கருத்துரிமை காத்தவர் கலைஞர் பத்திரிக்கையாளர்கள் புகழ் வணக்கம்
திரு.ராம் இந்து
அரசியலிலும், பொது வாழ்விலும் கலைஞர் சாதித்ததை, எட்டிப் பிடித்தவர்கள் இந்தியாவிலோ உலகத்திலோ யாராவது இருப்பார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் மிகமிக ஒரு சிலர் மட்டுமே இருப்பர். அதற்குக் காரணம் அவரது சலியாத உழைப்பு. பல்வேறு துறைகளைத் தொட்டவர். தொட்ட துறைகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர்.
எனக்குக் கலைஞர் அவர்களுடன் 1969 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகம் உண்டு. 70,80 களில் நெருக்கமானோம். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு
மேலாக நன்றாகப் பழகி வந்தோம். அவரை மூத்த நண்பராகக் கருதினேன். ஓர் எழுத்தாளராகக் கருதினேன். அவர் உயர்நிலைப் பள்ளி படிப்பைக் கூட முடிக்கவில்லை என்றாலும் அவரை ஓர் அறிவு ஜீவியாகக் கருதினேன். சிறந்த சிந்தனைகள் கொண்ட மாமனிதராக, நான் அவரைக் கருதினேன். எழுத்தை யோகா மாதிரி கருதியவர். அதை இறுதி வரை கடைப்பிடித்தவர்.
அவர் வெறும் தமிழகப் பிரச்சி னையை மட்டுமல்ல, அகில இந்தியப் பிரச்சினை மட்டுமல்ல, சர்வதேச அரசியல், பன்னாட்டு
விவகாரங்கள், வரலாறு, பொருளாதாரம், சரித்திரம், கலை, என எல்லாவற்றையும் பற்றி எழுதினார். அந்த எழுத்துக்கு உண்மையாக இருந்தார்; உண்மையாக இருப்பார் என்பதற்கு அவசர நிலைப் பிரகடனத்துக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களே சாட்சி.
கலைஞருடைய இதழியல் சிறப்புகள் குறித்துச் சொல்லிக் கொண்டே போகலாம். அவர் இலக்கிய இதழியலைக் கையாண்டார். அது படிப்பதற்குக் கடினமாக இருக்காது, அதே சமயம் முக்கியமான விஷயங்களை அதிலே குறிப்பிட்டிருப்பார்.இன்னும் சொல்லப்போனால் அவர் கையாளுகிற விதம் வாசகர்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். அப்படி இருக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார். எனவே, கலைஞருடைய இலக்கிய இதழியல் குறித்துச் சுதந்திரமாக ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளும் போது அவரது எழுத்து நடை, மையக் கருத்து, இதழியலுக்கான கடின உழைப்பு, தாக்கம், நெடுநாள் அயராப்பணி ஆகியவற்றையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
திரு.நக்கீரன் கோபால்
மாநில உரிமைக்காகப் போராடி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கான உரிமையை வாங்கிக் கொடுத்தவர் கலைஞர். இந்தப் பெருமை கலைஞருக்குத்தான் சேரும். நான் இந்த மேடையில் நிற்பது, நீங்கள் இங்கே அமர்ந்திருப்பது எல்லாவற்றிற்கும் காரணம் கலைஞர்தான். அவர் போட்ட ரோட்டில்தான் நாங்கள் போகிறோம் என அடிக்கடிச் சொல்லுவேன்.
கருத்துரிமையில் அவர் மட்டுமே வெற்றி பெற்று, அவர் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் கருத்துரிமையைப் பங்கிட்டுக் கொடுத்தவர் கலைஞர்தான். அதில் கொஞ்சம் நாங்கள் கூடவே எடுத்திருக்கிறோம்.
மிசாவில் இந்திராகாந்தியை ஹிட்லராக இருப்பதுபோல் ஐடியா கொடுத்து, செல்லம் ஓவியர் வரைகிறார். அவர்தான் ரோடு போட்டுவிட்டாரே என்று 1991ல் நாங்கள் ஜெயலலிதாவை ஹிட்லர் போன்று வரைந்து வெளியிட்டோம். நக்கீரன் இதழ் கட்டுகளை எடுத்து விட்டார்கள், எரிக்கிறார்கள், ஏஜெண்டுகளைத் தாக்குகிறார்கள், எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
கலைஞர் போனில் பேசினார். ‘என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்றேன். ‘வாங்க’ என்றார். ‘இங்க பிரிண்டிங் பண்ணிக் கொள்ளுங்கள்’ என்றார். அன்றைக்கு மட்டும் எனக்கு அவர் அந்த உதவியைச் செய்யவில்லை என்றால், நான் மீண்டும் அருப்புக்கோட்டை அரிசிக்கடைக்குப் போயிருப்பேன். ஓர் அட்டைப்படக் கட்டுரைக்காக ஓர் அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்ததோடு அல்லாமல், எங்களுக்கு இடம் கொடுத்துப் புத்தகம் அடிச்சிக்கச் சொன்னதும் அவர்கள்தான்.
