தலைவர் மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன்! – திரு மு.க.ஸ்டாலின்
தலைவர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென்ற உணர்வோடு,இந்த அவசரச் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு தொடக்கத்திலேயே இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அத்தனை பேரும் எழுந்து நின்று நம்முடைய அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறோம்.
பின்னர், தலைவர் அவர்களோடுநெருங்கிப்பழகிய சிலமூத்த மாவட்டக்கழகத்தினுடைய செயலாளர்கள், இயக்கத்தினுடைய முன்னோடிகள் நேரத்தின்அருமையைக் கருதி குறிப்பிட்ட ஒரு சிலரைஅழைத்து அவர்களும் இங்கே உரையாற்றி,அதைத்தொடர்ந்து நம்முடைய துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்அவர்கள், அதற்குப் பின்னால் நான் உரையாற்றக்கூடிய நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது.நிறைவாக, நம்முடைய பொதுச் செயலாளர் உரையாற்ற வேண்டும் என்ற நிலையிலே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பேராசிரியர் அவர்கள், நான் பேச முடியாது, அந்தச் சூழ்நிலையில் நான் இல்லை. எனவே, யாரும் என்னைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று என்னி டத்திலே ஏற்கனவே சொல்லியிருக் கிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியவர் கள் எல்லாம் குறிப்பிட்டதைப்போல, தலைவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதை யாராலும் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, நீங்களெல்லாம் தலைவரை இழந்து இருக்கிறீர்கள், நான் தலைவரை மட்டும் அல்ல; தந்தையையும் இழந்து நான் நின்று கொண்டிருக்கிறேன்.
தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக, உடல் நலிவுற்ற நிலையில் தொண்டையிலே ஓர் அறுவை சிகிச்சை செய்துகொண்டு பேச முடியாத நிலையிலே இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அவருடைய அன்பைப் பெற்று, ஆதரவைப் பெற்று அவருடைய வாழ்த்துகளோடு, செயல் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொண்டு உங்களின் ஒத்துழைப்போடு கழகப் பணிகளில் நான் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்.
கட்சியின் வளர்ச்சிக்காக நடத்தப்பட்ட கள ஆய்வு!
அந்த அடிப்படையிலே ஒவ்வொரு மாவட்டமாக நான் ஆய்வு நடத்திட வேண்டுமென்று முடிவெடுத்து, கழக அமைப்புகளை அறிவாலயத்திற்கு இதே கலைஞர் அரங்கத்திற்கு அழைத்து, ஏறக்குறைய இரண்டு, மூன்று மாத காலம் நான் ஆய்வு நடத்தியிருக்கிறேன். கட்சியினுடைய வளர்ச்சிக்காக, கட்சியில் மேலும் புத்துணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அந்த ஆய்வு நிகழ்ச்சி நடந்தது.
அந்த ஆய்வின் ஒவ்வொரு கூட்டத்தி லும் ஒவ்வொரு மாவட்டக் கழக, நகரக் கழக, ஒன்றியக் கழக, பேரூர்க் கழக நிர்வாகிகளோடு நான் கலந்து பேசுகிறபொழுது நிறைவாக அவர்களுக்குச் சொல்லி அனுப்பியது, அனை-வரும் ஒற்றுமையாக இருந்து – ஒன்றுபட்டு உழைத்து – திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரக்கூடிய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை உருவாக்கி, மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை மலரச்செய்து அப்படி மலருகின்ற அந்தச் சாதனையைத் தலைவர் இடத்தில் கொண்டு சென்று ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்.அவருடைய காலத்திலேயே அவருடைய காலடியில் கொண்டுசென்று நம்முடைய வெற்றியைக் குவிக்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு கூட்டத்திலும் எடுத்துச் சொன்னேன்.
தலைவருக்கு அளித்த உறுதியைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு!
