முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகாலத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் முதலமைச்சர் கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களுடைய மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் தனது முத்திரையைப் பதித்தவர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராட்டத் தக்க அளவில் பணியாற்றியிருக்கின்றார். அவர் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட சில திட்டங்களையும், இயற்றப்பட்ட சில சட்டங்களையும், மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மக்கள் நலன் கருதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்கள் வரவேற்றிருக்கின்றோம். அதேசமயத்தில், கொள்கை ரீதியில் மாறுபாடு இருக்குமேயானால், அதனை நாங்கள் எதிர்த்தும் இருக்கின்றோம்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அதேபோல நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், நானும் 1989 ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இம்மாமன்றத்தில் காலடி எடுத்து வைத்த போது, கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். அப்போது நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில், சட்டமன்றப் பேரவை உறுப்பினர்
திரு. ஆர். சிங்காரம் அவர்கள் உரையாற்றியபோது, சட்டமன்ற உறுப்பினர்கள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக இங்கே அறிவித்திருக் கிறார்கள். இது ஒரு அரை இலட்சம்தான், ஆனால், நம்முடைய லட்சியம் லட்சம். இந்த லட்சத்தை வருகின்ற சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே லட்சியமாக அறிவிப்பதற்கும், இன்னும் பல கோரிக்கைகளைச் செய்வதற்கும் நம்முடைய முதல்வர் அவர்கள் காத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். உடனே பதிலளித்த அன்றைய மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள், “”””என்னுடைய லட்சியம் உறுப்பினர் திரு. சிங்காரம் அவர்கள் நீண்ட காலம், பல ஆண்டு காலம், பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு வாழ வேண்டும் என்பதுதான்”” என்று சொன் னார்கள். கோரிக்கையை அப்போது ஏற்கவில்லை என்றாலும், கோரிக்கை வைத்தவர்கள் மனம் மகிழ்கின்ற வகையில் பதில் சொல்கின்ற வல்லமை பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். எளிய தோற்றம், இனிய பண்பு, எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய குணம் அவரிடம் அமைந்திருந்தது.
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த திரு. ஜவஹர்லால் நேரு முதல் தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி வரை அனைத்துப் பிரதமர்களையும் கண்ட பெருமை அவருக்கு உண்டு.