அதன் பிறகு என்னைக் கைது செய்ய போலீஸ் திட்டமிட்டது. நான்கு நாள் விடுமுறை என்பதால் கைது செய்து தாக்கலாம் என்று திட்டமிடுவதாகத் தெரிந்தது. அங்கிருந்து தப்பியபோது, எங்கள் அலுவலத்தில் இருந்த கணேசன் அய்யாவைக் கைது செய்தனர். கைது செய்த பத்து நாளில் வெளியே வந்தார். வெளியே வந்த அவர் இறந்துவிட்டார். அப்போது கலைஞர் தலைமையில்தான் அவரோட படத்தைத் திறந்தோம். கருத்துரிமையைக் காப்பாற்றுவதற்காக அந்தக் கூட்டம் நடந்தது. அது இன்னும் நினைவிலேயே இருக்கிறது.
திரு.பகவான் சிங் டெகான் கிரோனிக்கல்
40 ஆண்டு காலம் தமிழ் நாட்டிலே எனக்கு ஒரு வாழ்வு கொடுத்தது இந்தப் பத்திரிகைத் தொழில். அதிலே நீண்ட காலம் தலைவர் கலைஞரோடு பழகினேன். அவரைப் பல முறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
கலைஞர் அவர்கள் அடிக்கடிச் சொல்லுவார்கள். நான் முதலில் பத்திரிகையாளன்; பிறகுதான் அரசியல்வாதி என்று கூறுவார். தம்முடைய கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கிருந்தது. அதே நேரத்தில், தாம் வளர வளர, உயர உயர மக்களின் கருத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற பெருந்தன்மை அவருக்கு இருந்தது.
நாங்கள் தமிழகத்தில் ‘டெக்கான் கிரோனிக்கல்’ ஆரம்பிக்கும்போது கலைஞர் முதல்வராக இருந்தார். நாங்கள் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு துறை சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவோம். தி.மு.க. ஆட்சியை ‘டெக்கான் கிரோனிக்கல்’ பலவாறாக விமர்சித்து இருக்கிறது.
இதேபோல் அம்மையார் ஜெயலலிதாவை விமர்சித்திருந்தால் நிலைமை என்னாயிருக்கும்? உடனே வழக்குப் போட்டிருப்பார்கள். நான் ஜெயிலில் இருந்திருப் பேன். அந்த அளவிற்கு, கலைஞர் ஆட்சியில் பத்திரிகைச் சுதந்திரம் இருந்தது. அதே நேரத்தில் பொய்ச் செய்தி வெளியிட முடியாது. பத்திரிகைத் தொழில் மீதான பொறுப்பையும், ஊடகத்தின் மீதான பொறுமையையும் அவரிடம் காண முடிந்தது. கருத்துரிமைக்கு ஓர் அங்கீகாரம், ஒரு மரியாதை அவரிடம் இருந்தது.
யாராவது தவறு சொல்லியிருந்தால் முரசொலியில் அதற்கு விளக்கம் வரும். அல்லது செய்தியாளர் சந்திப்பில் அதற்குப் பதில் சொல்லி விடுவார். சிரித்துக் கொண்டே சொல்லுவார். ஏனென்றால், அவர் முதலில் பத்திரிகையாளர். அப்புறம்தான் அரசியல்வாதி.
திரு.அருண் ராம் டைம்ஸ் ஆப் இந்தியா
கண்ணகியை வாழ்வுரிமைக்காகப் போராடிய பெண்போராளியாகச் சிலை வடித்தவர் கலைஞர். விரிந்த கூந்தலோடும், கையில் ஒற்றைச் சிலம்போடும் அரசனையே எதிர்த்துக் கேள்வி கேட்டவளாகச் சித்தரித்தார். அந்தச் சிலையைக் காணும் போதெல்லாம் எனக்கு இளங்கோவடிகளோடு கலைஞரும் நினைவுக்கு வருகிறார்.அப்படித்தான் அவசரநிலை காலத்தில் கருத்துரிமையைக் காத்தார் கலைஞர். அவரால் சுதந்திரமாக எழுத முடியவில்லை, பேசமுடிய வில்லை. அவரது கைகளும் உதடுகளும் கட்டப்பட்டிருந்தன. ஆனாலும் தைரியமாக நிலைமையை எதிர்கொண்டார்.
