கைரிக்ஷாவை எடுத்த எடுப்பிலேயே ஒழித்தும், குடிசை மாற்று வாரியங்களைத் தோற்றுவித்தும், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியும் ஏழ்மையை ஒழிக்க அவர் அறிவுபூர்வமான திட்டங்களை நிறைவேற்றியவர். உலகச் செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்தி தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீத வேலை வாய்ப்பு என்று அறிவித்து தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்தார். கலைஞர் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; மதச்சார்பின்மைக்காக இறுதி வரை போராடியவர்.”
பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன், தலைவர், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
“இங்குள்ள அனைவரும் கலைஞர் அவர்களுக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா விருது’ வழங்கித் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். கலைஞர் அவர்கள், ‘பாரத ரத்னா விருது’ பெறுவதற்கு மட்டுமல்ல; உலக அளவில் ‘நோபல் பரிசு’க்கு மேலும் ஒரு பரிசு இருக்குமென்றால் அதையும் அளிக்க வேண்டிய தகுதியும் அறிவாற்றலும் மிகுந்தவர்.”
திரு.சோம்நாத் பாரதி, ஆம் ஆத்மி
“மாநிலத்திற்கு ஆளுநர் பதவி தேவை யில்லை என்று போர்க்குரல் எழுப்பியவர் கலைஞர். ஆளுநர் பதவி ஒழிக்கப்பட்டிருந்தால் புதுச்சேரி முதல்வரும், டெல்லியில் ஆட்சி செய்யும் நாங்களும் இன்றைக்கு மகிழ்ச்சியுடன் இருந்திருப்போம். ஆளுநர் பதவி வேண்டாம் என்று நீண்ட காலத் திற்கு முன்பே குரல் கொடுத்த கலைஞருக்கு டெல்லி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் கலைஞர். அவரது சாதனைகள் தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டியது. உண்மையில் சொல்லப் போனால் பாரத மாதாவின் உண்மையான மகன் கலைஞர்.
திரு.வி.நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்திய நாட்டிலே இருக்கின்ற அனைத்துத் தமிழர்களும் – உலகத்தில் எங்குத் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு ஓர் இன்னல் என்கிறபோது கலைஞர் அவர்களின் குரல் முதலில் ஒலித்திருக்கிறது என்பதைச் சரித்திரம் கூறிக்கொண்டிருக்கிறது. ‘மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் சென்று பறைசாற்றிய தலைவர். இந்திய அளவில் 50 சதவீத இட ஒதுக்கீடு இருந்தபோது, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொடுத்துச் சரித்திரம் படைத்தவர் தலைவர் கலைஞர்.
திரு.டி.ராஜா தேசிய செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
காலம் முழுவதும் தலைவர் என்றுதான் அதிகம் அழைத்திருக்கிறேன். ‘அப்பா’ என்று ஒருமுறை நான் அழைத்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டது, ஏதோ ஒரு தனி மனிதனின் குரலாக நான் பார்க்கவில்லை. அது தமிழ்ச் சமுதாயத்தின் குரலாக நான் பார்க் கிறேன். கலைஞர் ஒரு கட்சிக்குச் சொந்தமானவர் அல்ல; கலைஞர் தமிழ்கூறும் நல்லுலகிற்குச் சொந்தமானவர், இந்தியா முழுவதுக்கும் சொந்தமானவர், இன்னும் சொல்லப்போனால் கலைஞர் மானுடம் முழுவதற்கும் சொந்தக்காரர். ‘மெட்ராஸ்’ என்பதை ‘சென்னை’ என்று மாற்றியவர் கலைஞர். ஆகவே, சென்னை என்று இருக்கும் வரை அது கலைஞரின் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.
திரு.டெரிக் ஒப்ரைன், திரினாமுல் காங்கிரஸ்
கலைஞரே கூட்டாட்சி அமைப்பைப் பற்றிச் சிந்தித்தார். மாநில சுயாட்சிக்கும், கூட்டாட்சி அமைப்பிற்கும் அவர் முன்னுரிமை தந்தார். இந்தியப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் பல மாநிலப் பட்டியலின் அதிகாரங்களுக்குள் வரவேண்டும் என்று குரல் கொடுத்தவர். மத்திய அரசின் மொழித் திணிப்பைக் கலைஞர் எதிர்த்தார். அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதை, உரிமை வேண்டும் என்று வாதாடினார். கலைஞர் ஒரு பகுத்தறிவு வாதி. நவீன சிந்தனை கொண்ட ஒரு மாமனிதர். கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும்.
திரு.ஒய்.சவுத்ரி, தெலுங்கு தேசம் கட்சி
கலைஞரின் சில பொன்மொழிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒன்று ‘நான் எப்போதும் ஓய்வுக்கு ஓய்வு கொடுப்பவன்.’ தீவிர அரசியலில் இருந்து நான் ஓய்வுபெற மாட்டேன். இரண்டாவதாக, ‘புத்தகங்கள் படிப்பது உலக அறிவைக் கொடுக்கும். ஆனால், உலக அறிவைப் புத்தகமாகப் படித்தால் அனுபவம் கிடைக்கும்.’ மூன்றாவதாக ‘புனிதமற்ற கூட்டணி பேரழிவைத் தரும்’ – இந்த மூன்றும் கலைஞர் அவர்கள் கூறிய பொன்மொழிகள். கலைஞர் கொள்கை வாதி, அரசியல்வாதி, எழுத்தாளர், சமூகச் சீர்திருத்தவாதி, பேச்சாளர், பண்டிதர், நிர்வாகி என்ற பன்முகத்தன்மை கொண்டவர். ஒவ்வொரு முறை ஆட்சியில் இருந்தபோதும் குறிப்பிடத் தக்க திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர். நிலைத்த சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர் தலைவர் கலைஞர்.