அண்மையில் ஈரோட்டில் நடை பெற்ற நம்முடைய மண்டல மாநாட்டில்கூட, நான் உரையாற்றுகிறபோது நிறைவாக குறிப்பிட்டுச் சொன்னேன் விரைவில் கழக ஆட்சியை உருவாக்குவோம் – ஆட்சியை தலைவருடைய காலத்திலேயே உருவாக்கி அவரிடத்தில் கொண்டுசென்று ஒப்படைப்போம் என்று சொன்னேன். ஆனால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற முடியாத நிலையிலே இன்று தவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற ஏக்கத்தோடு நான் நின்று கொண்டிருக்கிறேன்.
தலைவர் உடலை, அவரை உருவாக்கிய அண்ணன் கல்லறைக்குப் பக்கத்தில் கொண்டு சென்று அடக்கம் செய்திட வேண்டும் என்று நாமெல்லாம் முடிவெடுத்தோம். அது நம்முடைய முடிவல்ல – தலைவருடைய முடிவு! தலைவர் எண்ணிய எண்ணம்! அவருடைய ஆசை! அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகளில் நாம் ஈடுபட்டோம்.உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்ற கட்டம் வந்துவிட்டது. மருத்துவர்கள் எல்லாம் எங்களிடத்திலே வந்துசொல்லுகிறார்கள்.‘இவ்வளவு நேரம் தான் அவர் உயிர் இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது’ என்ற அந்த நிலை வருகிற போது இனி காப்பாற்றவே வழியில்லை, முடிந்த வரையில் நாங்கள் போராடி வருகிறோம் என்று டாக்டர்கள் கூறிய அந்தச் சூழ்நிலையில் நாங்கள் எல்லாம் கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.சோகத்திலே கண்ணீர் மல்க மருத்துவர்களோடுநாங்கள் பேசிக்கொண்டிருந்தாலும் நம்முடைய முன்னோடிகள் எல்லாம் தலைவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டுமே எப்படி நிறைவேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது பல நண்பர்கள் மூலமாகத் தமிழக அரசுக்குச் செய்தியைச் சொல்லி அனுப்புகிறோம்.
ஆனால் அங்கிருந்து எங்களுக்கு வந்த செய்திகள் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசையை நிறைவேற்ற முடியாத நிலையிலே தான் இருந்தது. அதற்குப் பிறகு நம்முடைய முன்னோடிகள் எல்லாம் என்னிடத்தில் சொன்னார்கள் நாம் நேரடியாக முதலமைச்சரைச் சந்திப்போம் சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தால் நிச்சயமாக அவர்கள் நிறைவேற்ற முன்வருவார்கள் என்று சொன்னபோது நான் தயாரானேன்.
தலைவருக்காக எதையும் இழக்கத் துணிந்தேன்!
அப்பொழுது நம்முடைய முன்னோடிகள் எல்லாம் சொன்னார்கள். நீங்கள் வரவேண்டாம் நாங்கள் போகிறோம் – நீங்கள் செயல் தலைவர் – நீங்கள் தலைவருடைய மகன் – நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் வரக்கூடாது. அவர்களைச் சந்திக்க நீ வரக்கூடாது என்று சொன்ன நேரத்தில் இல்லை இல்லை என்னுடைய மானம் மரியாதை கௌரவம் எது போவதாக இருந்தாலும் தலைவருக்காக நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன் வந்தே தீருவேன் என்று சொல்லி நாங்களெல்லாம் முதலமைச்சரைச் சென்று சந்தித்தோம். சந்தித்து எங்களுடைய கோரிக்கைகளை எடுத்துச் சொல்கிறோம்.
முதல்வரின் கரங்களைப் பற்றிக் கொண்டு வேண்டினேன்!
நம்முடைய கோரிக்கையை எடுத்துச் சொல்கிறபோது முதலமைச்சர் சொல்லுகிறார், விதிமுறைகளை முடக்க வாய்ப்பில்லை, நாங்கள் சட்ட ஆலோசனை கேட்டிருக்கிறோம். அவர்களும் மறுத்திருக்கிறார்கள் என்றார். நான் அப்போது சொன்னேன், அரசு போடக்கூடிய, அரசு எண்ணக் கூடிய அந்த எண்ணத்தைத்தான் சட்ட ஆலோசகர்கள் சொல்லுவார்கள். நாங்களும் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். ஆகவே, நீங்கள் கட்டாயம் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினோம்.