தீக்கதிரில் எழுதப்படும் விமர்சனங் களுக்குப் பதிலும் எழுதுவார், நல்ல கோரிக்கை களுக்கு உரிய நடவடிக்கையும் எடுப்பார். கோவையில் தீண்டாமைச் சுவர் இருக்கிறது என்று அது எழுதியிருந்தது. அதை உடனடியாக அகற்றுமாறு அந்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு போட்டார் முதல்வர் கலைஞர்.தமது கொள்கையை விட்டுக் கொடுக்காமலேயே பிறரின் கருத்துரிமையை மதித்தவர் கலைஞர்.
திரு.சமஸ் தி இந்து தமிழ் நாளிதழ்
இந்தியாவில் பல தலைவர்கள் பத்திரிகையை நடத்தி வந்தார்கள்; எழுதி வந்தார்கள் கடைசிக் காலம் வரைக்கும் விடாமல் எழுதி வந்தார். நான் ஒரு முறை கேட்டேன் நீங்கள் எழுதிகிட்டே இருப்பது பிரச்சனை அல்ல; ஆனால் இயந்திர கதியில் எழுதுவது பிரச்சனை இல்லையா? என்று கேட்டேன்.
சுயசரிதை, திரைக்கதை வசனம், நிதிநிலை அறிக்கையை எழுதுவதற்கு மூடும், தனிமையும் தேவைப்படும்; ஆனால், என்னுடைய தொண்டர்களுக்கு எழுதும் கடிதங்களுக்கு மூடு தேடியதே கிடையாது. அது என் மீது சுமத்தப்பட்ட பணி. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான தொண்டர்கள் காலையில்
முரசொலியை வாங்கும்போது நான் என்ன எழுதி இருக்கிறேன் என்றுதான் பிரிப்பார்கள். என் வாழ்நாள் முழுவதும் என் மீது உருவாக்கப்படும் கட்டுக்கதைகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தேன் என்றார்.
அவரை மூத்த பத்திரிகையாளர் என்று மட்டும் சொல்லமாட்டேன்; ஆசிரியர் என்றும் சொல்வேன்; தமது காலம் முழுக்க தமது தொண்டனுக்கு எப்படியாவது ஒரு விஷயத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்று தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருந்தவர். அவர்களைத் தொடர்ந்து கற்பித்துக்கொண்டு இருந்தவர். தாம் எழுதின், வாசிப்பின், புத்தகத்தின் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தியதால் வாசிப்பின் மீது சாமானியக் கூட்டத்தின் மீது பெரும் காதலை உண்டாக்கியவர்.
திரு.குணசேகரன் நியூஸ் 18 தொலைக்காட்சி
எங்கோ ஒரு மூலையில், எளிய குடியில், ஏது மற்றவர்களின் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள், தமிழ் நாட்டின் முக்கிய ஊடகங்களில் முதன்மைப் பொறுப்பில் அமர்வதற்கு அடித்தளம் அமைத்து, காரணமாக இருந்த இயக்கத்தின் தளகர்த்தராகக் கலைஞர் அவர்களைப் பார்க்கிறேன். அந்த வகையில் என்னைப் போன்றவர்கள், தொலைக் காட்சி ஊடகத்தின் முக்கியப் பொறுப்பில் அமரவும், இந்த மேடையில் அமரவும் காரணமான திராவிட இயக்கத் தலைவர்களுக்கு, தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கு எனது நன்றி அஞ்சலியை இங்குத் தெரிவிப்பதை எனது கடமையாகக் கருதுகிறேன்.
தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற முழக்கத்தை முன்வைத்து இயங்கும், திராவிட முன்னேற்றக் கழகம், ‘‘இந்து – இந்தி – இந்தியா” என்று இயங்கும் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேரலாமா என்று, 1999-இல் கடும் விமர்சனம் ஒன்றை முன்வைத்து, ‘‘மாறன் எழுதும் இரண்டாவது அத்தியாயம் இதுதானா?” என்ற கட்டுரையை ‘‘தினமணி’’ நாளிதழில் எழுதி இருந்தேன். கருத்துக்குக் கருத்து, எழுத்துக்கு எழுத்து என்ற அளவிலேயே அந்த விமர்சனத்தைக் கலைஞர் எதிர்கொண்டார்.
