மகத்தான தலைவர்களில் முதன்மையானவர்!
திரு.ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர்
கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். ‘கலைஞர்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமை மிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்கலை அவரின் குடும்பத்தாருக்கும் மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு.வெங்கையா நாயுடு
குடியரசுத் தலைவர்
இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்து, 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை முதல்வராகவும் கருணாநிதி செயல்பட்டவர். அது மட்டுமில்லாமல், கலை, இலக்கியம், நாடகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனிமுத்திரை பதித்தவர் கருணாநிதி.தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழக மக்கள் முன்னேற்றத்துக்காகவும் கடுமையாக உழைத்தவர். அவரின் மறைவு, நாட்டுக்குப் பேரிழப்பு, மிகச்சிறந்த நிர்வாகியை, சமூகத்தொண்டரை, எழுத்தாளரை நாடு இழந்துவிட்டது
திரு.நரேந்திர மோடி
பிரதமர்
கலைஞர் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் கலைஞர். ஏழை எளியோரின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட அவர் மக்கள் செல்வாக்கு மிக்கவர். ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். சிறந்த எழுத்தாளர்.
கலைஞர் கருணாநிதியோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சமூக நீதி நிலைபெறும் வகையில் மிகச்சிறந்த கொள்கைகளை வகுத்த
மேதைமை கொண்டவர் அவர். ஜனநாயக மாண்புகள் நிலைக்கும் வகையில் நெருக்கடி நிலையைத் துணிவோடு எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியதற்காக அவர் என்றும் சரித்திரத்தில் உயிர்த்திருப்பார்
தேச முன்னேற்றத்தோடு பிராந்திய பிரச்சினைகளைத் தீர்க்கவும் அரும்பாடுபட்ட தலைவர் கலைஞர் கருணாநிதி. தமிழர்கள் வாழ்வு மேம்படுவதையே இலக்காகக் கொண்டவர். எதிலும் தமிழகம் முதன்மை பெறுவதை உறுதிசெய்தவர்
இந்தத் துயர்மிகுந்த வேளையில் அந்த உயர்ந்த தலைவரின் குடும்பத்தாருக்கும் எண்ணிலடங்காத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரதத்திற்கும் தமிழகத்திற்கும் கலைஞரின் மறைவு பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
திரு.பிரணாப் முகர்ஜி
முன்னாள், குடியரசுத் தலைவர்
கலைஞர் அவர்கள் இறந்து விட்டார் என்ற தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில், அவரது மாநிலத்திலும், தேசிய அளவிலான அரசியலிலும் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கோலோச்சியவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை எண்ணும் போது கடினமாக உள்ளது.
60 ஆண்டுகளுக்கும் மேலாகசட்டமன்ற உறுப்பினராக, 5 முறை முதல் அமைச்சராக இருந்த அவர் மத்தியில் கூட்டணி ஆட்சிகள் அமைவதற்கு வலுவான தூணாகத்
திகழ்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, ஒரு நவீன இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய அங்கம் வகித்த வெகுசிலரில் கலைஞர் அவர்களும் ஒருவராக இருந்துள்ளார்.
அவரது மறைவின் மூலம் தமிழக மக்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்டு மக்களுமே ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட ஒருவரை இழந்துள்ளனர். அத்துடன் கூட்டாட்சியின் நெறிகளையும் முழுமையாக உணர்ந்தவர் அவர். என்னுடைய நண்பரும், அன்பிற் கினியவருமான கலைஞருடனான என்னுடைய தொடர்புகள் எப்போதுமே என்னிடத்தில் நினைவில் பசுமையாக இருந்து கொண்டே இருக்கும்.
திரு.மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர்
கலைஞர் அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற தகவல் அறிந்து நான் ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது மறைவின் மூலம் இந்த நாடு ஒரு மாபெரும் தலைவரை இழந்து விட்டது. அவர் ஒரு திறமைவாய்ந்த கலைஞர், சிறந்த எழுத்தாளர் என்பதோடு, சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் என்றென்றும் உழைக்கக் கூடிய ஒரு உன்னதத் தலைவர்.
பொது வாழ்வில் தன்னேரில்லா ஒரு சிறந்த தலைவர். இந்த நாட்டிற்கும் குறிப்பாக, தமிழக மக்களுக்கும் பன்முகத் தன்மைகளோடு செயலாற்றிய ஒரு சிறந்த நிர்வாகி. நான் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதால் கலைஞர் அவர்களை நான் பெரிதும் மதிப்பேன்.
இந்த நாட்டிற்கு அவர் செய்த சேவைகள் மூலம் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர் நினைவுகூரத்தக்கவராக இருப்பார்.
திருமதி.சோனியா காந்தி
தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி
அரசியல் உலகத்திலும், பொது சேவையிலும் உன்னதமான தலைவராக கலைஞர் இருந்தார். அவரது மறைவு, எனக்குத் தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. அவர் எப்போதும், என்னிடம் மிகுந்த அன்பையும், பரிவையும் காட்டியவர். அதை என்னால் மறக்க முடியாது. அவர் எனக்குத் தந்தையைப் போன்றும் இருந்தார்.