இன்னும் வெட்கத்தை விட்டுச் சொல்லுகிறேன், முதலமைச்சருடைய கைகளைப் பிடித்து நான் கெஞ்சிக் கேட்டேன், தலைவருடைய ஆசை – அந்த ஆசையை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுகிறோம், அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டேன்.
அப்பொழுதுகூட அவர்கள், சம்மதம் தெரிவிக்கவில்லை. கடைசியாக அங்கிருந்து எங்களை விரட்டிவிட வேண்டும் என்பதற்காக, பார்ப்போம் என்று ஒரு வார்த்தை சொன்னார்கள், அதை நம்பி நாங்கள் வெளியே வந்தோம்.
மருத்துவமனையிலே வந்து அமர்ந்து இருக்கிறோம். சரியாக 06.10 மணி அளவிலே தலைவர் கலைஞர் அவர்கள் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் எங்களிடத்திலே வந்து சொன்னார்கள். உடனடியாக, ஒரு கடிதத்தை எழுதி அண்ணன் துரைமுருகன் அவர்கள், மற்றும் நம் முன்னோடிகள் சிலரோடு அந்தக் கடிதத்தைக் கையில் கொடுத்து – முறையாகக் கேட்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் வீட்டுக்கு அனுப்பு கிறோம். எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்தோம். சென்றார்கள், அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்து விட்டார்கள், என்ன? என்று கேட்கிறோம். மறுத்துவிட்டார்கள்! என்று அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொல்கிறார்கள். எங்களால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம், தொலைக்காட்சிகளில் செய்திகள் வருகிறது. தலைமைச் செயலாளர் அவர்களுடைய அறிவிப்பு வருகிறது.
மூத்த வழக்கறிஞர் வில்சன் வழங்கிய வாக்குறுதி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் கேட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதற்குப் பதில் வேறு இடம் ஒதுக்கப்படுகிறது, என்று தலைமைச் செயலாளரின் அறிவிப்பு வெளிவருகிறது. பார்த்ததும் நாங்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளானோம். பேசிக்கொண் டிருக்கிறபோது, மூத்த வழக்கறிஞர் வில்சன் அவர்கள் உள்ளே வருகிறார். அவரிடத்திலே விவாதித்தோம்; நான் நீதிமன்றத்திற்குச் செல்லட்டுமா? என்று கேட்கிறார். முடியுமா? என்று கேட்டோம். இல்லை,நாங்கள் இரவே நீதிபதியைச் சென்று சந்திக்கிறோம் என்று சொன்னார்கள். உடனே சென்றார்கள்.
பிளாஷ் நியுஸ் பார்த்து கழகத்தினர் ஆரவாரம்!
அதற்குப் பிறகு 10.30 மணிக்கு விசா ரணை நடைபெறும் என்று அறிவிக்கப்படுகிறது.அதற்குப் பிறகு, மறுநாள் காலை 8.30மணி அளவில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இங்கு இருக்கக்கூடிய நம்முடைய வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் அவர்கள், விடுதலை அவர்கள், என்.ஆர். இளங்கோ அவர்கள் இன்னும் நம்முடைய கழக வழக்கறிஞர்கள் சிலர் எல்லாம் ஒன்று சேர்ந்து நம்முடைய வில்சன் அவர்களுடைய தீவிர முயற்சியின் காரணமாக 10.30 மணிக்குத் தீர்ப்பு வருகிறது. அண்ணா அவர்களின் சமாதிக்கு அருகிலே தலைவர் கலைஞர் அவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்ற தீர்ப்பு வருகிறது. நாங்கள் தலைவரின் உடலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அழுது கொண்டிருக் கின்றோம். எங்களுக்குக் கூட இந்தச் செய்தி முதலில் வரவில்லை. ஆனால், எதிரிலே இலட்சக்கணக்கிலே திரண்டிருக்கக்கூடிய நம்முடைய தோழர்களிடத்தில் இருந்த செல்போனில் ஃபிளாஸ் நியூஸ் என்கிற அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு அவர்கள் முழங்குகிறார்கள்!