கூர்மையான அரசியல் விமர்சனங்களை, விவாதங்களை முன்வைத்து அரசியல் அரங்கம் என்ற பெயரில் நான் தினமணியில் எழுதி வந்த கட்டுரைகளை கலைஞர் அவர்கள் விரும்பி வாசித்து வந்தார். இளம் பத்திரிகையாளர்களை அவரைப்போல மதித்து, ஊக்குவித்தவர்கள் இல்லை.ஒரு கேள்வியைக் கேட்பவர், மூத்த நிருபரா, இளம் நிருபரா என்று பாகுபடுத்திப் பார்க்கமாட்டார். இளம் பத்திரிகையாளர்களுடன் உரையாடுவதில் விருப்பம் காட்டுவார்.
ஐந்து முறை முதல்வர், பெருந்தலைவர் களோடு அரசியல் மேற்கொண்ட அனுபவம் இருப்பினும், மனதளவில் அவர் இளமையாகவே இருந்ததால், அவரால் வயது வித்தியாசமின்றிப் பழக, உறவாட முடிந்தது. பத்திரிகை அதிபரா, வெளியீட்டாளரா, ஆசிரியரா என்று தகுதி பார்க்காமல் அவரால் அன்பு செலுத்த முடிந்தது.
திரு.ப.திருமாவேலன் கலைஞர் தொலைக்காட்சி
‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை; தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ!’ என்று பாடினார் பாரதிதாசன். அப்படித்தான் கலைஞருக்கும் மரணமில்லை. வேறொரு வடிவில் வாழ்ந்துகொண்டிருப்பார்.
கலைஞரை, 1944ம் ஆண்டுக்குப் பிறகுதான் திராவிடர் கழகத்தினர் சொந்தம் கொண்டாட முடியும். கலைஞரை 1949ம் ஆண்டுக்குப் பிறகுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சொந்தம் கொண்டாட முடியும். இன்னும் சொன்னால் செயல் தலைவரோ, சகோதரி கனிமொழியோ கலைஞரின் குடும்பத்தினரோ அவரவர் பிறப்புக்குப் பிறகுதான் சொந்தம் கொண்டாட முடியும். ஆனால், இந்த மேடையில் இருக்கும் பத்திரிகையாளர்களாகிய எங்களுக்குத்தான் அவர் முதல் சொந்தம். நாங்கள்தான் அவரை முதலில் சொந்தம் கொண்டாட முடியும்.
திருமணமாவதற்கு முன்பே பள்ளிப் பிராயத்தில் 1938-ம் ஆண்டில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதால் பத்திரிகையாளர் களுக்கே முழு முதல் உரிமையானவர் கலைஞர்.
கலைஞர், கருத்துரிமையின் காவலர் என்பதற்கு நானே சாட்சி. ஜெயலலிதா பற்றி ஒரே ஒரு கட்டுரை எழுதியதற்காக அவர் என் மீது 11 அவதூறு வழக்குகளைப் போட்டார். கலைஞர் குறித்து 16 கட்டுரைகள் எழுதினேன். அவர் ஒரு வழக்குக் கூடப் போடவில்லை. இது ஒன்றே அவர் கருத்துரிமையின் காவலர் என்பதைச் சொல்லும். அந்தக் கட்டுரைகளுக்கு, ‘முரசொலி’ யில் சின்னக்குத்தூசி அய்யா பதில் எழுதுவாரே தவிர, கலைஞர் எழுதியதில்லை. ‘உங்களோட கட்டுரை வந்தால் ஒருநாள் நான் காத்திருப்பேன். தலைவர் பதில் எழுதுகிறாரா என்று. அவர் எழுதவில்லை என்றால் மறுநாள் நான் எழுதுவேன்’ என்று குத்தூசி அய்யா சொன்னார். சின்னக்குத்தூசிக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ‘‘உங்களுக்கு ஏன் சார் அவர் பதில் எழுதவில்லை? உங்கள் இருவருக்கும் ஏதாவது இன்டர் லிங்க் இருக்கிறதா?’ என்று கேட்டார். நான் சிரித்தபடியே பதில் சொன்னேன், ‘ஆமாம், எங்களுக்குள் இன்டர் லிங்க் இருக்கிறது. அதுதான் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன் என்ற இன்டர்லிங்க்’ என்றேன்.
