வான்முட்டும் புகழ் கொண்டவர் கலைஞர்!
தி.மு.க செயற்குழுத் தீர்மானம்
தலைவர் கலைஞர் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட, தி.மு.க. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் 14.8.2018 – செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் கூடியது. கூட்டத்தில் முதல் நிகழ்வாக – மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்குக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியரும், கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், கழக முன்னோடிகளும் மலர் தூவி வணங்கினார்கள்.
அதனையடுத்து, அவசரச் செயற்குழுக் கூட்டத்துக்குக் கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தலைமையேற்குமாறு, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. முன்மொழிந்தார். அதனை, கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. வழிமொழிந்தார்.
அதனையடுத்து , ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தின் இதய பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கும் தனிச் சிறப்புத் தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. படிப்பார்’ என, கழகச் செயல் தலைவர் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து. நீண்ட, உருக்கமான தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. படித்தார். அந்தத் தீர்மானம் படித்து முடிக்கப்பட்டதும் – அதனை நிறைவேற்றும் வகையில், அனைவரும் எழுந்து நின்று, சில மணித்துளிகள் அமைதி காத்தனர்.
இரங்கல் தீர்மானம்
தமிழினத்தின் தனிப் பெருந்தலைவர், முத்தமிழ் அறிஞர், பன்முக ஆற்றல் களஞ்சியம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகள் கண்ட புத்துலக நாயகர், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் 19 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 13 முறையும் தோல்வியே காணாத சட்டமன்ற உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் ஆற்றிய அளப்பரிய பணிகளின் காரணமாக, தொண்டால் பொழுதளந்து பொது வாழ்வில் ஈடுபடுவோர் அனைவரும் பார்த்துப் படித்துப் பயிற்சி பெற்றுப் பின்பற்ற வேண்டிய அரசியல் பண்பாட்டுப் பல்கலைக்கழகமாகத் திகழ்கிறார்;
தமிழகத்திற்கும், இந்தியத் திருநாட்டிற்கும் எண்ணிலா முற்போக்குச் சட்டங்களையும் முன்னோடித் திட்டங்களையும் நிறைவேற்றித் தந்து, அரசு நிர்வாக வரலாற்றில் நிலைத்த புகழைப் பெற்றிருக்கிறார்; அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் வளமும், நலமும் ஏற்படுத்தும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி யிருக்கிறார். பொதுப் போக்குவரத்து நாட்டுடைமை, இலவச நிலம் – குடியிருப்பு மனைப்பட்டா உள்ளிட்ட நிலச் சீர்திருத்தம், கல்வி – வேலைவாய்ப்பு – தொழில் வளர்ச்சி – அடிப்படைக் கட்டமைப்பு – விவசாயிகளின் நலனுக்காக முதன் முதலில் சட்டமன்றத்தில் நங்கவரம் பிரச்சினை பற்றிய கன்னிப் பேச்சு தொடங்கி முதலமைச்சர் பொறுப்பிலிருந்து அவர் விவசாயிகள் – வேளாண்மை முன்னேற்றத் திற்குக் கையெழுத்திட்ட மகத்தான திட்டங்கள் வரையிலான தலைவர் கலைஞர் அவர்களின் பிரமிப்பூட்டும் சாதனைப் பட்டியலை எடுத்துரைப் பதற்கு ஏடுகள் போதாது.
கைரிக்சா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் அமைத்தது உள்ளிட்டவையும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், விவசாயிகளுக்குக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, கடைக்கோடி கிராமம் வரை மின் இணைப்புகள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு தன்னிறைவுத் திட்டங்களும், ஊராட்சிகள் தோறும் நூலகங்கள், சென்னையில் உலகத் தலைவர்கள் பார்த்து வியந்த சர்வதேசத் தரத்திலான ஆசியாவின் மிகப்பெரிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் எனத் தலைவர் கலைஞர் அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் கிராமங்களின் நீடித்த – நிலைத்த வளர்ச்சிக்கும் (Sustainable Growth), நகரங்களின் முழுமையான கட்டமைப்பு வசதிகளுக்கும் (All-round Growth) பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்.
தமிழகத்தில் முதன்முதலில், சட்ட நாதன் கமிஷன் அமைத்துச் சமூகநீதிக்கு அசைக்க முடியாத அடித்தளம் ஏற்படுத்தி, தொடர்ந்து காலந்தோறும் உரிய பலன்கள் கிடைக்கச் செய்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். கல்வி – வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியின மக்களுக்கான இடஒதுக்கீடு களை அளித்து, அவர்தம் சமூக – பொருளாதார முன்னேற்றத்திற்காக இறுதிமூச்சு வரை அயராது பாடுபட்ட சமூகநீதிப் போராளி தலைவர் கலைஞர் அவர்கள்.