பாரத ரத்னா விருது தருவதே உண்மையான அஞ்சலி
நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா
மறைந்த தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திருச்சி சிவா நேற்று வலியுறுத்தினார். இதற்கு மற்ற கட்சி உறுப்பினர்களும் மேசைகளைத் தட்டி வரவேற்று ஆதரவளித்தனர். இது குறித்து மாநிலங்களவையில் திருச்சி சிவா பேசியதாவது:
இந்நாட்டின் உயர்ந்த அரசியல் தலைவரும், மாபெரும் திராவிடத் தலைவருமான கலைஞர் அவர்கள் தம் 95 வயதில் காலமாகி உள்ளார். இதில், அவர் தம் 80 வருட காலத்தைப் பொதுவாழ்க்கைக்காக அர்ப்பணித்துள்ளார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடினார்.
ஐம்பது வருட காலங்கள் எந்தத் தடையும் இன்றி ஓர் அரசியல் கட்சியின்
தலைவராக இருந்தார். அவரது நீண்ட சாதனைப் பட்டி யல் அவரது கிரீடத்தின் தோகை களாக மிளிர்கின்றன. அவர் ஓர் ஆற்றல் மிகுந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர்,
நாவலாசிரியர், சிறுகதை ஆசிரியர், தத்துவஞானி, கொடை அளிப்பவர், நாடகக் கலைஞர் மற்றும் நடிகராகவும் இருந்தவர்.
80 திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியுள்ளார். அனைத்துத் துறைகளிலும் ஈடுஇணையற்ற சாதனையாளர். அவர் வார்த்தைகளால் விவரிக்க முடியாத சாதனைகள் படைத்தவர். சமூகப் போராளியான அவர் தம் இறுதி நாட்கள் வரை சமூகநீதி, மத நல்லிணக்கம், மாநில சுயாட்சி மற்றும் சுயமரியாதை ஆகியவற்றுக்காகப் போராடியவர்.
ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்தவர். அவர் இயற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டங்கள் என்றும் அவரை நினைவு கூர்பவை. குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு, விதவைகள் மறு வாழ்வு, குடிசை மாற்று வாரியம் மற்றும் அங்கீகரிக்கப்படாத பலருக்கான வாரியங்கள் போன்ற புரட்சிகரமான சீர்திருத்தங்கள் மேற்கொண்டார்.
சமூகத்தில் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டுவந்த திருநங்கைகளை மதிப்புமிக்க புதிய பெயருடன் அழைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கும் அதைச் செய்தார்.
இவை எல்லாம் மிகைப்படுத்திக் கூறப்படுபவை அல்ல. மாறாக, அனைத்தும் வரலாறு. தம் கொள்கைகளுக்காக எதையும் விட்டுக் கொடுக்காதவர். அதே சமயத்தில் மனித உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர்.
எனவே, அவருக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருதினை அளித்துக் கவுரவப் படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இது, நாட்டிற்குத் தொண்டாற்றிய அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.