திராவிட இயக்கச் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்ட ஒருவன், உள்நோக்கமற்று, நம்முடைய நன்மைக்காகச் சில விமர்சனங்களைச் செய்யும்போது, அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவம் கொண்ட மனிதராகக் கலைஞர் இருந்தார். அதனால்தான், அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
திரு.ராஜா திருவேங்கடம் சன் நியுஸ் தொலைக்காட்சி
ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் என்பது சாதனை மட்டுமல்ல… சரித்திரமும் கூட. 50 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தாலும் சரி… எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி… தமிழக அரசியல் என்பது கலைஞரை மையமாக வைத்துத்தான் நடந்திருக்கிறது.
கலைஞரைத் தவிர்த்துவிட்டுக் கடந்த 50 ஆண்டு கால தமிழக அரசியல் இல்லை. இனியும் கூட 100 வருடங்கள் ஆனாலும், தமிழ்ச் சமுதாயத்தின் நிகழ்வுகள் எதுவானாலும் அதில் ஏதாவது ஒரு வகையில் கலைஞர் இருப்பார். பத்திரிகையாளர்களைப் பற்றி அதிகம் யோசிப்பவர் கலைஞர். அது பத்திரிகையாளர் சந்திப்பாக இருந்தாலும் சரி… தனிப்பட்ட பேட்டிகளாக இருந்தாலும் சரி… எதுவாக இருந்தாலும்
உடனடியாக ஒப்புக்கொள்ளும் ஒரே தலைவராக இருந்தவர் கலைஞர்தான். கட்சிக்கு அப்பாற்பட்டுச் செய்தி சேகரிக்கும் செய்தியாளரை ஒரே மாதிரியாகப் பார்த்தவர்தான் கலைஞர். பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகிறது என்றால், அதில் எதுவும் தவறு இருந்தால் சம்பந்தப்பட்ட செய்தியை எழுதிய செய்தியாளரைத் தொடர்பு கொண்டு கலைஞரே பேசுவார்.
சிக்கலான எந்தக் கேள்வியாக இருந்தாலும் கலைஞரிடம் கேட்க முடியும். பத்திரிகையாளர்களைவிட ஜனநாயகமானவர் கலைஞர். சில நேரங்களில் முரசொலியில் கட்டம் கட்டிப் பதில் சொல்கிறார் என்று கலைஞரை விமர்சனம் கூடச் செய்வார்கள். ஆனால், கட்டம் கட்டிப் பதில் சொல்வாரே தவிர, ஆட்டோ அனுப்பி ஒருகாலத்திலும் கலைஞர் பதில் சொன்னது கிடையாது. பேனாவுக்குப் பதில் சொல்ல கலைஞர் பயன்படுத்திய ஆயுதம் பேனா மட்டும்தான்.
திரு.முத்துக்குமார் நியூஸ் 7 தொலைக்காட்சி
பத்திரிகையாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இருக்க வேண்டிய பொறுப்புணர்வை, எச்சரிக்கை உணர்வை விளக்கும் வகையில் கலைஞர் உருவாக்கிய ஊடகத் தத்துவம், ‘இன்றைய செய்தி நாளைய வரலாறு.’ நாளைய வரலாறு உண்மையானதாக, நேர்மையானதாக, சரியானதாக, பொய் புரட்டு அற்றதாக, திரிபுகள் அற்றதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் இன்றைக்குச் சேகரிக்கும் செய்தியிலும் கொடுக்கின்ற செய்தியிலும் எவ்வளவு துல்லியம் காட்டவேண்டும் என்பதை உணர்த்த பத்திரிகையாளர்களுக்கும் ஊடக வியலாளர்களுக்கும் கலைஞர் காட்டிய வழிதான் ‘இன்றைய செய்தி நாளைய வரலாறு.’
கருத்துரிமை என்பதைத் தம்முடைய கருத்துகளைச் சொல்வதற்கான உரிமையாக மட்டும் பார்க்காமல், தமக்குப் பக்கத்திலும் எதிரிலும் இருப்பவர்களின் கருத்துகளைச் சொல்வதற்கான உரிமையாகவும் பார்த்தார் கலைஞர். அந்தக் கருத்துரிமைப் போராட்டக் களத்தில் தானும் விளையாடியதோடு, எதிரி களையும் விளையாடவிட்டவர் கலைஞர்.
தம்மை நோக்கி வீசப்பட்ட கேள்விகள் பதிலின்றிப் போய்விடக்கூடாது என்பதிலும் சரி, தாம் எழுப்பிய கேள்விகள் பதிலற்றுப் போய்விடக்கூடாது என்பதிலும் சரி, கலைஞர் காட்டிய கவனம் அசாத்தியமானது. அதுதான் கலைஞர் என்ற கருத்துரிமைப் போராளியின் அடையாளம்!