கலைஞர் போன்ற நபரை நாம் மீண்டும் பார்க்க முடியாது. அந்த அரசியல் மேதை, அவரது அர்ப்பணிப்பு ஆகியவை இல்லாதது இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் பெரிய இழப்பு.
கலைஞர் அவர்கள் மிகச்சிறந்த இலக்கியவாதி. தமிழகத்தை வளமாக்கியதிலும், பண்பாடு மற்றும் கலையை வளர்த்து
உலகளவிலான அங்கீகாரம் கிடைக்கச் செய்ததிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார்.
கலைஞர் அவர்கள் தமது நீண்ட சிறப்பான வாழ்க்கையில், சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும், தமிழகத்தின்
வளர்ச்சிக்காகவும், பிற்படுத்தப்பட்ட ஒவ்வொரு வரின் நலனுக்காகவும் பாடுபட்டார்.
திரு.ராகுல்காந்தி
தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் மேடையில் ஒரு பிரம்மாண்டமாக இருந்து செயல்பட்டவர் கலைஞர். தமிழக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். அவரது மறைவால் இந்தியா ஒரு பெரிய புதல்வனை இழந்துவிட்டது.
அவரது மறைவுக்காக என்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கும், அவரால் விரும்பப்பட்ட லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.எல்.கே.அத்வானி
மூத்த தலைவர், பாரதிய ஜனதா கட்சி
மிக மூத்த அரசியல் தலைவரான கலைஞர் கருணாநிதி உயர்வான குறிக்கோள்களைக் கொண்டு இருந்தார். அரசியலில் மட்டுமல்ல தமிழுக்காகவும் சிறப்பான பணிகளை ஆற்றி உள்ளார்.
திரு.அமித்ஷா
தலைவர், பாரதிய ஜனதா கட்சி
நெருக்கடி நிலை காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் போராட்டத்தை யாராலும் மறக்க முடியாது.
திரு.சரத்பவார்
தலைவர், தேசியவாத காங்கிரஸ்
இந்திய அரசியல் சாம்ராஜ்யத்தில் வெகுஜன மக்களின் தலைவராக அவர் என்றும் நிலைத்து நிற்பார்.
திரு.டி.ராஜா
இந்திய கம்யுனிஸ்ட் கட்சி
80 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான கலைஞர் தமது வாழ்க்கையைத் தமிழகத்தின் வரலாறாக மாற்றினார்.
மார்க்சிஸ்ட் கட்சி
அரசியல் தலைமைக்குழு
நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக் காகவும் மாநிலங்களின் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் வீர முதல்வராக விளங்கி உறுதியுடன் போராடினார் கலைஞர். நாடு தழுவிய அளவில் கூட்டணி அரசியலை வடிவமைத்தத்திலும் முக்கியப் பங்கை ஆற்றினார். பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மை மாண்புகளை உயர்த்திப் பிடித்தவர் கலைஞர்.
திரு.குமாரசாமி
கர்நாடக முதலமைச்சர்
கலைஞரின் இழப்பு ஒட்டு மொத்த இந்திய தேசத்துக்கே பேரிழப்பு
திரு.சந்திரசேகர ராவ்
தெலுங்கான முதலமைச்சர்
அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஒரு சில தலைவர்களில் ஒருவரான கலைஞரின் இழப்பு பேரிழப்பு.
திரு.அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முதலமைச்சர்
தமிழர்களின் தலைவரான கலைஞர் மறைவு இந்த நாட்டிற்கே பேரிழப்பு
திரு.தேவேந்திர பட்நவிஸ்
மகாராஷ்டிரா முதலமைச்சர்
தமிழக அரசியலைப் புதிய திசைக்கு மாற்றிய புகழ்மிக்க தலைவர் கலைஞர்.
திரு.நிதிஸ்குமார்
பீகார் முதலமைச்சர்
ஜனநாயகத்தின் மதிப்பையே உச்சமாகக் கருதும் மிகப்பெரிய அரசியல் தலைவரை நாடு இழந்து விட்டது.
திரு.விஜய் ரூபானி
குஜராத் முதலமைச்சர்
கலைஞர் கருணாநிதி மறைந்துவிட்டார் என்ற செய்தியே என்னை வேதனையில் ஆழ்த்திவிட்டது.
செல்வி.மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சர்
இந்தியா மிகச் சிறந்த மகனை இழந்துவிட்டது. தமிழகம் தனது தந்தையை இழந்துவிட்டது.
திரு.பினராயி விஜயன்
கேரள முதலமைச்சர்
தேசிய அளவில் மிகச் சிறந்த அரசியல் தலைவர் கலைஞர். அவர் அரசியலுக்கு ஆற்றிய பணிகள் மட்டுமல்ல; இலக்கியப் பணிகளும் மறக்க முடியாதவை.
திரு.வி.நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சர்
இந்தியாவில் பல பிரதமர்களை உருவாக்கியவர் அவர். தமிழர்களின் பாதுகாவலராகப் போற்றப்பட்டார்.
திரு.சந்திரபாபு நாயுடு
ஆந்திரா முதலமைச்சர்
மூத்த திறமையான அரசியல்வாதியை நாம் இழந்துவிட்டோம். மக்கள் சேவையை இறுதிமூச்சாகக் கொண்டு உழைத்தவர் அவர். அவரது மறைவு எனக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.