அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகழாரம்!
காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி தலைவர் கலைஞருக்கு இரங்கல் தெரி விக்கப்பட்டது. அதற்கான இரங்கல் தீர்மானத்தை இல்லினாய்ஸ் மாநிலப் பிரதிநிதியான டேனி கே. டேவிஸ் வாசித்தார்.
அந்த இரங்கல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது :-
1924, ஜூன் 3ஆம் தேதி பிறந்து 2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி மறைந்த புகழ்பெற்ற மனிதரான முத்துவேல் கருணாநிதி பற்றித் தமிழ் அமெரிக்க வாக்காளர்கள் சிலர், என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
முத்துவேல் கருணாநிதி தமது 14ஆம் வயதிலேயே சமூக நீதிப் பிரச்சினைகளில் ஈடுபட்டவர். கையால் எழுதிய பத்திரிகை ஒன்றை வெளியிட்டு அதன்பின் அதையே வார
இதழாகவும் வெளியிட்டு வந்தவர். அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்ட 92வது வயது வரை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.
முத்துவேல் கருணாநிதி தமிழ் மொழியில் ஒரு கவிஞராக, எழுத்தாளராக, பதிப்பாளராக, சொற்பொழிவாளராக, நாவல் எழுத்தாளராக மற்றும் இலக்கிய விமர்சகராகத் திகழ்ந்தார். அவருடைய புத்தகங்கள் பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாயின.
அவருடைய திரைப்படங்களின் திரைக்கதை வசனங்கள், அரசியல் வாய்ப்புகளுக்கான பழைய எல்லைகளை உடைத்து, மனித உறவுகளின் புதிய பார்வையைத் தெளிவாக வெளிப்படுத்தியது
அரசியல் பொறுப்புகளுக்காக அவர் 13 முறை தேர்தலில் போட்டியிட்டார்.
70 ஆண்டுகளில் அவர் போட்டியிட்ட எந்தத் தேர்தலிலும் ஒரு முறைகூட தோற்றதில்லை. அவர் தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்துமுறை பதவி வகித்தார். அவருடைய பணி வாழ்நாள் முழுவதும் சாதிமுறையில் ஏற்படும் தடைகளை உடைப்பதிலேயே உறுதி கொண்டிருந்தது.
அதிலும் சிறப்பாக மனிதக் கழிவைக் கையாளும் தாழ்நிலையில் இருந்த மக்களுக்காகப் போராடினார். அவர்களை மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறச் செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களும் மருந்துகளைக் கையாளும் நிலையை ஏற்கச் செய்தார். அவர் 1972ஆம் ஆண்டு சிகாகோ நகருக்கு வருகை தந்தார்.
முத்துவேல் கருணாநிதி சமூக ஏணியின் தாழ்நிலையிலிருந்து தோன்றி, அரசியல் மலைகளின் உயரங்களுக்கு ஏறிச் சென்றவர். ஆனால், அப்போதும் தமது வாழ்க்கை முறையை எளிமையாகவே வைத்துக் கொண்டவர்.
அவருடைய சிந்தனைகளும், செயல்களும் அவருடைய எல்லா மக்களுக்கும் பயன்படும் நிலையில் அவர்களுடைய மிக உயர்ந்த ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப நிலை நிறுத்தப்பட்டிருந்தன.
இவ்வாறு டோனி கே.டேவிஸ் தமது இரங்கல் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.