கழக வழக்கறிஞர் அணிக்கே பெருமைகள் அனைத்தும்!
பின்னர், செய்தி கிடைத்தது. அந்தச் செய்தியைக் கேட்டு இவ்வளவு பெரிய சோகச் சூழலிலும் அன்றைக்கு நம் எல்லோருக்கும் ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. உள்ளபடியே, எனக்கு நன்றி சொன்னீர்கள், என்னைப் பாராட்டினீர்கள். என்னைப் பொறுத்தவரையிலே, நான் நம்முடைய வழக்கறிஞர் குழுவிற்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். மீண்டும் சொல்லுகிறேன். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வழக்கறிஞர் அணிக்குத்தான் இந்தப் பெருமை சேரும் – சேரும் – சேரும் என்று நான் இந்த நேரத்திலே சொல்லுகின்றேன்.
அன்று தலைவர் கூறியது!
நினைத்துப் பார்க்கிறேன். ஒருவேளை மறுக்கப்பட்டிருந்தால் என்ன நிலைமை, இந்த இயக்கத்திற்கு எத்தனையோ சோதனைகள் வந்ததுண்டு, அதிலும் குறிப்பாக, ஒருமுறை நம்முடைய கொடிக்கு நம்முடைய உதயசூரியன் சின்னத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்தது. அது நமக்கு உரிமை உண்டா? எனும் வழக்கு. கொடியும் பயன்படுத்தக்கூடாது, கட்சியினுடைய பெயரைப் பயன்படுத்தக்கூடாது, சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு சூழ்நிலை வரக்கூடிய நிலையிலே, தேர்தல் கமிஷனில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணையின் தீர்ப்பு நமக்குச் சாதகமாக வந்தது.
அந்தத் தீர்ப்பு வந்தவுடன் தலைவர் கலைஞர் அவர்கள் எங்களிடத்தில் சொல்லுகிறார். ஒருவேளை தீர்ப்பு மாறாக வந்திருந்தால், நான் அண்ணாவினுடைய சமாதிக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டிருப்பேன், நீங்கள் எல்லாம் வந்து எனக்கு மலர்வளையம் வைத்திருப்பீர்கள் என்று கூறினார். அதைத்தான் நான் எண்ணிப் பார்த்தேன்.
ஒருவேளை நமக்குத் தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்று சொன்னால், அந்தத் தலைவர் கலைஞருக்குப் பக்கத்திலே என்னைப் புதைக்கக்கூடிய சூழ்நிலைதான் நிச்சயமாக உருவாகியிருக்கும் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், அந்த நிலை வரவில்லை.
தலைவர் வழிநின்று கடமையை ஆற்றுவோம்!
தலைவர் கலைஞருடைய எண்ணம், அவர் நடத்திய போராட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. அவர் மறைந்தும் இந்தப் போராட்டத்திலே வெற்றி பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையிலே அவருக்கு, இன்றைக்கு நாமெல்லாம் வணக்கத்தை, நம்முடைய அஞ்சலியை – திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மூலமாக நாம் தெரிவித்துக் கொண்டிருந்தாலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்திற்கு வந்திருக்கக்கூடிய உங்களை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய அத்தனை உறுப்பினர்களையும் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ள விரும்புவது, தலைமைக் கழகத்தின் சார்பில் என்று சொல்வதைவிட நம்முடைய இதயத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய, நம்மை இன்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய சார்பில் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த இயக்கத்தைக் காப்போம், தலைவர் கலைஞர் வழி நின்று நம்முடைய கடமையை ஆற்றுவோம் என்பதுதான்.
தலைவர் கலைஞர் அவர்களை உங்களுடைய உருவிலே நாங்கள் இன்றைக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட தலைவர் கலைஞருடைய எண்ணங்களை அவருடைய செயல்பாடுகளை, அவருடைய நினைவுகளை, அவர் உள்ளத்திலே கொண்டிருந்த அந்த உணர்ச்சிகளை, அந்த உணர்வுகளைக் காப்பற்ற உறுதி எடுப்போம்! உறுதி எடுப்போம்! உறுதி எடுப்போம்